அப்படியென்று நாங்கள் ஒருபொழுதும் கூறவில்லையே. இப்பொழுது எப்படி இங்கு வருகின்றவர்களுக்கு நாங்கள் ஜீவ அருள் ஓலையிலே தோன்றி ஆலோசனைகள் கூறுகிறோமோ, நாங்களே ஆலோசனைகள் கூறுவதால், இங்கு வருகின்றவன் உயர்ந்த வழியில் சென்று விடுகிறானா என்ன ? அல்லது அதுவரை செய்த பாவத்தையெல்லாம் நிறுத்திவிட்டு “ மகாமுனிவர்களெல்லாம் இப்படி கூறுகிறார்கள். இந்த வழியில்தான் செல்லவேண்டும் “ என்று தீர்மானிக்கிறானா ? இந்த இடத்தில் கேட்கும்பொழுது பவ்யமாக கேட்டுவிட்டு பிறகு “ இவையெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராது. நடைமுறை வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென்றால் சக மனிதர்கள் எதையெல்லாம் பின்பற்றுகிறார்களோ அதைதான் பின்பற்றவேண்டும் “ என்றுதானே இங்கு வருகின்ற, இங்கு சில ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கின்ற அனைவருமே அப்படிதானே வாழ்கிறார்கள். அப்படித்தான், கருவூரார் எதைக் கூறினாலும், எது, தனக்கு சாதகமோ, தன்னால் இயலுமோ அதை ஏற்றுக்கொள்வதும், எது, மற்ற மன்னர்கள் பின்பற்றினார்களோ, அதை பின்பற்றிதான் அந்த மன்னனும் வாழ்ந்தான். எனவே கருவூரார் என்ன ? முக்கண்ணனாகிய சிவபெருமானே நேரில் தோன்றி அறிவுரை கூறினாலும் அப்பொழுது பவ்யமாக கேட்டுவிட்டு, சிவபெருமான் அந்த இடத்தைவிட்டு சென்ற பிறகு மீண்டும் வழக்கம்போல்தான் மனிதன் வாழ்வான். ஏனென்றால் அவன் மதி விதியிடம் இருக்கிறது. எவன் விதி, அவன் மதியிடம் அடங்கியிருக்கிறதோ, அவன்தான் எமது சொல்லை ஏற்பான்.
அஞ்ஞான அழுக்கு ஒரு மனிதனை விட்டு செல்லவேண்டுமென்றால் அதற்கேற்ற மனப்போராட்டங்களும், மனத்தாக்கங்களும் இருந்துகொண்டேயிருக்கும். மனிதன் எதிர்பார்க்கின்ற சுகமான வாழ்வு சம்பவங்களால் மட்டும் ஒரு மனிதனின் அறியாமை அஞ்ஞானம் அகன்று ஞானம் வந்துவிடாது. எனவே மனோரீதியாக நீ என்றும் திடமாக இரு.
திங்கள், 31 ஜூலை, 2017
அகத்தியப் பெருமானின் ஜீவ வாக்கு - இராஜராஜசோழன் கருவூராரின் நேரடி பார்வையிலே இருந்தார். அப்படியென்றால் அவர் புரிந்த போர்களை நீங்கள் சொன்ன அடிப்படையில் எப்படி புரிந்துகொள்வது ?
அப்படியென்று நாங்கள் ஒருபொழுதும் கூறவில்லையே. இப்பொழுது எப்படி இங்கு வருகின்றவர்களுக்கு நாங்கள் ஜீவ அருள் ஓலையிலே தோன்றி ஆலோசனைகள் கூறுகிறோமோ, நாங்களே ஆலோசனைகள் கூறுவதால், இங்கு வருகின்றவன் உயர்ந்த வழியில் சென்று விடுகிறானா என்ன ? அல்லது அதுவரை செய்த பாவத்தையெல்லாம் நிறுத்திவிட்டு “ மகாமுனிவர்களெல்லாம் இப்படி கூறுகிறார்கள். இந்த வழியில்தான் செல்லவேண்டும் “ என்று தீர்மானிக்கிறானா ? இந்த இடத்தில் கேட்கும்பொழுது பவ்யமாக கேட்டுவிட்டு பிறகு “ இவையெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராது. நடைமுறை வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென்றால் சக மனிதர்கள் எதையெல்லாம் பின்பற்றுகிறார்களோ அதைதான் பின்பற்றவேண்டும் “ என்றுதானே இங்கு வருகின்ற, இங்கு சில ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கின்ற அனைவருமே அப்படிதானே வாழ்கிறார்கள். அப்படித்தான், கருவூரார் எதைக் கூறினாலும், எது, தனக்கு சாதகமோ, தன்னால் இயலுமோ அதை ஏற்றுக்கொள்வதும், எது, மற்ற மன்னர்கள் பின்பற்றினார்களோ, அதை பின்பற்றிதான் அந்த மன்னனும் வாழ்ந்தான். எனவே கருவூரார் என்ன ? முக்கண்ணனாகிய சிவபெருமானே நேரில் தோன்றி அறிவுரை கூறினாலும் அப்பொழுது பவ்யமாக கேட்டுவிட்டு, சிவபெருமான் அந்த இடத்தைவிட்டு சென்ற பிறகு மீண்டும் வழக்கம்போல்தான் மனிதன் வாழ்வான். ஏனென்றால் அவன் மதி விதியிடம் இருக்கிறது. எவன் விதி, அவன் மதியிடம் அடங்கியிருக்கிறதோ, அவன்தான் எமது சொல்லை ஏற்பான்.
அகத்தியப் பெருமானின் ஜீவ வாக்கு - யுத்தம் என்றால் என்ன ?
யுத்தம் என்றால் என்ன ? ஒரு மனிதனை அவனுடைய மன எண்ணங்கள் தாறுமாறாக அழைத்து செல்கிறது. பஞ்ச புலன்களும் மனதிற்கு கட்டுப்படாமல் விருப்பம்போல் அலைகிறது. ஒரு மனிதன் யுத்தம் செய்ய வேண்டும் என்று கருதினால் முதலில் தன்னுடன்தான் யுத்தம் செய்ய வேண்டும். தன்னைத்தான் யுத்தம் செய்து எவன் வெல்கிறானோ அவனுக்குதான் பிறரை வெல்லக்கூடிய யோக்யதை வருகிறது. தன்னையே வெல்ல முடியாத ஒருவன் எப்படி பிறரை வெல்ல முடியும் ? எனவே மனிதர்கள் செய்கின்ற போர் அல்லது யுத்தம் என்பதெல்லாம் எம்போன்ற ஞானிகளால் ஏற்கப்படக்கூடிய நிலையில் என்றுமே இல்லை. ஆனால் விதி அப்படிதான் நடக்க வேண்டும் என்றால் அது நடந்துவிட்டுப் போகட்டும் என்று நாங்கள் பார்வையாளராக பார்த்துக் கொண்டிருப்போம்.
அதே சமயம் பகவான் கிருஷ்ண பரமாத்மா யுத்தம் என்று கூறும்பொழுது இந்த யுத்த தர்மத்தை அப்படி வகுத்ததின் காரணம், ‘ யுத்தமே செய்யக்கூடாது. செய்யக்கூடிய நிலை வந்தால் எதற்காக செய்ய வேண்டும் ? எப்படி செய்ய வேண்டும் ? அந்த யுத்தத்தில் யார், யார் என்ன விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் ? ‘ என்றெல்லாம் அவர் போதித்தது உண்மை. ஆனால் யுத்தமே வேண்டாம் என்ற நிலையிலே இதுபோன்ற விதிமுறைகளே தேவையில்லை. அடுத்ததாக, யுத்தமே வேண்டாம் என்று கிருஷ்ண பரமாத்மா கூறினாலும் ஆதியிலிருந்தே கூறி வந்திருக்கிறார். அதை யாரும் கேட்பதாக இல்லை. முதலில் பாண்டவர்களே கேட்பதாக இல்லை. எனவே விதி வழி மதி செல்கிறது. அதை இறைவனாலும் தடுக்க முடியாது என்பதுபோல் அங்கே கிருஷ்ண பரமாத்மாவும் எம்போல் பார்வையாளராகத்தான் இருந்திருக்கிறார்.
அடுத்ததாக தர்மத்திற்காக யுத்தம் செய்தால், யுத்தமே வேண்டாம், வேண்டாம் என்று ஒதுங்குகின்ற மனிதனிடம் தேவையில்லாமல் யுத்தம் திணிக்கப்பட்டு வேறு வழியில்லாமல் அதை கர்மயோகமாக ஏற்று அவன் யுத்தம் செய்யும் பட்சத்தில் உடலைவிட நேர்ந்தால் அவன் சொர்க்கம் செல்வான் என்பது வெறும் அந்த யுத்த நிகழ்வைப் பொருத்தல்ல. அதற்கு முன்பு அவன் வாழ்ந்த வாழ்க்கையின் அடிப்படையையும் சேர்த்துதான். வெறும் யுத்தத்தில் ஒருவன் வீரமரணம் அடைந்தால் வீர சொர்க்கம் அடைவான் என்பதெல்லாம் எதற்காக கூறப்பட்டது தெரியுமா ? இல்லையென்றால், போர் என்றால் யாராவது துணிந்து வருவார்களா ? ‘ தர்மம் செய்தால் உன் வாழ்க்கை நன்றாக இருக்குமப்பா. உனக்கு பிணி வராது ‘ என்று கூறுகிறார்களே, அதைப்போல் இந்த போரிலே கலந்து கொண்டால், ‘ இது நேர்மையான யுத்தம். நம் தேசத்தின் மீது எந்த தவறும் இல்லை. நீ நேர்மையாக யுத்தத்தில் ஈடுபடு. புறமுதுகிட்டு ஓடாதே. யார் வந்தாலும் எதிர்த்து நில். அதை மீறி உன் உயிர் போனால் உனக்கு மேலே சொர்க்கம் காத்திருக்கிறது ‘ என்று கூறி யுத்த பயத்தை நீக்குவதற்காக கூறப்பட்ட வாசகங்கள். இவை எங்களால் ஒருபொழுதும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. வாழ்க்கை முழுவதும் எல்லா தவறுகளையும் செய்துவிட்டு யுத்தத்திலே ஒருவன் வீர மரணம் எய்தினால் அவன் தன் நாட்டிற்காக வீரமரணம் எய்தினாலும் அதற்காக அவனுக்கு இறைவன் சொர்க்கமெல்லாம் தரமாட்டார். இதை நன்றாக புரிந்துகொள்.
அப்படியென்றால் துரியோதனனுக்கு வீர் சொர்க்கம் கிடைத்தது என்பது பற்றி :
ஏற்கனவே கூறியிருக்கிறோம். அனைத்தும் நாடக கதாபாத்திரங்கள். அந்தக் கூத்தில் நடப்பதையெல்லாம் நிஜம் என்று எண்ணக்கூடாது.
அகத்தியப் பெருமானின் ஜீவ வாக்கு - வால்மீகி இராமாயணத்தில் இராமர் மான் மாமிசத்தை உண்டார் என்று கூறப்படுவது இடைசெருகலா ?
மான்களை வேட்டையாடவே கூடாது என்று மிக, மிக சராசரியான மன்னனே அக்காலத்திலெல்லாம் சட்டம் இயற்றியிருந்தான் தெரியுமா ? மான்கள், முயல், இன்னும் சாதுக்களான விலங்குகளை யாரும், எக்காலத்திலும் வேட்டையாடுதல் கூடாது. இன்னும் கூறப்போனால் முறையான பக்குவம் பெற்ற மன்னர்கள், பொழுதுபோக்கிற்கு என்று வேட்டையாட செல்ல மாட்டார்கள். என்றாவது கொடிய விலங்குகள் மக்களை இடர்படுத்தினால் மட்டும் அதிலும் முதலில் உயிரோடு பிடிக்கதான் ஆணையிடுவார்கள். முடியாத நிலையில்தான் கொல்வார்கள். ஒரு சராசரி மன்னனே இப்படி செயல்படும்பொழுது மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று கூறப்படுகின்ற ஸ்ரீ இராமபிரான் இவ்வாறெல்லாம் செய்திருப்பாரா ? கட்டாயம் செய்திருக்க மாட்டார். அப்படி, விலங்குகளைக் கொன்று தின்னக்கூடிய நிலையில் ஒரு கதாபாத்திரம் கற்பனையாகக்கூட ஒரு ஞானியினால் படைக்கப்படாது. ஒருவேளை அது உண்மை என்றால் அப்பேற்பட்ட ஸ்ரீ இராமர் தெய்வமாக என்றும் போற்றப்படுவாரா ? யோசித்துப் பார்க்க வேண்டும். என்ன காரணம் ? பின்னால் மனிதனுக்கு வசதியாக இருக்க வேண்டும். “ இராமரே இவற்றையெல்லாம் உண்டிருக்கிறார். நான் உண்டால் என்ன ? “ என்று பேசுவதற்கு ஒரு காரணம் வேண்டுமல்லவா ? பலம் என்பது உடலில் இல்லை. மனதில் இருக்கிறது. சுவாசத்தை எவனொருவன் சரியாக கட்டுப்படுத்தி சிறு வயதிலிருந்து முறையான பிராணாயாமத்தை கடைபிடிக்கிறானோ அவனுக்கு 72,000 நாடி, நரம்புகள் பலம் பெறும். திடம் பெறும். அவனுடைய சுவாசம் தேவையற்ற அளவிலே வெளியேறாது. நன்றாக புரிந்துகொள்.
எவனொருவன் வாய் வழியாக சுவாசம் விடுகிறானோ அவனுக்கு தேகத்தில் அத்தனை வியாதிகளும் வரும்.
அகத்தியப் பெருமானின் ஜீவ வாக்கு - 5
எப்பொழுதுமே புராண கதைகளை நேருக்கு நேர் பொருள் கொள்ளுதல் கூடாது. சூரிய பகவான், ஆத்மகாரகன் என்று ஜாதகத்திலே கூறப்படுகின்ற ஒரு கிரகம். அதே சமயம் ஆத்மம் எனப்படும் ஞானத்தையும், தெய்வீக விஷயத்தையும் கூட அது மறைமுகமாக குறிப்பதாகக் கொள்ளலாம். இந்த இடத்திலே மனம் ஓரிடத்தில் அடங்கினால்தான் எதையும் கற்க இயலும். அதே சமயம் மெய்ஞானம், ஆன்மீகம் போன்ற விஷயங்கள் எல்லாம் உலகியல் விஷயங்கள் போல உடனடியான நன்மைகளையும், சுகத்தையும் மனிதனுக்கு வெளிப்படையாக புரிவதுபோல் தராததால், அதை ஆர்வம் கொண்டு கற்க ஒரு மனிதன் முயன்றாலும் அவன் மனம் ஓரிடத்தில் அடங்காததால் அங்கும், இங்கும் அலையும் அல்லது அந்த ஆன்மீக விஷயங்கள் அவனை அலைக்கழிக்கும். அந்த அலைக்கழிக்கின்ற விஷயங்களுக்கு இடையே, அலைகள் மேலே ஏறி, கீழே விழுந்து என்னதான் நாவாயை தூக்கிவிட்டாலும் அந்த நாவாயானது திடமாக ஆழியில் செல்வதுபோல ஒரு ஆத்மஞான தத்துவத்தையும், மெய்யான வேதங்களையும் கற்கவேண்டுமென்றால் பல்வேறுவிதமான நிலைக்கு தன்னை ஒரு மனிதன் ஆட்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த வழியில் சிந்தித்துப் பார்த்தால் குருவானவர் எஃதாவது கற்றுக்கொடுக்க வேண்டுமென்றால், அந்த விஷயம் பின்னர். ஆனால் கற்றுக்கொள்வதற்கு உண்டான தளத்தை அவர் முதலில் எதிர்பார்ப்பார். முற்காலத்தில் குருவானவர் வேதங்கள் கற்க வருகின்ற மாணாக்கனிடம் விதவிதமான சோதனைகளையெல்லாம் தந்து அவற்றில் அவன் தேர்ந்த பிறகுதான் வேதம் கற்றுக்கொள்ளவோ அல்லது அவன் எந்த வித்தைக்காக வந்தானோ அந்த வித்தையை போதிக்க அனுமதிப்பார். அப்படியொரு சோதனைதான் ஒரு மாணாக்கனை அலைக்கழித்தல் என்பது. அப்படி அலைந்து, திரிந்து, சோர்ந்து போகாமல் எந்த நிலையிலும் விடாப்பிடியாக “ நான் வேதங்களை, வேத சூத்திரங்களை, அந்த நுட்பமான விஷயங்களை கற்றுக்கொண்டே தீருவேன் “ என்றால் “ நீ இங்கு வா, நீ அங்கு வா, நீ இந்த சூழலில் இன்று வராதே, நீ நாளை வா “ என்று கூறும்பொழுது அந்த அலைக்கழித்தலிலே மனம் சோர்ந்து போகாமல் மேலும், மேலும் ஆர்வம் அதிகரிக்கிறதா ? என்று பார்த்து கற்றுக்கொடுப்பார். அப்படியொரு சோதனைதான் “ நான் ஓடிக்கொண்டே இருப்பேன். என் பின்னால் என் வேகத்திற்கு ஈடுகொடுத்து நீ வருவாயா ? என்று ஒரு பொருள். அதற்காக இந்த சூரியன் சுற்றிக்கொண்டே இருக்கிறது. அந்த சூரியன் பின்னால் வா என்று நேருக்கு நேர் பொருள் கொள்ளுதல் கூடாது. அப்படிப் பார்த்தாலும் சூரியன் இருக்கும் இடத்தில்தானே இருக்கிறது. பூமிதானே சுற்றுகிறது என்று மனித விஞ்ஞானம் கூறுகிறது. எனவே இதை நேருக்கு நேர் பொருள் கொள்ளுதல் ஏற்புடையது அல்ல.
இறைவன் அருளால் நீ கூறுவதை உண்மை என்று வைத்துக்கொண்டு பார்ப்போம். விதிக்கப்பட்டது அல்லது விலக்கப்பட்டது என்று பார்க்கும்பொழுதே ஒருவன் உடல் பலம் எதற்கு பெறவேண்டும் ? பிறரோடு போரிட வேண்டும் என்றால் உடல் பலம் வேண்டும். பிறரோடு போரிடுவதையே முட்டாள்தனம் என்று நாங்கள் கூறும்பொழுது போர் என்பது அடிப்படையில் மனிதனுக்கு தேவையில்லாத விஷயம். அடுத்த நிலையிலே, அப்படி ஒருவன் வாழவேண்டும் என்ற குடும்பத்திலோ அல்லது ஒரு சூழலிலே பிறப்பு எடுக்கிறான் என்றாலே என்ன பொருள் ? அந்த பாவத்தை செய்துதான் ஆகவேண்டும் என்கிற ஒரு பிறப்பு எடுக்க வேண்டுமானால் அவன் என்ன பாவத்தை ஏற்கனவே செய்திருப்பான் ? எனவே பாவத்தை செய்யாமல் இருந்தால், தவிர்க்க முடியாமல் பாவத்தை செய்ய வேண்டிய அல்லது ஒரு பாவத்தை செய்துகொண்டே அதற்கு ஒரு நியாயம் கற்பிக்க வேண்டிய நிலைமை ஒரு மனிதனுக்கு வராது. வேதங்களிலோ அல்லது எம்போன்ற மகான்களோ இஃதொப்ப விலங்குகளைக் கொன்று இவர்கள், இவர்கள் உண்ணலாம். இவர்கள், இவர்கள் உண்ணத் தேவையில்லை என்று கூறவில்லை. இவைகள் அனைத்துமே இடைசெருகல்களே. எந்த இடத்திலும் இறைவனோ, ஞானியர்களோ இதுபோன்ற விஷயங்களைக் கூறவில்லை, போதிக்கவில்லை. மனிதன் தன் சுயநலத்திற்கேற்ப இவற்றையெல்லாம் தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டான்.
அகத்தியப் பெருமானின் ஜீவ வாக்கு - சில தேவாலயங்களில் இறந்தவர்களை புதைத்து வைக்கு வழக்கம் இருக்கிறது.
பொதுவாக இதுபோன்ற விஷயங்களை நாங்கள் ஆதரிப்பதில்லை. போதிக்கவுமில்லை. இவையெல்லாம் தவறான வழிகாட்டுதலால் ஏற்பட்ட விஷயம். இவைகளை குறைத்துக் கொள்வது மனித சமுதாத்திற்கும். பூமி வளத்திற்கும் நல்லது. நன்றாக கவனிக்க. இறந்த விலங்குகளை புதைத்தால் பூமிக்கு நன்மை உண்டு. தாவரங்களுக்கு நன்மை உண்டு. மனிதனை அவ்வாறு செய்வதைவிட அக்னிக்கு இரையாக்குவதே நல்ல செயலாகும். இருந்தாலும் மிகப் புனிதனான ஆதமாக்கள் சிலரை வேண்டுமானால் அவ்வாறு செய்யலாம். இருந்தபோதிலும் அக்னி காரியம் என்பதே இந்த இடத்தில் பொருத்தமானதாகும். மற்ற விளக்கங்களை மீண்டும் தக்க காலத்தில் உரைப்போம். ஆசிகள்.
அகத்தியப் பெருமானின் ஜீவ வாக்கு - 4
இறைவனின் கருணையால் மனித ஆண்டு கணக்கு வேறு, தேவ ஆண்டு கணக்கு என்பது வேறு என்பது பலர் அறிந்ததுதான். இஃதொப்ப நிலையிலே முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள் ஆண்டு என்பதும் வேறு, வேறு நிலைதான். 3000 ஆண்டுகள் என்பதை மனிதரீதியாக பார்க்கக்கூடாது. அது தேவ ஆண்டுகளைவிட மிக அதிக கணக்கு. எனவே சூட்சுமமான நிலையில் அன்னவன் ( திருமூலன் ) இயற்றிய தவமாகும். மனித சக்தியால் அதை புரிந்துகொள்வது என்பது மிக கடினம். அதுமட்டுமல்ல. இதுபோன்ற ஞான நிலையை அடைந்த, சித்த நிலையை அடைந்தவர்கள் கூறுகின்ற வாக்கியங்களையும் நேருக்கு நேர் பொருள் கொள்வது என்பது கடினம். பாவங்கள் குறைந்த ஆத்மா வாசித்தால், ஓதினால் அப்பொழுது வருகின்ற பொருளே மெய்ப்பொருளாகும்.
அகத்தியப் பெருமானின் ஜீவ வாக்கு - சத்சங்கத்திற்கு ரிஷிகளின், சித்தர்களின் ஆசீர்வாதம் கிடைத்ததா ?
இறைவன் கருணையால் சப்தரிஷிகளும் அங்குதான் இருந்தார்கள். ஆனால் ( சத்சங்கத்திற்கு ) வந்திருந்தவர்களில் எத்தனைபேர் இதை உணரக்கூடிய நிலையில் இருந்தார்கள் ? ஏதோ கலைக்காட்சிக்கு வருவதுபோலதான் வந்தார்கள். இதை நாங்கள் குற்றம் என்று கூறவில்லை. அவர்களையும் பண்படுத்தி மேலே ஏற்றவேண்டும் என்பதே பொருள். வேறு ஏதும் வேண்டாமப்பா. இறையிடமும், எம்மிடமும் வரும்பொழுது மட்டும் மனிதன் தன் சிந்தனா சக்தியை ஒதுக்கிவிட்டு வந்தால் நாங்கள் அவர்களை மேலே ஏற்றுவதற்கு மிகவும் எளிதாக இருக்கும். ஆனால் ஏமாறும் இடத்திலெல்லாம் அறிவை பயன்படுத்தாத மனிதன், எம்மிடம் வரும்பொழுது மட்டும்தான் ஏன் ? எதற்கு ? எப்படி ? இதை எப்படி ஏற்பது ? இதற்கும், நடைமுறைக்கும் முரணாக இருக்கிறதே ? இப்படியெல்லாம் நடந்தால் உடனடியாக நட்டம் வருகிறதே ? என்றெல்லாம் மிகப்பெரிய வேதாந்திபோல் சிந்திக்கிறான். இல்லையில்லை, அவன் விதி அப்படி அவனை சிந்திக்க வைத்து படுபாதாளத்தில் தள்ளுகிறது.
அகத்தியப் பெருமானின் ஜீவ வாக்கு - அப்படியென்றால் பிரபஞ்சத்தில் அனைவரும் திருந்தி வாழ வழியே இல்லையா ?
அதற்கு வழிகாட்டினால் அதை ஏற்கும் நிலையில் யாரும் இல்லை என்பதே உண்மையிலும் உண்மை.
இறைவன் கருணையால் ஒருவன் இறைவனை பூஜிக்கிறான் அல்லது இறைவனை எஃதாவது அபவாதமாக பேசுகிறான். இறைவன் இருப்பதை ஒத்துகொள்கிறான். ஆனால் ஏதோ ஒரு சினத்திலே இறைவனை அப்படி தூஷிக்கிறான். அதை சராசரி மனிதன் செய்தால் இறைவனோ, மகான்களோ, மற்றவர்களோ அவன் அறியாமையில் இருக்கிறான் என்று பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால் பலகோடி தவங்கள் செய்து, மனிதனைவிட பல மடங்கு உயர்ந்த நிலையில் தேவனாகவோ, யக்ஷனாகவோ இருக்கக்கூடிய ஒருவன் எஃதாவது ஒரு சிறிய வருத்தத்தால் இறைவனை தூஷித்து ஆனால் மற்ற தேவதைகளை மகிழ்விப்பதற்காக யாகங்கள் செய்தால் “ இறைவனை தூஷிக்கிறானே, நாமெல்லாம் யாகத்திற்கு செல்லக்கூடாது “ என்ற சிறிய சிந்தனைகூட யாருக்கும் இராதா ? எதற்காக தக்ஷன் ( செய்த ) யாகத்தில் எல்லோரும் கலந்துகொள்ள வேண்டும் ? விதி. நன்றாக புரிந்துகொள்ளவேண்டும். இறைவனுக்கு அருகில் இருந்தாலும் இறைத்தன்மையை எந்த ஆத்மா பரிபூரணமாக புரிந்து கொள்கிறதோ, அது வெறும் பார்வையாளனாகத்தான் இருக்கும். அது எதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாது. எஃதாவதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென்றால் தாமரை இலை தண்ணீர் போல் தன்னை ஈடுபடுத்திக் கொண்டால், நீ கூறியதுபோல் பாவம் என்பது வராமல் இருக்கும். ஆனால் அதிலேயே மூழ்கிவிட வேண்டிய நிலையில் மனிதனோ, தேவர்களோ, மற்ற தேவதைகளோ ஈடுபடுவதால்தான் இஃதொப்ப நிலை உருவாகிறது.
அகத்தியப் பெருமானின் ஜீவ வாக்கு - ஆதியிலே பாவ வினைகள் எப்படி ஏற்பட்டது ?
பாவம் என்பதே, பரம்பொருள் ஏகனாக இருக்கும்பொழுது சகலமும் பரம் என்ற நிலையில் இல்லை. பரம் தன்னுடைய தரம் தாழும் என்று அறிந்தோ, அறியாமலேயோ தன்னிடமிருந்து சிறிய, சிறிய ஆத்மாக்களையெல்லாம் பிரித்து அனுப்பும்பொழுதே அங்கே பாவங்கள் உற்பத்தியாகிவிடுகிறது. எல்லாவகையிலும் சுகத்தையும், எல்லா வகையிலும் உயர்வையும் தந்து ஒரு பிறவியை முதலில் படைக்கும்பொழுதே ‘ தனக்கு இவ்வாறெல்லாம் கொடுக்கப்பட்டிருப்பது, பிறருக்கு நன்மைகளை செய்வதற்குதான் ‘ என்று மனிதனோ அல்லது உயர்ந்த நிலையில் உள்ள தேவர்களோ சமயத்தில் புரிந்துகொள்ளாமல் ஆணவத்தால் தவறுகள் இழைக்கும்பொழுது அங்கே முதல் பாவம் தோன்றுகிறது. அந்த முதல் பாவத்தால் சற்றே தரம் குறைந்து அடுத்த நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அங்கே பாவத்தை நீக்குவதற்கு வாய்ப்புகள் தந்தாலும் நீக்குவதற்கு பதிலாக, மேலும், மேலும் பாவங்களை சேர்த்துக் கொள்ள, அடுத்தடுத்து பிறவிகள் சங்கிலி போல நீள்கிறது.
அகத்தியப் பெருமானின் ஜீவ வாக்கு - 3
பகவானின் அம்சமாக இராமபிரான் இருந்தாலும் அந்த நிலை என்பது வேறு. அதாவது ஒரு கருடன் மீது மகாவிஷ்ணு ஏறி அமரும்பொழுது கருடனுக்கு அது பாரமாக இருக்குமா ? துன்பமாக இருக்குமா ? துயரமாக இருக்குமா ? சுகமாக இருக்குமா ? ( சுகமாக இருக்கும் ) எனவே பகவான் செய்யும் செயல்களையெல்லாம் மனிதன் தன் செயல்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பது என்பது, சிறு குழந்தை பெரியவர்கள் செய்கின்ற செயலை தன்னோடு ஒப்பிட்டுப் பார்ப்பதுபோல. இஃதொப்ப நிலையிலே பகவானின் அம்சமான ஸ்ரீ இராமரோடு ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும் என்றால், அவருடைய ஏக தாரத்தை ஒப்பிட்டுப் பார்க்கவேண்டியதுதானே ? அதே சமயம், சிற்றன்னை ( ஸ்ரீ இராமரை ) அழைத்து “ நாடு வேண்டாம், காடு ஏற்றுக்கொள் “ என்றவுடன் புன்முறுவலோடு சென்றாரே, அதை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே ? ஆனால் நல்லவைகளை ஏற்றுக்கொள்ள மனித மனம் விரும்பாது. அதே சமயம் மன்னர்கள் தம், தம் படைபலத்தை வளமாக்க, பலமாக்க விலங்குகளை பயன்படுத்துகின்ற முறைகளும் எம்மைப் பொறுத்தவரை ஏற்க முடியாத முறைதான். பகவானே செய்தாலும் நாங்கள் குற்றம் என்றுதான் கூறுவோம்.
அகத்தியப் பெருமானின் ஜீவ வாக்கு - 2
புண்ணியம் செய்கின்ற மன்னர்களுக்கு அந்த புண்ணியத்தால் சில அரிய, பெரிய சாதனைகளை செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. செல்வம் எப்படியோ புண்ணியமும் அப்படிதான். மிகப்பெரிய புண்ணியம் ஒரு மனிதனுக்கு பரிபூரண ஞானத்தை மிக இளவயதிலேயே…. அதாவது எல்லா தவறுகளையும் செய்துவிட்டு பிறகு மனம் திருந்தி நல்லவனாக மாறுவதுகூட ஆதியில் அவர்களுக்கு பாவம் இருக்கிறது என்பதை குறிக்கிறது. பரிபூரண புண்ணியம் என்றால் அவன் சிறிய பாவத்திற்காகவோ அல்லது இறைவன் கட்டளைக்காகவோ மனிதனாக பிறவியெடுக்க நேரிடும். அப்படி பிறவியெடுக்கும்பொழுதே ஒருவன் துறவியாக பிறவியெடுத்தால்தான் அவனுக்கு முழுமையான ஞானம் இருக்கிறது என்பதை நாங்கள் ஓரளவு ஒப்புக்கொள்வோம். மற்றவர்கள் எல்லாம் புண்ணியத்தால் உலகியல் சுகங்களை நுகர்ந்துகொண்டே பிறகு “ எனக்கு இறை பக்தி இருக்கிறது. எனக்கு இறையருள் இருக்கிறது. என்னிடம் இந்த அளவு வளம் இருப்பதால் நான் மிகப்பெரிய ஆலயம் கட்டப்போகிறேன் “ என்று கூறக்கூடிய நிலையில்தான் இருக்கக்கூடியவர்கள். எனவே சராசரி மனிதர்களைப் பார்க்கும்பொழுது அவன் மிகப்பெரிய புண்ணியவான். அதற்கு முன்பு, அதற்கு முன்பும் மிகப்பெரிய சிவபக்தன். சிவனுக்காக தொண்டு செய்து, செய்து, செய்து தன் ஆஸ்திகளையெல்லாம் இழந்தவன். சிவன் மீது மிகப்பெரிய பிரியத்தை வளர்த்தவன். அந்த வழியில் இறைவன் அருளால் மாபெரும் சக்ரவர்த்தியாக பிறவியெடுத்து வழக்கம்போல் சக்ரவர்த்திகள் என்னென்ன தவறுகள் செய்வார்களோ அதையெல்லாம் செய்து வாழ்ந்தவன்தான். என்ன ? ஏனைய சக்ரவர்த்திகள் இறக்கும் தருவாயில் கொஞ்சம் திருந்துவார்கள். இவன் ( தன் வாழ்வின் ஒரு ) பகுதிக்கு மேல் திருந்தி ஒரு துறவிபோல் வாழ முற்பட்டான். அவ்வளவே. ஒரு தீபம் சுடர்விட்டு எரிந்து கொண்டிருக்கலாம். அந்த தீபத்திலிருந்து இன்னொரு தீபத்தை ஏற்ற அந்த தீபம் முன்வரலாம், அதிலுள்ள சுடரும் முன்வரலாம். ஆனால் இன்னொரு தீபம் அதற்கு ஆயத்த நிலையில் இருக்கவேண்டும். என்ன ஆயத்த நிலையில் இருக்கவேண்டும் ? நல்ல நிலையில் ஒரு திரி இருக்கவேண்டும். அதிலே தூய எண்ணெய் இருக்கவேண்டும் அல்லது தூய நெய் இருக்கவேண்டும். நெய் எப்படி இருக்கவேண்டும் ? இளகிய நிலையில் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் இந்த தீப சுடர் அதில் பற்றும். வெறும் அகல் விளக்கு இருந்தாலும், வெறும் திரி இருந்தாலும் அல்லது திரி இல்லாமல் எண்ணெய் இருந்தாலும் அல்லது எண்ணெயும், திரியும் இருந்து அகல் இல்லாமல் இருந்தாலும் அங்கு பரிபூரண சுடர் பற்றாது. இப்படிப்பட்ட நிலையில்தான் பல மன்னர்களும் வாழ்ந்தார்கள். பல மனிதர்களும் வாழ்கிறார்கள். அவர்களுக்கு மீண்டும், மீண்டும் பிறவி கொடுக்கப்பட்டு, நிறைய பக்குவம் கொடுக்கப்பட்டுதான் இறுதியில்தான் இறைவன் சாயுச்சம், சாரூபம் போன்ற நிலைகளையெல்லாம் காட்டுவார்.
இன்னொரு வினாவை யோசித்துப் பார்த்தாயா ? நீ உன் பூஜை தடத்தை அலங்கரிக்க என்ன செய்ய வேண்டும் ? ஒரு மிகப்பெரிய சிவலிங்கத்தை வைத்து வணங்கவேண்டும் என்றால் நீ என்ன செய்ய வேண்டும் ? நீ நேர்மையாக உழைத்த தனத்தைக் கொண்டு ஒரு சிற்பியை அழைத்து “ எனக்கு இன்ன வகையான சிவலிங்கம் வேண்டும் அல்லது இன்ன வகையான பூஜை பொருள்கள் வேண்டும் “ என்று உன் பூஜை இடத்தை அலங்கரித்துக் கொள்ள வேண்டும் அல்லது வைத்துக்கொள்ள வேண்டும். ஏற்கனவே இன்னொருவன் அலங்கரித்து வைத்துள்ள பூஜை தடத்தை மிரட்டி எடுத்து வந்தால் அதற்கு என்ன பெயர் ? அதற்கு என்ன பொருள் கூறுவது ? இன்னொரு தேசத்தையெல்லாம் போர் என்ற பெயரில் கொள்ளையடித்து அந்த பொருள்களைக் கொண்டு ஆலயம் கட்டினால் இறைவன் ஏற்றுக்கொள்வாரா ? அது நேர்மையான போராகவே இருக்கட்டும். அங்கு உள்ளவர்கள் தொல்லை கொடுக்கும் மனிதர்களாகவே இருக்கட்டும். ஒரு தேசத்தில் தொல்லை கொடுக்கும் மனிதர்கள் மட்டும்தான் இருப்பார்களா ? நல்லவர்கள் இருக்க மாட்டார்களா ? போர் என்றால் தீயவர்கள் மட்டும்தான் பாதிக்கப்படுவார்களா ? அங்குள்ள நல்லவர்கள் பாதிக்கப்பட மாட்டார்களா ? எனவே போரால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் பலகோடி பிறவிகள் எடுத்தாலும் தீராது. அப்பொழுதும் அவனுக்கு ஆலோசனைகள் கூறப்பட்டது. “ நீ அறிந்தும், அறியாமலும் புகழுக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ உனது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த லட்சக்கணக்கான மனிதர்களை கொன்றிருக்கிறாய். அந்த தோஷம் பிறவிதோறும் பற்றாமல் இருக்கவேண்டும் என்றால் மிகப்பெரிய சிவாலயம் அமைத்தால் நல்லது “ என்று போதிக்கப்பட்டது. எனவேதான் தன் தோஷம் நீங்கவேண்டும் என்றும், தனக்கு சந்தோஷம் கிடைக்கவேண்டும் என்றும் அவன் செய்த செயல். ஆனாலும் இப்படியொரு செயலை செய்ததற்கு நாங்கள் அவனை பாராட்டுகிறோம்.
அகத்தியப் பெருமானின் ஜீவ வாக்கு - 1
இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இஃதொப்ப இத்தருணம் முடவன் வாரம் தன்னிலே இவ்விடத்திலே சேர்ந்து வந்து இஃதொப்ப கலந்தாய்விலே கலந்து கொண்டு இஃதொப்ப மனம் உவந்து இவையெல்லாம் செய்யலாம் என்று எண்ணம் கொண்ட, செயலும் கொண்ட இஃதொப்ப அனைவருக்கும் எம் பரிபூரண நல்லாசிகள். இயம்புங்கால் இஃதொப்ப பல்வேறுவிதமான வாக்குகளை பல்வேறு தருணங்களில் எமை நாடும் மாந்தர்களுக்கு யாம் பலமுறை கூறியிருந்தாலும்கூட பலமுறை கூறவேண்டிய தருணம் யாதென்றால் கூறுகின்ற வாக்கின் தன்மையை கேட்கின்ற மனோபாவத்தை பொருத்து ஒவ்வொரு மனிதனும் எடுத்துக்கொள்ள வேண்டும். இஃதொப்ப மனம் மகிழ்வாக, அதாவது மகிழ்வு என்ற சொல்லாடல் அந்தந்த மனிதனின் மனநிலையைப் பொறுத்து இங்கே நாங்கள் கையாளுகிறோம். அப்படியொரு மகிழ்வில் வந்து அமரும்போது நாங்கள் கூறுகின்ற தத்துவார்த்த விளக்கங்கள் எல்லாம் திருப்தியாக, ஏற்புடையதாக இருக்கிறது. இறையை நம்புகிறான், எம்மை நம்புகிறான். ஆனால் அவன் எண்ணுகின்ற நிலையில் வாழ்வு நிலை இல்லை என்ற ஏக்கத்தோடு, விரக்தியோடு அதிருப்தியாக எம்முன்னே அமரும்பொழுது நாங்கள் எதைக் கூறினாலும் அதனை அவனால் திருப்தியாக ஏற்க இயலாது. இஃதொப்ப நிலையிலே யாம் பல்வேறு தருணங்களில் முன்னுரை என்ற ரீதியிலே கூறும்பொழுதே வருகின்றவனுக்கு அத்தனையையும் வெட்டவெளிச்சமாக கூறாவிட்டாலும் இலைமறை காயாக கூறுகிறோம். ஆனால் அதை அவன் புரிந்து கொள்வதில்லை.
இறைவனின் கருணையைக்கொண்டு யாம் இத்தருணம் கூறுவது யாதெனில் வருகின்ற மனிதன் புரிந்துகொள்ளும்படியாக கூறினால் என்ன ? என்றால். அப்படிக் கூறினாலும்கூட, புரிந்துகொள்ள மறுப்பதும் அல்லது அந்த நிலை வாக்கை நாங்கள் ஏற்கவில்லை என்ற ரீதியில் விவாதம் செய்வதும் அல்லது அனைத்தையும் தாண்டி இவைகளை பொய் என்று கூறுவதும் மனிதனின் இயல்பு. இந்த இயல்பை அறிந்தேதான் யாம் காலகாலம் இஃதொப்ப அருள்வாக்கினை கூறிவருகிறோம். இயம்புங்கால் மேலும் இஃதொப்ப நிலையிலே தெள்ளத் தெளிவாக, வெட்டவெளிச்சமாக எதைக் கூறவேண்டும் ? எதைக் கூறக்கூடாது ? என்ற இறைக் கட்டளைக்கேற்பவே கூறவேண்டியிருக்கிறது.
உதாரணமாக அப்படிக் கூறுவதாக வைத்துக்கொண்டால் அதனை ஏற்று அமைதி அடையக்கூடிய பக்குவம் எத்தனை மனிதர்களுக்கு இருக்கும் ? என்று பார்த்தால் அது மிகவும் குறைவு. இப்படியிருக்கும் பட்சத்திலே முன்னரே பக்குவமின்மையோ, விதியோ அல்லது அறியாமையோ, துன்பத்தில் வந்து எம்முன்னே வந்து அமருகின்ற மனிதனுக்கு யாமும் ஒருவிதமான வாக்கைக் கூறி அவனை சங்கடப்படுத்த விரும்பவில்லை. ஒன்று, மௌனமாகி விடுகிறோம். இல்லையென்றால் அவன் திருப்தியடையும் வண்ணம் கூறிவிடுகிறோம். இப்படிக் கூறுவதால் அடுத்த வினா வரும், சித்தர்கள் பொய் உரைக்கலாமா ? என்று. ஏற்கனவே நாங்கள் பொய்தான் உரைத்துக் கொண்டிருக்கிறோம் என்று பலரும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். அஃதொப்ப நிலையிலே ‘ பொய்மையும் வாய்மையிடத்து ‘ என்ற கருத்தை இங்கே பொருத்திப் பார்க்கவேண்டும்.
இஃதொப்ப மெய்யிலும் மெய்யை நாங்கள் கூறவேண்டுமென்றால் இங்கு வருபவன் மெய்யாக இருக்கவேண்டும். இங்கு வருபவன் யாரும் மெய்யாக இல்லை என்பதே மெய்யிலும் மெய்யான உண்மையாகும். அதாவது, எம்மை நாடுவதும், எம் மீது பற்று வைப்பதும், பக்தி வைப்பதும் என்பது வேறு. ஆனால் நாங்கள் வந்து வாக்கைக் கூறுகிறோம் என்பதற்காக எல்லாவகை உரிமைகளையும் எடுத்துக்கொண்டு, “ நான் எதிர்பார்க்கின்ற சூழலை அமைத்துத் தந்தால்தான் நம்புவேன் “ என்ற ரீதியில் ( இங்கு ) வந்தால் இன்றல்ல, நாளையல்ல, கல்ப கோடி காலம் ஆனாலும் சித்தர்களுக்கும், மனிதர்களுக்கும் சரிவிகித சமரச உடன்பாடு என்றுமே வராது. இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் இப்பொழுது மேலும் இதுபோன்ற சிக்கலான தத்துவார்த்த கருத்துக்களைக் கூறினால் மீண்டும், மீண்டும் குழப்பமான பொருளைதான் அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய நிலை உருவாகும்.
அடுத்ததாக இஃதொப்ப நிலையிலே பல்வேறுவிதமான சிந்தனைகள் கொண்டவர்கள் இங்கு வருவதும், போவதும் பின்னர் தூற்றுவதும் என்பது இயல்பு. இது காலகாலம் நடக்கக்கூடிய நிகழ்வு. இதற்காக இதழ் ஓதுபவனோ, மற்றவர்களோ விசனம் கொள்வதும், வேதனை கொள்வதும் அறிவுடைமை ஆகாது. ஒருவன் முதலில் இங்கு வருவான். இதை நம்புவான். எம்மை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவான். அடுத்த சில மாதங்களில் கீழே போட்டு மிதிப்பான். இவையும் நடந்து கொண்டுதான் இருக்கும். இதுபோன்ற மனிதர்களை மனதிலே வைத்து எந்தவொரு காரியத்தையும் செய்தல் கூடாது. எனவே வருபவர் வரட்டும். செல்பவர் செல்லட்டும். ஒத்துக் கொள்ளக்கூடிய மனிதன் ஒத்துக் கொள்ளட்டும். மறுக்கக்கூடிய மனிதன் மறுக்கட்டும். ஆனாலும்கூட இஃதொப்ப நிலையிலே இன்னும் எத்தனை கடினங்கள், எத்தனை வேதனைகள் அனுபவித்தாலும் இஃதொப்ப நிலையில் தர்மம், சத்தியம், பக்தி – இந்த மூன்றையும் தவறாமல் கடைபிடிப்பேன் என்ற ஒரு வைராக்கியம் இருப்பவனுக்குதான் தொடர்ந்து எமது வழிகாட்டுதல் என்பதும் இருக்கும். தொடரும். இன்னொன்று, இஃதொப்ப விபத்தை முன்கூட்டியே உணர்ந்து சிலரை காப்பாற்றுவதுபோல பலரை ஏன் காப்பாற்றவில்லை ? என்ற ஒரு வினா வரும். அடுத்ததாக, அப்படியானால் அகஸ்தியரை வணங்கினால் அல்லது மற்ற சித்தர்களை நம்பினால்தான் காப்பாற்றுவார்களா ? நம்பாதவர்களையெல்லாம் கைவிட்டுவிடுவார்களா ? என்ற ஒரு சிந்தனை, வினா வரும்.
அப்படியல்ல. யார், யாருக்கு விதிப்படி என்ன நடக்க வேண்டுமோ அது நடந்து கொண்டேயிருக்கிறது. அந்தக் கடுமையான விதியிலிருந்து ஒருவனைக் காப்பாற்ற வேண்டுமென்றால் அதற்கு சரியான காரணத்தை இறையிடம் நாங்கள் காட்ட வேண்டும். அப்படி சரியான காரணம் எம்மைப் பொருத்தவரை தர்மம், தர்மம், தர்மம், தர்மம், தர்மம், தர்மம். இது ஒன்றுதான். அதனையும் தாண்டி மனதிலே அப்பழுக்கில்லாமல், எந்த சூது, வாது இல்லாமல் சிறு குழந்தைபோல் மனதை வைத்திருந்தால் அதையும் ஒரு சரியான காரணமாகக் காட்டுவோம். ஆனால் இங்கு வருகின்ற பலருக்கும் வெறும் லோகாய விஷயங்களைக் கேட்பதற்காக நாங்கள் வருத்தப்படவோ, சினப்படவோ இல்லை. அது மனிதனின் தேவை, நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் எம்மிடம் வந்தும் ஒன்றும் நடக்கவில்லை என்றால் குற்றம் எங்கே ? என்று யாரும் சிந்தித்துக்கூட பார்ப்பதில்லை.
எனவே இன்று இங்கு எம்முன்னே அமர்ந்து வாக்கைக் கேட்கின்ற அனைவருக்கும் கூறுகிறோம். எமது வாக்கை நூற்றுக்கு நூறு சரியாகப் புரிந்து கொண்டு, சரியான தர்ம வழியில் எவனொருவன் நடக்கிறானோ, கட்டாயம் அவன் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், எதைக் கேட்டாலும், கேட்காவிட்டாலும் அவனுக்கு எதை செய்ய வேண்டுமோ அதை நாங்கள் இறையருளால் செய்திருக்கிறோம், செய்து கொண்டிருக்கிறோம், இனியும் செய்வோம். “ அப்படியெல்லாம் ஏதுமில்லை. பல ஆண்டுகளாக சித்தர்கள் வழியில் நான் வருகிறேன். என் கஷ்டங்கள் எதுவும் தீரவில்லை. மாறாக கஷ்டங்கள் அதிகமாகி இருக்கிறது “ என்று யாராவது எண்ணினால் இரண்டு நிலைகளை அங்கே பார்க்க வேண்டும்.
ஒன்று, பரிபூரணமாக முன் ஜென்ம பாவங்கள் அங்கே குறையவில்லை. முன் ஜென்ம பாவங்கள் ஓரளவு குறைந்திருந்தாலும் இந்த ஜென்மத்தில் இளமை காலத்திலிருந்து அவன் நடந்துகொண்ட விதத்தை சிந்தித்து பார்த்தால் எங்கே குற்றம் ? எங்கே குறைகள் ? என்பது அவனவன் மனதிற்கு கட்டாயம் புரியும்.
எனவே இறைவன் அருளைக்கொண்டு கூறுவது என்னவென்றால் நூற்றுக்கு நூறு எம்மை நம்பி எம் வழியில் வருகின்ற அனைவருக்கும் நாங்கள் இறைவனருளால் நல்ல வழி காட்டுவோம். உலகியல் ரீதியாக முன்னேற்றம் காட்டினால்தான் ஒருவனுக்கு நாங்கள் அனுக்ரஹம் செய்கிறோம் என்பது மிகவும் குழந்தைத்தனமான எண்ணம். நன்றாக எமது வார்த்தையை கவனித்து பொருள் கொள்ளவேண்டும். எதற்காக இந்த ஜீவ அருள் ஓலைக்கு இங்கு வருகின்ற அனைவரையும் இழுத்து வந்து விதவிதமான வாக்குகளைக் கூறி, விதவிதமான தேர்வுகளை வைக்கிறோம் என்றால் இங்கு மனித நிலையிலே வெறும் தோற்றத்தில் மனிதனாக குணத்தில் மிருகமாக இருக்கலாம். பிறகு தோற்றத்திலும், குணத்திலும் மனிதனாக இருக்கலாம். தோற்றத்திலும், குணத்திலும் மனிதனைவிட மேம்பட்ட மாமனிதனாக இருக்கலாம், புனிதனாக இருக்கலாம். இதையெல்லாம் தாண்டி ஒவ்வொரு மனித ஆத்மாவையும் சித்த ஆத்மாவாக மாற்றவேண்டும். இதுதான் இறைவன் எங்களுக்கிட்ட கட்டளை.
ஒவ்வொரு மனிதனையும் சித்தர்களாக மாற்றவேண்டும் என்றால் அது எத்தனை பெரிய இரசவாதம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அது எளிமையான காரியம் அல்ல. செம்பை தங்கமாக்குவதோ அல்லது இரும்பை பொன்னாக்குவதோ அல்ல. அது மிக, மிக எளிது. ஆனால் மனிதனை குறைந்தபட்சம் மனிதனாக்கி, அவனை மாமனிதனாக்கி, அந்த மாமனித நிலையிலிருந்து மேலும் புனிதனாக்கி அவனை நல்ல நிலையிலே சித்தனாக்க வேண்டும். அப்படி சித்த நிலையை நோக்கி செல்ல வேண்டும் என்றால் நாங்கள் கற்பிக்கும் பாடங்கள் கடினமாகத்தான் இருக்கும். அந்த பாடங்களை சரியாக உள்வாங்கி எவன் புரிந்து கொள்கிறானோ, லோகாய கஷ்டங்களையெல்லாம் ஒதுக்கி வைத்து எம் பின்னால் வருகிறானோ அவனை நாங்கள் ஒரு சித்தனாக்கி விடுவோம். சித்தனாக்கி விட்டால் பிறகு அவன் எதற்கு இன்னொரு சித்தனை நாட வேண்டும் ? அவன் இறையைகூட நாடத் தேவையில்லை. ஒவ்வொரு ஆணையும், பெண்ணையும் அந்த நிலைக்கு அழைத்துப் போகவேண்டும் என்றுதான் நாங்கள் இந்த ஜீவ அருள் நாடி என்று நாமமிட்டு மூன்று முனிவர்களும் போராடிக் கொண்டிருக்கிறோம்.
பலர் எண்ணலாம். உலகியல் ரீதியான எல்லா பிரச்சினைகளும் தீர்ந்த நிலையில் நிம்மதியாக ஒருவன் ஆன்மீகத்தில் வரலாமே ? என்று. இதை, வாதத்திற்குதான் ஒப்புக்கொள்ளலாமே தவிர நடைமுறையில் இது சாத்தியம் என்று கூற இயலாது. ஏனென்றால் ஒரு மனிதன் ஒரு கஷ்ட நிலையில் இருக்கிறான். இறையருளாலோ அல்லது எமது வழிகாட்டுதலாலோ அல்லது இயற்கையாக மாறி வரும் தசா புத்தியாலோ சற்றே மேம்பட்ட ஒரு நிலை வருகிறது என்று வைத்துக் கொள்வோம். உடனடியாக எம்மிடம் வந்து “ குருதேவா ! முன்பைவிட இப்பொழுது நிலைமை உயர்ந்திருக்கிறது. வருமானம் அதிகமாகி இருக்கிறது. இந்த உபரி வருமானத்தை என்ன செய்யலாம் ? “ என்று யாராவது கேட்கப் போகிறார்களா ? இல்லை. அடுத்தடுத்து உலகியல் ரீதியான முன்னேற்றத்தை நோக்கிதான் மனித மனம் செல்லும்.
எனவே மீண்டும், மீண்டும் கூறுகிறோம். எந்தவொரு மனிதன் உலகியல் ரீதியாக முன்னேற்றம், சுகம் என்று எண்ணுகிறானோ, அது வெறும் மாயை, கானல் நீர்தான். ஏனென்றால் ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு வந்த பிறகு அடுத்த நிலையை நோக்கி அவன் மனம் சென்றுவிடும். ஏற்கனவே பட்ட கஷ்டத்தைவிட இப்பொழுது வாழ்கின்ற வாழ்க்கை எத்தனையோ மடங்கு மேல் என்று எந்த மனமும் எண்ணாது. இவைகள் வெறும் வாதத்திற்குதான் உதவும். உண்மை அது அல்ல.
எனவே எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு மனிதன் அன்றாடக் கடமைகளை செய்வதுபோல யாங்கள் கூறுகின்ற கருத்தை சிந்தித்துப் பார்த்து தேவையில்லாத விவாதங்களையெல்லாம் குறைத்து தூஷணைகளை விட்டு, பிறர் மீது குற்றம் சாட்டுவதை நிறுத்தி, தானுண்டு, தன் கடமையுண்டு, பக்தியுண்டு, தர்மம் உண்டு, சத்தியம் உண்டு என்று எம் வழியில் திடமாக வந்துகொண்டேயிருந்தால் காலப்போக்கிலே அவன் எதையெல்லாம் பிரச்சினை என்று எண்ணுகிறானோ அவைகள் எல்லாம் தீர்ந்ததுகூட அவனுக்குத் தெரியாமல் அதைத் தாண்டி அழைத்து வந்துவிடுவோம்.
மீண்டும், மீண்டும் நாங்கள் கூறுகின்ற கருத்து இதுதான். சத்தியம், தர்மம், பக்தி – இதை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டால் எல்லோரும் சுகமாக வாழலாம். ஆசிகள்.
புதன், 26 ஜூலை, 2017
அரசண்ணாமலை ஸ்ரீ லோபாமுத்திரை சமேத சத்குரு ஸ்ரீ அகஸ்தியர் லிகித ஜெபம்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் விஜயமங்கலம் அருகில் உள்ள அரசண்ணாமலையில் அகஸ்தியர் அய்யா லோபாமுத்திரை அம்மா விக்கிரகம் ப்ரதிஷ்ட்டை செய்ய இறைவன் அருள் அனுமதி கொடுத்து உள்ளார்.இதன் பொருட்டு லிகித ஜெபம் எழுத அருளாணை இட்டுள்ளார். "ஓம் அகத்தீசாய நம, ஓம் மாதா லோபாமுத்ராய நம " என்ற மந்திரத்தை குளித்து விட்டு, ப்ரம்ம முகூர்த்தத்தில் ஒரு தீபம் ஏற்றி எழுத வேண்டும். உண்மையில் ஆர்வம் உள்ளவர்கள் எழுத தொடங்கலாம்.கருப்பு மை தவிர பிற வண்ணங்களில் எழுதலாம். இந்த மலை வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் கும்பாபிஷேக தேதி வனத்துறையின் அனுமதிக்கு பின் முடிவு செய்யப்படும். எனவே, எப்போது லிகித ஜெபத்தை ஆலயத்தில் சேர்க்க வேண்டும் என்பதை பின்னர் உரைக்கிறோம்.
செவ்வாய், 4 ஜூலை, 2017
திங்கள், 3 ஜூலை, 2017
ஸ்ரீ லோபமுத்ரா சமேத ஸ்ரீ அகத்திய பெருமானுக்கு தெய்வீக விவாஹ சுபமுகூர்த்தம்
ஓம் ஸ்ரீ சத்குரு அகத்தியரே போற்றி
அன்பர்களுக்கு வணக்கம். நகரேழு காஞ்சியில் பாலாற்றங்கரைக்கு தென்பால் தூசி கிராமத்தில் வீற்றிருக்கும்
எம் ஐயன் அகத்தியப்பெருமான் எனையாளும் ஈசனே . அகத்தின் ஈசன் அகத்தீசன் எனவும் கொள்ளலாம்.
இவ்வுலகம் உய்யும் பொருட்டு எம் ஐயன் ஆற்றி வரும் பணி அளப்பரியது.நாடி வருபவர்களுக்கு அறம்,பொருள், இன்பம் அளித்து
வீடுபேறும் அளித்திட பல ஊர்களி்ல் கோயில் கொண்டுள்ளார்.
அவ்வகையில் காஞ்சிபுரம் அருகில் தூசி எனும் ஊரில் அபிராமி சமேத அபிமூர்த்தீஸ்வரர் ஆலயத்தில் தம் இல்லாள் லோபமுத்ரா தேவியுடன் வீற்றிருந்து அருள்கிறார்.
நன்மக்கள் ஒன்று கூடி "அகத்தியர் குழுமம் "ஆகி பல திருப்பணிகள் செய்து வருகிறார்கள். அவற்றில் ஒன்று "அகத்தீஸ்வரர் திருக்கல்யாணம்".
சித்தர்களுக்கெல்லாம் தலையாய சித்தர் மகான் ஸ்ரீஅகத்தியப்பெருமான் லோபமுத்ரா தேவி திருக்கல்யாண வைபவத்தை காண கண் கோடி வேண்டும்.
சிவபெருமான், முருகப்பெருமான், ஸ்ரீநிவாச திருக்கல்யாணம் அனைவரும் பார்த்திருப்போம். ஐயன் அகத்தியப் பெருமான் திருக்கல்யாணம் ஐயன் வீற்றிருக்கும் தலங்களில் ஒரு சில தலங்களில் மட்டுமே வெகு விமரிசையாக நடைபெறும்.
இத்திருக்கல்யாண நான்காம் ஆண்டு வைபவம் வரும் 18.08.2017 ஆவணி மாதம் 2 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை தூசி கிராமத்தில் நடைபெற உள்ளது. அன்பர்கள் அனைவரும் தங்கள் உற்றார் உறவினர்களுடன் வந்து திருக்கல்யாணம் கண்டுகளித்து எல்லா வளமும் தடையில்லாமல் கிடைத்திட வாழ்வில் நீங்கா புகழ்பெற ஐயனின் அருள்பெற அன்புடன் அழைக்கிறோம்.
இத்திருக்கல்யாண வைபவத்தில் தங்கள் மனமுவந்து இயன்ற பொருள் உதவி அளிக்க முடிந்தவர்கள் உதவி செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். உதவி செய்ய முடியாதவர்கள் வருந்த வேண்டாம் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி அகத்தியர் குழுமம், 9894211430. 9715902042.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)



















