அகத்தியர் என்பவர் சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் அறியப்பெறுகிறார். சிவபெருமானின் திருமணத்தினை காண அனைவரும் வடதிசைக்கு வந்தமையால், இவர் தென்திசைக்கு பயணப்பட்டு அதை சமன்செய்ததாகவும், சிவசக்தி திருமணத்தினை தமிழகத்திலிருந்து கண்டவராகவும், தமிழை சிவபெருமானிடமிருந்து கற்றவரம் ஆவார்.இவரே அகத்தியம் எனும் முதல் தமிழிலக்கண நூலை எழுதியவர். இந்நூல் கிடைக்கப்பெறவில்லை. தொல்காப்பியத்தை எழுதிய தொல்காப்பியனார், அகத்தியம் தன் தொல்காப்பியத்திற்கு முன்பே எழுதப்பட்டதாக கூறுகிறார். இவரது மனைவியின் பெயர் லோபாமுத்திரை ஆகும்.அகத்தியர் மித்திர வருணரின் மகனும், வசிட்டரின் சகோதரரும் ஆவார்
- தமிழ் முனிவர் (தமிழ் இலக்கணம் அருளியதால்)
- மாதவ முனிவர் (அதிக தவம் செய்ததால்)
- மாமுனி (பெரிய முனிவர் என்ற பொருளில்)
- குருமுனி (முனிவர்களுக்கெல்லாம் குருவானவர்)
- திருமுனி (உயர்வுக்குரியவர்)
- முதல் சித்தர் (18 சித்தர்களில் முதன்மையானவர்)
- பொதியில் முனிவன் (பொதிகை மலையில் வாழ்ந்தவர்)
- அமரமுனிவர் (இன்றுவரை பேசப்படும் முனிவர் என்ற பொருளில்)
- பொதியவரை முனிவன் (பொதிகைமலை)
- குடமுனி (குடத்தில் பிறந்தவர்)
அகத்தியரின் சிறப்புகள்
தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தார்கள். இவர்களைக் கண்ட அசுரர்களோ கடலுக்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து அகத்தியராய் அவதரித்தார் என்றும், மிர்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியரும், வருணன் தண்ணீரிலிட்ட வீரியத்திலிருந்து வசிஷ்டரும் அவதரித்தனர் என்றும் பலவாறான கருத்துகள் நிலவுகின்றன. குடத்திலிருந்து தோன்றியமையால் அகத்தியர் குடமுனி, கும்பயோகி என்னும் பெயர்களைப் பெற்றார் எனக் கூறப்படுகிறது. இவ்வாறு பிறவி பெற்ற அகத்தியர், இந்திரன் வேண்டுகோளுக்கிணங்க சமுத்திர நீர் முழுவதையும் குடித்து விட, இந்திரன் அசுரர்களை அழித்தார். அதன்பின் நீரை மீண்டும் கடலுள் விடுவித்தார் அகத்தியர்.அகத்தியர் நீரின் மேல் படுத்தபடியே பன்னிரெண்டாண்டுகள் கடுந்தவமியற்றி அரிய சக்திகளை (ஆற்றல்களைப்) பெற்றார்.
அகத்தியர் தம் முன்னோர்களுக்காக விதர்ப்ப நாட்டை அடைந்து அவ்வரசன் மகள் உலோபமுத்திரையை மணந்து தென்புலத்தார் கடனை தீர்த்தார்.
கைலையில் நடந்த சிவபெருமான் திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர, அகத்தியரை தென் திசைக்கு செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார். இதனால் தெற்கே மேருமலை நோக்கிப் பயணித்தார் அகத்தியர். மேருமலைக்கு செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை, அகத்தியரைக் கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது. தான் தென் திசை சென்று வரும் வரையில் பணிந்து இருப்பாயாக என்று அதனிடம் கூறிச் சென்ற அகத்தியர், மீண்டும் வடதிசை செல்லாதிருந்தார். ஆதலால் விந்திய மலையும் அதன் பின் உயரவில்லை எனக்கூறப்படுகிறது.
தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி அகத்தியம் என்னும் நூலை இயற்றினார்.
சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை விநாயகர் காகமாக உருக் கொண்டு சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு ஆனது.
இலங்கை மன்னர் இராவணனை தம் இசை திறத்தால் வென்றார் அகத்தியர்.
அகத்தியர் இந்திரன் சபைக்கு சென்றபோது இந்திரன் ஊர்வசியை நடனமாட செய்தான். ஊர்வசி இந்திரன் மகன் சயந்தனிடம் கொண்ட காதலால் தன்னிலை மறந்தாள். அதனால் அகத்தியர் சயந்தனையும் ஊர்வசியையும் பூமியில் பிறக்கும்படி சபித்தார்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக