ஞாயிறு, 31 டிசம்பர், 2017

அத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர குரு பூஜை அபிஷகம், அலங்காரம் மற்றும் ஆராதனை



அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

நெல்லை மாவட்டம், ஆழ்வார்குறிச்சி கடனா நதி அனை அருகில் உள்ள அத்ரி மலையில் ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள் உடனமார் ஸ்ரீஅத்ரி மகரிஷி கோவிலில் அமைந்து உள்ள ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு 04-01-2017 வியாழன் கிழமை  ஆயில்யம் நட்சத்திர குரு பூஜை தினத்தன்று காலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள்உடனமார் ஸ்ரீஅத்ரி மகரிஷி மற்றும் ஸ்ரீ அகத்திய மகரிஷி .திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு  மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக அன்புடன் அழைகின்றார்கள்

கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் கிழ்கண்ட செல் நம்பரை தொடர்பு கொள்ளவும்

மேலும் தகவல்கள்களுக்கு

cell :9842078733
9043942091,
9843016651

மேலும் தமிழ் நாடு முழுவதும் 70க்கும் மேற்பட்ட சிவாலயங்களில் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று அபிஷகம், ஆராதனை நடைபெறுகிறது

அமானுசியம், அற்புதங்கள் நிறைந்த அத்ரி மலை

பிரபஞ்சத்தின் ஜீவநாடி அறுந்து போகாமலிருப்பதற்காக இயற்கை அன்னை பல நற் கொடைகளை வாரி வழங்கியிருக்கிறாள். அந்த இயற்கைவளம் அலாவுதீனின் அற்புத விளக்கைப் போல பல ஆன்மீக அதிசயங்களைக் கொண்டுள்ளது என்பதற்கு ஆணித்தரமான உதாரணம் அத்ரி மலையும் அங்கே உடனுறையும், சிவன் வடிவில் உள்ள அத்ரி ஆலயமே.

கையடக்கமான அந்த ஆலயம், அன்றாடம் ஆன்மீக பக்தர்களை ஈர்த்த வண்ணமிருக்கிறது.

எந்த ஒரு பொருளையும் நினைத்த வேளையில் அடைந்து விட்டால் அதற்கு மதிப்பு குறைவு தான். சிரமப்பட்டு, கஷ்டங்களை அனுபவித்துப் பெறும் பொருள், அதுவே பரம்பொருள் ஆனாலும், அது தரும் சுகமும், அமைதியும், வாழ்நாள் முழுக்க மனதில் கல்வெட்டாகப் பதிந்து விடும்.

அத்ரிமலை ஆலயத்தின் வரலாற்றுக்குள் போவதற்கு முன், அந்த ஆலயம் சென்றடைவதற்கான வழியினை முதலில் பார்த்து விடுவது நல்லது.

நெல்லை மாவட்டத்தின் நகரமான தென்காசி அல்லது அம்பாசமுத்திரம் அடுத்துள்ள ஆழ்வார்குறிச்சிக்கு, பேருந்துகள், ரயில் போக்குவரத்து வசதிகள் தாராளமாக உள்ளன. ஆழ்வார்குறிச்சியில் இறங்கி மேற்கேயுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பக்கமிருக்கும் அழகப்பபுரம் வரை போக்குவரத்து வசதியுள்ளது. அங்கிருந்து மேற்கிலிருக்கும் கடனா நதிக்கு கால்நடைப் பயணமாகச் சென்ற பிறகு மேற்குத் தொடர்ச்சி மலையின் மேல 6 கிலோ மீட்டர் நடந்தால் அத்ரி மலை சிவன் ஆலயத்தை அடையலாம்.

சுத்தமான பிராணவாயுக்காற்றோடு மூலிகை மணத்தையும் கொண்ட காற்று வீசும் சூழல். சுவாசிக்கும் மனிதர்களின் இதயத்தைச் சுத்திகரிக்கும். புத்துணர்ச்சியோடு கரடு முரடானபாதையைக கடப்பது கூட அங்கே செல்லும் பக்கதர்களுக்குத் துன்பமே தெரியாது.

அப்படி ஒரு சிறப்பம்சம்.

சரி. இனி ஞான விஷயத்திற்கு வருவோம்.

ஆன்மீக சரித்திரம் இப்படித்தான் பதிவு செய்திருக்கிறது.

இன்றைக்கு சரியாக 2.500 ஆண்டுகளுக்குச் முன்பு மேற்குத் தொடர்ச்சி மலைப் பயணமாக வந்த மகாமுனிவர் தான் அத்ரி.

தனது பக்தர்களோடு வந்த அத்ரி முனிவர் அந்த மலையில் சிவபெருமானை வேண்டிக் கடும் தவம் செய்தார். தனது அடியாரின் கடும் தவத்தை மெச்சிய சிவபெருமானும் அத்ரி முனிவருக்குக் காட்சி கொடுத்தார்.
அத்ரி மாமுனிவர் அங்கு தவமிருந்ததால் அது அத்ரி மலை எனப் பெயராகி, சிவன் வடிவில் உள்ள அத்ரி சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறிய ஆலயாமானது.

இடையில் ஒரு அதிசயத்தைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
அத்ரி முனிவர் தவ வேளையில் இருக்கும் சமயம் அவரது சீடர்களில் ஒருவரான அனுசுயாதேவிக்குத் தாக மெடுதத்து. தண்ணீருக்காக தன் சிஷ்யை தவிப்பதை உணர்ந்த அத்ரி முனிவர் தனது கமண்டலத்தைத் தரையில் ஒங்கி ஒரு தட்டு தட்ட, அந்த இடத்தைப் பிளந்து கொண்டு நீருற்று பீய்ச்சியடிக்க அனுசுயாதேவி தன் தாகம் தீர்த்துக் கொண்டாள். வானம் பிளந்து மழை கொட்டோ கொட்டென்று கொட்டித்தீர்த்தாலும், 110 டிகிரியளவு கோடைவெப்பம் சூட்டைக்கிளப்பினாலும், அந்த நீர் ஊற்று ஒரே சீரான அளவு பொங்கி வருவது. அற்புதமானது என்பது பக்தர்களின் திகைக்கவைக்கும் பேச்சாகத் தொடர்கிறது.

அத்ரி மலையின் சிவனாலயம் பற்றிய பேச்சு கசிந்த உடனேயே. அது ஆலயமாக உருவெடுக்கும் காரியங்கள் நடக்கத் தொடங்கின. மலைக்கு அவரைத் தரிசிக்கச் சொல்லும் பக்தர்களே நேர்ச்சையாகத் தலைக்கு மூன்று செங்கற்களைக் கொண்டு சேர்க்க, அதன் பிறகே பக்தர்களால் அமைக்கப்பட்ட கையடக்க கோயில் மலைமேல் உருவானது வனதுர்க்கை, பேச்சியம்மன், 21 கன்னிமார்சிலைகள், கருப்பசாமி, சுடலை மாடன உள்ளிட்ட பல துணை தெய்வங்களின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு. காலப் போக்கில் பிரபலமாகி தற்போது பக்தர்களின் ஜனரஞ்சகக் கேத்திரமாக மாறி நிற்கிற அளவிற்கு வளர்ந்திருக்கிறது. [

அத்ரி மலை சிவபெருமானைத் தரிசிப்பதற்காக பக்தர்கள் தங்களின் மன எண்ணப்படி நேர்ச்சையாகவும் விரதமிருந்தும், சிலர் அவரையே நெஞ்சில் தேக்கிக் கொண்டு மலை ஏறுகிறார்கள். அப்படி வரும் பக்தர்களுக்கு கரடு, முரடான கற்களையும், பாதைகளையும், முட்களையும் மெத்தையாக மாற்றி அவர்களைச் சேதாரமில்லாமல் மலைக் கோவிலுக்குக் கொண்டு சேர்க்கிறார். அங்குள்ள வனதுர்க்கையம்மன். காட்டு மிருகங்கள் பக்தர்களை அண்ட விடாமல் பாதுகாத்தும், மழைக் காலங்களில் அங்குள்ள கல்லாறு வெள்ள மெடுத்து பக்தர்கள் கடப்பதற்கு தடையாய் நிற்பதையும் தடுத்துக் கொண்டு, அத்ரி பரமேஸ்வர சுவாமியைத் தரிசிக்க வரும் பக்தர்களைச் சிரமமின்றி தரிசனம் முற்றுப் பெற்று தரையிறங்கும் வரை காவல் துணையாய் வழித்துணையாய் வந்த வனதுர்க்கையம்மனுக்கு முதல் வணக்கும் வைத்துப் பூஜிக்கிறார்கள்.

ஆலயம் தோன்றிய காலம் தொட்டே இந்த வனதுர்க்கை தான் அத்ரிவனத்தின் காவல் தெய்வம். ராமரும், சீதாப்பிராட்டியாரும் அத்ரிமலை தபோவனத்திற்கு வந்த போது வனதுர்க்கையைத் தான் முதலில் வணங்கி முதல் மரியாதை செலுத்தினார்கள்.

அத்ரிமலை அமைதிச் சூழலையும், மெஞ்ஞானத்தையும் கொண்ட சிறப்பான ஒரு தபோவனமாக இருந்த காரணத்தினால் தான், தன் பிரதான சிஷயர்களோடு இங்கே யாகம் புரிய வந்தார் அத்ரி மகரிஷி. அவரது சீடர்களில் குறிப்பிட்டத்தக்கவர் கோரக்கர். தன்னுடைய குருவான ஆத்ரி முனிவருக்குப் பணிவிடைகளைச் செய்தமையால், அதன் வலிமை காரணமாக தென்பாண்டிச் சீமையின் ஏற்பட்ட கொடும் பஞ்சத்தையும் போக்கியவர் கோரக்கர்.

அத்ரி பரமேஸ்வர சுவாமியை மனதார வணங்கி நீர் ஊற்றில் தலை நனைத்து பிறகு, அங்கேயுள்ள அரச மரத்தின் முன்பாக தியானத்தில் அமர்வது தான் இங்கே குறிப்பிடும்படியான விசேஷம்.

பரம்பொருளை வணங்கி விட்டு, மனதார அரசமரம் முன்பு தியானத்திலிருப்பவர்களின் மனக்குறை நீங்கப் பெற்று எண்ணிய காரியங்கள். ஈடேறுகின்றன. பறைசாற்றலோ விளம்பரமே இல்லாமல் அன்றாடம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தெல்லாம் அத்ரி மலைக்கு வருகின்றார்கள்.

அத்ரிமலையின் அற்புதங்களில் இது கடுகளவே... மலை ஏறினாலோ புதைந்து கிடக்கும் பிரம்மாண்டங்கள் விரியும்

மக்கள் நலனை மட்டும் கருத்தில் கொண்டு சுயநலமில்லாத, தூய்மையான மனம் உள்ள அரசியல் தலைவர்கள் நமக்கு கிடைப்பார்களா என்ற கேள்விக்கு ஸ்ரீ அகத்திய பெருமான் அருளிய வாக்கு


இறைவன் அருளால், இதுபோன்ற நல்ல ஆசை பல மனிதர்களுக்கு இருக்கிறது. அவை நடக்க வேண்டும் என்று நாங்களும் ஆசிர்வாதம் செய்கிறோம். ஆனால் நடக்காது என்பதுதான் உண்மையிலும் உண்மையாகும். வேண்டுமானால் இறைவனே பிறந்து வந்து ஆண்டால் உண்டு. அதுவும் நடக்கப்போவதில்லை. ஆனால் இப்படி கேட்கின்ற மனிதன் ஒன்றை மறந்துவிடுகிறான். நல்லவர்கள் ஆளவேண்டும். நல்லவர்கள் அதிகாரிகளாக இருக்கவேண்டும். எல்லா தொழில்துறையிலும் நல்லவர்கள் வேண்டும் என்று ஆசைப்படுகின்ற மனிதன் முதலில் தான் நல்லவனாக மாறவேண்டும் என்று எண்ணுவதில்லை. அடுத்ததாக தன்னால் நல்லவனாக வாழ முடியாமல் போனாலும் பாதகமில்லை. நல்ல நிலையில் இருக்கக்கூடிய மனிதனை எப்பொழுதுமே மதிக்கவேண்டும், பாராட்டவேண்டும் என்கிற குணம் மனிதர்களுக்கு வருவதில்லை.

ஒரு நிறுவனத்திலே நூறு பேர் பணியாற்றுவதாகக் கொள்வோம். அதில் பத்து மனிதர்கள் நூற்றுக்கு நூறு அப்பழுக்கற்று நேர்மையாக நடப்பதாகக் கொள்வோம். மிகுதி உள்ள தொண்ணூறு மனிதர்கள் என்ன பேசிக்கொள்வார்கள் ?  ‘ பிழைக்கத் தெரியாதவன், மூடன், இவனையெல்லாம் யார் இங்கே இட்டது ? இவன் இருந்தால் நமக்கு ஆபத்து ‘ என்று நல்லவர்களுக்கு தொல்லைகள் தருவதே மற்ற மனிதர்கள்தானே ? முதலில் தன்னை சுற்றியுள்ள நல்ல மனிதர்களை மதிக்க மனிதன் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் மனிதர்களுக்கு நன்றாகவே தெரியும், நல்லவர்களை பகைத்துக்கொண்டாலும் பாதகமில்லை. அவனால் எந்த பாதிப்பும் வராது. ஆனால் தீயவர்களிடம் அடங்கிப் போகவேண்டும். தீயவர்களைப் பகைத்துக்கொண்டால் உடனடியாக அவனால் ஏதாவது பாதிப்பு வரும் என்று அடங்கிப் போகிறான். ஆனால் நல்லவர்களைக் கண்டால் மனிதர்களுக்கு அச்சம் அகன்றுவிடுகிறது. அவனிடம் மதிப்பும், மரியாதையும் ஏற்படுவதில்லை. எந்த இடத்தில் நல்லதைப் பார்த்தாலும் வெளிப்படையாக பாராட்டுகின்ற குணம் மனிதர்களுக்கு வளரவேண்டும். ஆனால் அது துரதிர்ஷ்டவசமாக குறைந்துகொண்டே வருகிறது.  சிறிய, சிறிய நிகழ்ச்சியாக வேண்டுமானாலும் இருக்கலாம் அல்லது ஒரு சிறிய தொழில் செய்யக்கூடிய மனிதனாக இருக்கலாம். அவன் நேர்மையாக நடந்தால் அவனை ஆதரிக்கவேண்டும். அவன் எங்கிருந்தாலும் சென்று அவனுக்கு அந்தத் தொழில் வாய்ப்பை தரவேண்டும். ஆனால் பெரும்பாலும் மனிதர்கள் எந்த விஷயத்திலும் நல்லவர்களை ஆதரிப்பதில்லை. இதற்கு காரணம் நாங்கள் கூறியதுபோல நல்லவர்களை ஆதரிப்பதால் உடனடியான பலன் யாருக்கும் கிடைப்பதில்லை.

உதாரணமாக இவள் கேட்ட வினாவையே எடுத்துக்கொள்வோம். இந்த நாட்டை ஆள உண்மையாகவே ஒரு நல்லவன் இறைவனால் அனுப்பப்பட்டுள்ளதாகக் கொள்வோம். தலைமை பதவிக்கு அவன் வந்துவிட்டான். அவனுக்குக் கீழே நூறு மந்திரிகள் இருக்கிறார்கள். நூறு மனிதர்களும் நேர்மையானவர்கள், நல்லவர்கள் என்று வைத்துக்கொள்வோம். நூற்றி ஒன்று ஆகிறது. இவர்களுக்கு கீழே நூறு நல்ல அதிகாரிகள் இருப்பதாகக் கொள்வோம்.ஆனால் அடுத்த கணம் ஏனைய நிலையில் உள்ள அனைத்து ஊழியர்களும் நல்லவர்களாக மாறிவிடுவார்களா என்ன ?  ஒரு நல்லவன் மேலே ஏறி அமர்வதால் என்ன நடக்க போகிறது ? கீழே உள்ள அத்தனை பேரும் நல்லவர்களாக மாறப்போகிறார்களா என்ன ? நேற்று வரை கையூட்டு பெற்ற அதிகாரி இன்று ஒரு நல்ல மந்திரி வந்துவிட்டார் என்பதற்காக தன்னை திருத்திக்கொள்ளப் போகிறானா என்ன ? கட்டாயம் திருத்திக்கொள்ளப் போவதில்லை. வேண்டுமானால் சற்றே சாமர்த்தியமாக அந்த தவறை செய்யப் பழகுவானே தவிர தன்னை திருத்திக்கொள்ள மாட்டான்.

அடுத்ததாக தவறான வழியில் செல்லக்கூடிய மனிதர்களுக்கு நிறைய செல்வம் கிடைக்கிறது. அந்த செல்வத்தின் ஒரு பகுதி அவனை அண்டிப் பிழைக்கும் மனிதர்களுக்கு கிடைக்கிறது. எனவேதான் தவறான மனிதர்களை பலரும் ஆதரிக்கிறார்கள். நல்லவர்களால் எந்தவிதமான வெளிப்படையான ஆதாயமும் யாருக்கும் கிடைக்காததால்  ‘ இவனை ஆதரித்து என்ன பயன் ? ‘ என்று எண்ணுகிறார்கள். எனவே நல்லவர்கள் நாடாள வேண்டும் என்ற எண்ணம் கொண்ட மனிதர்கள் முதலில் தன்னை சுற்றியுள்ள நல்லவர்களை மதிக்கட்டும். எந்தத் தொழிலாய் இருந்தாலும் நேர்மையாய் செய்யக்கூடியவர்களை ஆதரிக்கட்டும். அதன் பிறகுதான் நல்லவர்கள் மேலிடத்தில் வருவதற்குண்டான சூழல் ஏற்படும். ஏனென்றால் இப்பொழுது நல்லவர்கள் கூட ‘ நாம் நல்லவர்களாக இருந்தால் பிழைக்க முடியாது போலிருக்கிறது ‘ என்று மெல்ல, மெல்ல நல்ல தன்மையை இழந்து கொண்டிருக்கிறார்கள். எனவே நல்ல எண்ணங்களுக்கும், நல்ல செயலுக்கும் அங்கீகாரம் எப்பொழுது மற்ற மனிதர்கள் தருகிறார்களோ, எந்த சமுதாயம் தருகிறதோ, பயத்தின் அடிப்படையில் மரியாதை வராமல் ஒரு மனிதனின் பண்பின் அடிப்படையில் மரியாதை வந்தால் அந்த சமுதாயம் கட்டாயம் நன்றாக மேலேறும்.   

திருச்செந்தூரில் நமது குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமானுக்கு மார்கழி மாத மஹாஆயில்ய நட்சத்திர விழா




திருச்செந்தூரில், நமது குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமானுக்கு மார்கழி மாத மஹாஆயில்யம் ஜென்ம நட்சத்திரத்தை முன்னிட்டு வரும் 4/1/2018 வியாழக்கிழமை அன்று மூலிகை பொருட்களாலும், மூலிகை சார்ந்த பச்சை வர்ண மலர்களாலும்,அபிஷேகம்,அலங்காரம், ஆராதனைகள் மற்றும் அன்னதானம் அனைத்தும் சிறப்பாக நடைபெற உள்ளது.

அனைவரும் வருக, அருளாசி பெறுக.


புதன், 27 டிசம்பர், 2017

கேரளா வழியாக அகஸ்தியர் கூடம் செல்ல ஜனவரி 5ல் முன்பதிவு ஆரம்பம்.கேரள வனத்துறை அதிகார பூர்வ அறிவிப்பு



அகஸ்திய முனிவர் தவம் செய்த அகஸ்தியர் கூடம் கடல் மட்டத்திலிருந்து 1890 மீட்டர் உயரத்தில் உள்ளது .மேற்கு தொடர்சி மலையில் கேரள வனப் பகுதியான நெய்யார் வனப் பகுதியில் அமைந்துள்ளது. திருவனந்தபுரம் மாவட்டம் போனக்காடு வன எல்லையிலிருந்து 56 கி.மீ தூரம் அடர்ந்த காட்டு பகுதியான மலை ஏறி சன்னதி செல்ல வேண்டும். வருடத்தில் சிவராத்திரி நாள் ஆதிவாசி மக்கள் வழங்கும் சிறப்பு பூஜை பிரசத்தி பெற்றதாகும். சிவராத்திரிக்கு முன்னதாக குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே இப்பகுதிக்கு பொது மக்கள் அனுமதிக்கப்படுவர்.

    2018ம்  ஆண்டிற்கான அகஸ்தியர் கூட புண்ணிய யாத்திரை தற்போது ஆரம்பிக்க உள்ளது. கேரள வனத்துறை அனுமதி பெற்றவர்களை மட்டுமே மலை ஏற முடியும். அடர்ந்த வனப்பகுதி என்பதால் பாதுகாப்பு கருதியும், காட்டுப்பகுதி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதாலும் மக்கள் அனுமதிக்கப்படுவதில் வனத்துறை கட்டுபாடு விதித்துள்ளது. தினம் 100 பேருக்கு  மட்டுமே அனுமதி வழங்கப்படும். இதுவும் குழுக்களாக பிரிக்கப்பட்டு வனத்துறை பணியாளர் தலைமையில் பயணிக்க வேண்டும்.

மிகவும் கடினமான  அகஸ்தியர் கூடம் புண்ணிய யாத்திரைக்கு பெண்கள்  அனுமதி இல்லை 

இதற்க்கு முன் பதிவு வரும் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் தேதி காலை 11:00 மணி முதல் துவங்குகிறது.

serviceonline.gov.in

www.forest.kerala.gov.in

ஆகிய இணைய தளங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்ய கால அவகாசம் உள்ளதால் முன்கூட்டியே தங்கள் கணக்கை பதிந்து வைத்து விடவும்.பின்னர் முன்பதிவு செய்யும் நாளில் உடனடியாக முன்பதிவு செய்யலாம்.  


 கேரள வனத்துறை அதிகார பூர்வ அறிவிப்பு  

  •  கேரள வனத்துறை அதிகார பூர்வ அறிவிப்பின்படி இந்த ஆண்டு பொதிகை பயணம் ஜனவரி14 முதல் பிப்ரவரி 13 வரை நடை பெறும்.
  • அடையாள அட்டை கட்டாயம் கொண்டு வரவேண்டும் 
  • புகை பிடிப்பது மற்றும் மது அருந்துதல் தடை செய்யப் பட்டுள்ளது 
  • பதினான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு  அனுமதி இல்லை 
  •  ஒன்று முதல் ஐந்து நபர்களுக்கு 30ரூபாய் கட்டணம் (ஒரு தலைக்கு) 
  • பத்துக்கு மேற்பட்ட   நபர்களுக்கு 40ரூபாய் கட்டணம்  (ஒரு தலைக்கு) 
  • பத்துக்கு மேற்பட்ட  நபர்களுக்கு அல்லது குழுவாக வருபவர்களுக்கு கைடு வசதி செய்து தரப்படும். 
  • ஒரே நபரே மொத்த குழுவிற்கும் பதிவு செய்யலாம். 


-நன்றி :கேரள வனத்துறை.
  

ஞாயிறு, 17 டிசம்பர், 2017

தூசி கிராமத்தில் ஸ்ரீ அபிராமி சமேத ஸ்ரீ அபிமூர்த்தீஸ்வரர் ஆலயத்தில் அகத்திய பெருமானுக்கு குரு பூஜை விழா



ஸ்ரீ அகத்தியர் ஸ்ரீ உலோபமுத்ரா தேவியருக்கு, முக்தி தரும் நகர் ஏழினுள் முக்கிய நகராம் நகரேஷ { காஞ்சி என்று மகாகவி காளிதாசரால் புகழப் பெற்றதும், சப்த ரிஷிகள் வழிபட்டதும், ஷண்மதத்தில் (ஆறு மதம்) நான்கு மதங்கள் சங்கமிப்பதும் சைவம் - பஞ்சப பூதத் தலங்களுள் ப்ருதி (மண்) ஸ்தலம், சமயக்குரவர்களால் (நால்வர்) பதிகம் பெற்ற தலமும், சாக்தம் - 108 சக்தி பீடங்களில் நாபிஸ்தானமாக விளங்குவதும், வைணவம் - 108 திவ்ய தேசத்தில் பதினைந்து திவ்ய தேசங்களைக் கொண்டதும், கௌமாரம் - கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்தபுராணம் அரங்கேறியதும், ஸ்ரீ அகத்தியருக்கு பங்குனி உத்திர நன்னாளில் சிவபெருமான் பார்வதி தேவியர் தமது திருமண கோலத்தில் காட்சி அளித்ததுமாகிய இத்தகைய காஞ்சிபுரத்தில் உள்ள பாலாற்றங்கரைக்கு அருகில் திருவண்ணாமலை மாவட்டம் தூசி கிராமத்தில் வேண்டியவர்க்கு வேண்டியவற்றை அருளும் அபிராமி உடனுறை அபிமூர்த்தீஸ்வரர் ஆலயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளில் மட்டுமே உள்ள ஸ்ரீ அகத்தியர் - ஸ்ரீ உலோபமுத்ரா தேவி ஆலயம் பழமையை பறைசாற்றும் வகையில, தொன்மைவாய்ந்த கட்டிட கலையில் முற்றிலும் கருங்கற்களால் நிர்மாணிக்கப்பட உள்ளது. எட்டு திசைகளை குறிக்கும் வகையில் எட்டு யானைகள், இந்த ஆலயத்தை தாங்கி நிற்பது போல் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ரிஷிகள், ஞானிகள், யோகிகள் ஆற்றங்கரையோரம் வாசம் புரிவதை கருத்தில் கொண்டு (காஞ்சி ஸ்ரீ மகாபெரியவாள் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமிகள் மணிமண்டபம் அருகில்) அமைந்து உள்ளது.
ஸ்ரீ அகத்திய மாமுனிவர் திரிசடையுடன் அமர்ந்த கோலத்தில் வலது கையில் சின் முத்திரை, ஜபமாலையுடனும், இடது கையில் கமண்டலத்துடனும் காட்சி அளிக்கிறார். ஸ்ரீ உலோபமுத்ரா தேவி அமிர்தகலசம் தாங்கி பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார்.



அத்தகைய ஆலயத்தில் எதிர்வரும் 04-01-2018 அன்று ஸ்ரீ உலோபமுத்ரா தேவி சமேத ஸ்ரீ அகத்தியர் பெருமானுக்கு  குரு  பூஜை நடைப் பெற உள்ளது.அனைவரும் கலந்து கொண்டு குருவருளும் திருவருளும் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் .

  

வெள்ளி, 15 டிசம்பர், 2017

சனிபகவான் பெயர்ச்சி மற்றும் பரிகாரம் பற்றி அகத்திய பெருமான் அருளிய ஜீவ வாக்கு


சனி பகவானின் தாக்குதல் என்றாலே மனிதர்கள் அஞ்சுகிறார்கள். நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மனிதனின் பூர்வீக பாவங்களும் பல்வேறு விதமான பாவங்களும் அன்றாடம் கணத்திற்கு கணம் நவக்ரகங்கள் மூலம் அவன் நுகரும் வண்ணம், அவன் அதற்கு ஏற்ப செயல்படும் வண்ணம் இறைவனால் பரிபாலனம் செய்யப்பட்டு வருகிறது. இவற்றிலே உச்சக்கட்டமாக பெரும்பான்மையான பாவங்கள் கழிவது இஃது போன்ற சனிபகவானின் ஆட்சி காலத்தில்தான். எனவே இது போன்ற தருணங்களில் மனிதன் அச்சத்தை விடுத்து இறை வழிபாடும், கிரக வழிபாடும் செய்வதோடு இயன்றவரை தொண்டினில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதும் லோகாய விஷயங்களைக் கூடுமானவரைக் குறைத்துக் கொண்டு மௌனத்தைக் கடைபிடித்து அதிகமதிகம் தர்ம காரியங்களில் ஈடுபட்டால் கட்டாயம் இந்த காலகட்டத்தில் கூட அமைதியாக வாழலாம். ஆனால் மனிதன் என்ன செய்கிறான் ? அல்லது என்ன எண்ணுகிறான் ?. யாங்கள் பலமுறை கூறியது போல ஒரு கிரகம் ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு செல்கிறதென்றால் அது குறித்து விதவிதமான நூல்கள் எழுதி தனம் பார்க்க வேண்டும் என்று எண்ணுகிறான். அது தொடர்பான ஆலயங்களில் எல்லாம் விழா நடத்த வேண்டும். பூஜை செய்ய வேண்டும். அவற்றிலே எந்த அளவு வரவு வரவேண்டும் என்று பார்க்கிறானே ஒழிய அங்கே மெய்யான பக்திக்கு இடமில்லாமல் போகிறது. ‘குரு பெயர்ச்சி’ என்றால் குருவிற்கு பிரசித்தமான ஸ்தலங்கள் சென்று வணங்க வேண்டும். நாங்கள் மறுக்கவில்லை.

ஆனால் அஃதோடு மட்டும் இருந்தால் குருவின் அருள் கிட்டுமா ? குருவாகிய நிலையில் இருக்கக்கூடிய, அவனுக்கு முழுமையான தகுதி இருக்கிறதோ, இல்லையோ, ஒரு உபதேசம் செய்யும் பணியில் இருந்திருப்பான். பணியை விட்டு விலகியிருப்பான். அல்லது பணியிலே அயர்வு கண்டிருப்பான். அவனுடைய ஊதியம் போதுமானதாக இராது. அவன் குடும்பம் மிகவும் வேதனைப்படும். அது போன்ற மனிதனை தேடிப்பிடித்து முடிந்த உதவிகள் செய்தால், ஏன், குருவின் கடாக்ஷம் கிடைக்காதா ? சனி பகவானின் தொழில் காரகத்துவம் பெறுகின்றவன் யார் என்று பார்த்து, அந்தத் தொழில் செய்பவர்களில் யார் கடினப்படுகிறார் ? என்று பார்த்து உதவி செய்தால், அங்கே சனி பகவானின் அருள் கிட்டாமல் போய்விடுமா ?. செவ்வாயின் அருள் கிட்ட வேண்டுமென்றால் அது தொடர்பான மனிதர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்தால் அஃதொப்ப செவ்வாயின் தோஷம் அகன்று அருள் கிட்டாதா ? குருதி காரகன் என்று சொல்லத் தெரிகிறது. குருதி தானம் என்றால் பயந்து ஓடத் தெரிகிறது.  குருதி தானம் செய்தால் செவ்வாயின் தாக்கம் குறையும் என்பது கூட ஒரு மகான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா ? எனவே, நவக்ரகங்களை நேரடியாக வழிபட்டாலும், நவக்ரகங்கள் மூலமாக செயல்படுத்தப்படும் தொழிலை யார் செய்கிறார்களோ, அவர்களில் யார் மெய்யாக கடினப்படுகிறார்களோ, அவர்களுக்கு அள்ளி, அள்ளித் தருவதாலும் தாராளமாக நவக்ரக தோஷங்கள் விலகும். இதைப் புரிந்து கொண்டால் எந்த கிரகம், எங்கு சென்றால் என்ன ? என்று அச்சப்படாமல் மனிதன் சுகமாக வாழலாம்.

இராகு திசை, சனி திசை, அங்காரக திசைகளில் குழந்தைகள் பெற்றோர்கள் பேச்சைக் கேட்காமல் தீய வழிகளில் செல்கிறார்கள். இதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்


இறைவனின் கருணையைக்கொண்டு நாங்கள் மீண்டும், மீண்டும் வலியுறுத்துவது  நவக்ரகங்கள் நேர்மையான அதிகாரிகள் என்று வைத்துக்கொள்ளலாம். எந்த கிரகத்தையும் தீய கிரகம் என்றும், அசுப கிரகம் என்றும் கூறுதல் மகா பாவம். அவரவர்கள் கடமையை இறைவனின் அருளாணைக்கேற்ப செய்கிறார்கள். ஆக ஒருவனின் விதிப்படி எதை அவன் நுகரவேண்டுமோ அது அவனுக்கு வருகிறது. வெற்றியும், புகழும், நல்ல சுகமும் கிடைக்கும்பொழுது இவையெல்லாம் வேண்டாம் என்று யாரும் கூறுவதில்லை. அதே மனிதனுக்கு திசை மாற்றங்கள், அந்தர மாற்றங்கள் ஏற்படும்பொழுது, சில மாறுபட்ட நிகழ்வுகள், துன்பங்கள் நிகழும்பொழுது “ இறைவா ! என்னால் தாங்கமுடியவில்லை. கிரகங்கள் என்னை பாடாய் படுத்துகிறது “ என்று புலம்புகிறான்.  ‘ அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் ‘ என்ற வழக்கு ( சொல் ) இருக்கிறது. நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். ஒரு மனிதனின் முன் ஜென்ம பாவ, புண்ணியத்திற்கேற்ப கிரகங்கள் செயல்படும் தருணம் ஒரு மனிதனின் அறியாமையில் அமர்ந்துகொண்டுதான் செயல்பட முடியும். எனவேதான் ஒரு மனிதன் இறைவனை நோக்கி “ இறைவா ! எனக்கு செல்வத்தைக் கொடு. இறைவா ! எனக்கு நல்ல பதவியைக் கொடு. இறைவா ! எனக்கு நல்ல ஆரோக்யத்தைக் கொடு. இறைவா ! என் கடனை தீர்த்துவிடு. இறைவா ! என் பிள்ளைகளை நன்றாக வாழ வை “ என்று கேட்பதைவிட, “ இறைவா ! என் அறியாமையை நீக்கிவிடு. இறைவா ! எனக்கு தெய்வீக ஞானத்தைக் கொடு “ என்று வேண்டிக்கொண்டால் அனைத்து பிரச்சினைகளும் அதிலேயே தீர்ந்துவிடும்.

யோகிக்கும் கிரக பலன்களால் நன்மை, தீமைகள் உண்டு. மனிதனுக்கும் உண்டு. ஞானிக்கும் உண்டு. அஞ்ஞானிக்கும் உண்டு. ஞானி துன்பங்களால் கலங்க மாட்டான். அஞ்ஞானிதான் கலங்குகிறான். இருந்தாலும் மனிதர்கள் அனைவரும் எடுத்த எடுப்பிலேயே ஞானியாக முடியாது என்பதற்காகத்தான் சில வழிமுறைகளைக் கூறுகிறோம். பொதுவாக நாங்கள் நேரிய வழியைத்தான் காட்டுவோம். ஆனாலும்கூட கிரகங்களால் மனிதர்கள் அவஸ்தைகளுக்கு ஆளாகி துன்பத்திலே ஆழ்ந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் சில குறுக்கு வழிமுறைகளைக் கூறுகிறோம்.

எத்தனையோ விளக்கங்கள் கூறினாலும் இன்னவள் வினவியதுபோல ஏழரை சனியின் பலனும், அட்டம சனியின் பலனும், அர்த்தாட்டம சனியின் பலனும், ஏனைய இராகு, கேது திசைகளும் பொத்தாம்பொதுவாக தீங்கைத்தான் தருகிறது என்பதை நாங்கள் ஒத்துக்கொள்ள மாட்டோம். நல்ல ஞானத்தையும், நல்ல அனுபவத்தையும்கூட அதன் மூலம் மனிதன் கற்றுக்கொள்ளலாம். இந்த இடத்திலே சுருக்கமாக நாங்கள் கூறுவது என்னவென்றால் இதுபோன்ற தருணங்களில் மனிதன் கூடுமானவரை மனதை தளரவிடாமல் அன்றாடம் ஏதாவது ஒரு ஆலயம் சென்று ஒரு நெய் தீபமாவது ஏற்றவேண்டும். நாங்கள் கூறுவது குறைந்தபட்சம். அதுகூட இயலாதவர்கள் இல்லத்திலே உடல் சுத்தி, உள்ள சுத்தி செய்து குறைந்தபட்சம் இரண்டரை நாழிகை இயன்ற வழிபாடுகளை செய்யவேண்டும். குறிப்பாக நவக்ரக அதிதெய்வ வழிபாடுகளை செய்யவேண்டும். அடுத்ததாக இதுபோன்ற ஒரு சூழல் உள்ளவர்கள், சற்றே பொருளாதாரம் உள்ளவர்கள் குடும்பத் தேவைக்காக ஒரு இல்லத்தை புதியதாக வாங்குவதோ, வாகனத்தை வாங்குவதைப் போன்ற செயல்களில் ஈடுபடாமல், அப்படி வாங்கியதாக எண்ணிக்கொண்டு, அந்த தனத்தையெல்லாம் தக்க ஆலயத்திற்கோ, தக்க ஏழைக்கோ தர்மமாக கொடுத்துவிட்டால், கட்டாயம் கூறுகிறோம், இதுபோன்ற திசா, புத்திகளில் ஒரு மனிதனை துன்பங்கள் அதிக அளவில் தாக்காது.

சுருக்கமாகக் கூறுகிறோம். ஒருவனிடம் சில லகரங்கள் தனம் இருக்கிறது. அவன் ஒரு இல்லம் வாங்கவேண்டும் என்று எண்ணுகிறான். அதை நாங்கள் தவறு என்று கூறவில்லை. சுயமாக இல்லம் இருந்தால் வசதி என்று அவன் எண்ணுகிறான். ஆனால் அப்பொழுது அதை செய்ய உகந்த காலமல்ல. அவன் இல்லம் வாங்கினால் என்னவாகும் ? எல்லா சிக்கல்களும், தொல்லைகளும் அந்த இல்லத்தால் வரும். அந்த தனமும் தேவையில்லாமல் விரயமாகும். ஆனால் அதே தருணத்தில் அந்த தனத்தை சுப விரயம், தர்ம விரயம் செய்துவிட்டால் பாவங்களும் குறையும். அந்த திசா, புத்தி, அந்தரம் முழுவதும் பெரிய அளவிலே அவனுக்கோ, அவன் குழந்தைகளுக்கோ அபாயம் வராமல் இருக்கும். இது ஒன்றுதான் சுருக்கமான வழிமுறையாகும். ஆனால் மனிதன் என்ன எண்ணுகிறான் ? அன்றாடம் திறமையாக வாழ்கிறேன் என்று தனத்தை சேர்த்து வைத்துக் கொள்கிறான். கனகத்தை சேர்த்து வைத்துக் கொள்கிறான். விலை ஏறுகிறது என்று மேலும், மேலும் ஆங்காங்கே மனைகளை வாங்குகிறான். இதை தவறு என்று கூறவில்லை. ஆனால் எமது வழியில் வரவேண்டும், கிரகங்களால் பாதிக்கப்படாமல் இருக்கவேண்டும் என்றால் குறைந்தபட்ச தேவைகளோடு வாழ்ந்துகொண்டு, ஏனைய தேவைகளையெல்லாம், யார், யாருக்குத் தேவையோ அவர்களுக்கு தாராளமாக பெருந்தன்மையோடு அளித்துவிட்டால், கட்டாயம் யாம் இறைவனருளால் கூறுகிறோம், ஏழரை சனியோ, அட்டம சனியோ, அர்த்தாட்டம சனியோ அல்லது வேறு, இவள் கூறியதுபோல, உகந்தது அல்லாத திசா, புத்திகள், ஏற்புடையது அல்லாத திசா, புத்திகள் எந்தவிதமான கெடுபலனையும் மனிதனுக்கு செய்யாது. தர்மத்தின் உச்ச நிலைக்கு எவன் செய்து விட்டானோ அவனிடம் கிரகங்கள், தன்னுடைய அருளாணையை, இறைவன் அருளாணையை முழுமையாக செலுத்தாது. அவனுக்கும் துன்பம் வரும். அதைத் தாங்குகின்றது அவன் செய்த தர்மம் என்பதால் அந்த துன்பத்தை அவன் உணர இயலாமல் போய்விடும்.

வியாழன், 14 டிசம்பர், 2017

ஞானம் பற்றி புரிந்து கொள்ள செல்ல வேண்டிய ஆலயம் பற்றி அகத்திய பெருமான் அருளிய ஜீவ வாக்கு



இறைவனின் கருணையால், நீக்கமற நிறைந்துள்ள பரப்பிரம்மம்,பரம்பொருள், தனிமனித ஆன்ம மேம்பாட்டிற்காக மகான்களும்,ஞானிகளும் வகுத்துக் கொடுத்த வழியிலே கட்டப்பட்டு,இறைவன் கருணையால் எழுப்பப்பட்டுள்ள ஆலயத்திலே குடிகொண்டு,வருகின்ற நன் மக்களுக்கு நல்லதொரு அருளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது.எந்த ஆலயம் சென்று,எந்த விதமான பிரார்த்தனையை வைத்தாலும் அல்லது எந்தவிதமான பிரார்த்தனையும் வைக்காமல் பொதுவாக சென்று வந்தாலும்,ஒவ்வொரு மனிதனுக்கும் கட்டாயம் நன்மைகள் உண்டு.அஃதொப்ப நிலையிலே மனித மனம் எஃதாவது ஒன்றை பிடித்துக் கொண்டு,எப்படி ஒரு குழந்தை நடை பயில,நடை வண்டி தேவைப்படுகிறதோ,அப்படி சராசரி பக்தி கொண்ட மனிதன் மேலே வருவதற்கு எஃதாவது ஒன்றை பிடித்துக்கொண்டு வரவேண்டும் என்பதற்காகத்தான் புராண சம்பவங்களும்,சரித்திர சம்பவங்களும்,விதவிதமான ஆலயங்களும்,அந்த ஆலயங்களுக்கு உண்டான தாத்பர்யங்களும்.அதற்காக களத்திர தோஷம் நீக்க வேண்டிய ஆலயத்திற்கு சென்று,”எனக்கு நோய் அதிகமாக இருக்கிறது.எனக்கு அந்த நோயை நீக்கிக்கொடு இறைவா! என்று வேண்டக்கூடாது”என்று பொருள் அல்ல.

பொதுவாக இப்படியெல்லாம் கூறும்பொழுது,அப்படியாவது,அந்த குறிப்பிட்ட நோக்கத்திற்காகவாவது மனிதன் அந்த ஆலயத்திற்கு செல்லட்டுமே என்பதுதான்.அஃதொப்ப கிரக நிலை கொண்ட மனிதர்கள் அந்த ஆலயத்தின் மண்ணை மிதிக்கும்பொழுது தோஷங்கள் குறையட்டும் என்பதற்காகவும் இஃதொப்ப விதவிதமான ஆலயங்கள் எழுப்பப் பட்டுள்ளது.பெரும்பாலும் ஒரே ஆலயம்,சராசரி மனிதன் செல்லும்பொழுது உலகியல் தேவையை தரும் தருவாகத்  தோன்றுகிறது.அதே ஆலயத்திற்கு ஓரளவு பற்றை விட்ட ஞானி செல்லும்பொழுது முக்தியை நல்குகின்ற ஆலயமாக தோன்றுகிறது.எனவே இருப்பது அஃதொப்ப ஒரே ஆலயம்தான்.செல்லுகின்ற பக்தர்களின் எண்ண ஓட்டத்திற்கு ஏற்ப,மனோ நிலைக்கு ஏற்ப,மனோ தர்மத்திற்கு ஏற்ப,மன பக்குவத்திற்கு ஏற்ப அந்த மனிதனுக்கு நல்லருளை வழங்குகிறது.’எஃதும் வேண்டாம்.இறைவா!நீதான் வேண்டும்” என்று வேண்டுகின்ற  உள்ளங்கள் ஆலயம் செல்லும்பொழுது அஃது எந்த நோக்கத்திற்காக எழுப்பப்பட்டுள்ள ஆலயமாக இருந்தாலும் அஃதொப்பவே நலம் நடக்கிறது.நீ கூறிய ஆலயமும் இப்படி பன்முக கருத்து அமைந்த ஆலயம்தான்.இருந்தாலும் ஞானப் பசி கொண்டவனுக்கும்,இறை ஞானம் புரியாமல் அதே சமயம் அதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவனுக்கும் உகந்த ஆலயம் ஆகும்.நீ அறிந்த மற்ற சிறப்புகளும் உண்டு.(அவையும்) உண்மையே.

அருள்மிகு ஞானாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில்


இக்கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அய்யம்பேட்டை அருகேயுள்ள சூலமங்கலம் என்னுமிடத்திற்கு அருகே புரசக்குடி என்னுமிடத்தில் அமைந்துள்ளது.

இறைவன், இறைவி

இக்கோயிலின் மூலவராக காளஹஸ்தீஸ்வரர் உள்ளார். இறைவி ஞானாம்பிகை எனப்படுகிறார்.

அமைப்பு

வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது பலி பீடம், நந்தி ஆகியவை காணப்படுகின்றன. அதனை அடுத்து உள்ளே செல்லும்போது மூலவர் சன்னதி கிழக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. அம்மன் சன்னதி தெற்கு நோக்கிய நைலயில் உள்ளது. காசி விசுவநாதர் மற்றும் விஸ்வக்ஞானர் என்றழைக்கப்படுகின்ற இரு லிங்கத் திருமேனிகள் உள்ளன.இக்கோயிலில் பைரவர், சூரியன், சந்திரன், சனீசுவரர், ஆஞ்சநேயர், விநாயகர், வரதராஜப் பெருமாள், முருகன், சண்டிகேசுவரர் ஆகியோர் உள்ளனர். தேவகோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி உள்ளார். இங்குள்ள தட்சிணாமூர்த்தி சிற்பத்தின் இடப்புற காலுக்கு கீழ் ஓர் அடியவர் காணப்படுகிறார். அந்த அடியவர் இரு கரங்களைக் கூப்பிய நிலையில் தட்சிணாமூர்த்தியை வணங்கும் கோலத்தில், இடுப்புக்குக் கீழே ஆடை அணிந்த நிலையில் காணப்படுகிறார். இச்சிற்பம் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தைச் சார்ந்தது என்று கூறுகின்றனர்.

ஞானம் பெற இங்குள்ள ஞானாம்பிகையை வழிபடுவதும், இங்குள்ள தட்சிணாமூர்த்தி விக்கிரகத்தின் இடப்புறக் காலுக்குக் கீழ் அடியவர் சிற்பம் ஒன்று உள்ளதும் தலத்தின் சிறப்பு.

திருவிழாக்கள்

அன்னாபிஷேகம், பிரதோஷம், சிவராத்திரி போன்ற விழாக்கள் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

முகவரி
 
 அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில், அய்யம்பேட்டை சூலமங்கலம் தொலைவில் புரசக்குடி, கும்பகோணம், தஞ்சாவூர்.

தொடர்புக்கு :+91 99411 28535, 90252 58547

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

செவ்வாய், 12 டிசம்பர், 2017

கும்பகோணம் ஸ்ரீ அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ அகத்திய பெருமானுக்கு குருபூஜை


ஆன்மிக பெருமக்களே !

கோயில் நகரம் என்று அழைக்கப்படும் கும்பகோணத்தில் எண்ணற்ற ஆன்மிக ஞானிகள் தவம் புரிந்துள்ளனர்.அவர்களில் சைவத்தை பரப்புவதில் சிறந்தவரும் 18 சித்தர்களில் முதன்மையானவருமான  ஸ்ரீ அகத்திய பெருமானுக்கு நிகழும் மங்களகரமான ஹேவிளம்பி வருடம் மார்கழி மாதம் 20-ம் நாள் (04-01-2018) வியாழக்கிழமை ஆயில்ய நட்சத்திர தினமான அன்று காலை விசேஷ ஹோமம் ,அபிஷேகம், அன்னதானம், மற்றும்  மாலை சித்தர் திருவீதி உலாவும் நடைப் பெற உள்ளது.

பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ கும்பமுனி அருள் பெற வேண்டுகிறோம் . 

ஸ்ரீ அகத்திய பெருமான் ஆணைப்படி உலகப் பொது நன்மைக்காக திருவாசி அருள்மிகு பாலாம்பிகை சமேத மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோவிலில் மகா யாகம்

அன்பர்களுக்கு பணிவான வணக்கங்கள்.

ஸ்ரீ அகத்திய பெருமான் ஆணைப்படி, உலக பொது நன்மைக்காக, திருவாசி என்ற திருத்தலத்தில், அருள்மிகு பாலாம்பிகை சமேத மாற்றுரைவரதீஸ்வரர் ஆலயத்தில் 24 -12- 2017 ஞாயிற்று கிழமை அன்று  தஞ்சாவூர் சித்தர் அருட்குடில் சார்பாக ஆராதனைகளும், யாகங்களும் நடைபெறவுள்ளது.

காலை 6.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை கீழ்கண்ட பூஜைகளும், யாகங்களும் நடைபெறும்.

-          கணபதி யாகம்
-          ஸுப்ரமணயர் யாகம்
-          தன்வந்தரி யாகம்
-          ம்ருத்யுஞ்செய யாகம்
-          நவகிரஹம யாகம்
-          பாலாரிஷ்ட யாகம்
-          12 ராசியாதிபதிகளுக்கு கலச பூஜை.

அனைவரையும் இந்த சிறப்பான யாக பூஜையில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

திருவாசி அருள்மிகு பாலாம்பிகை சமேத மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோவில் தல வரலாறு



இப்பகுதியை ஆண்டு வந்த கொல்லிமழவனின் மகளுக்கு முயலகன் (வலிப்பு நோய்) எனும் தீராத நோயிருந்தது. மன்னன் எவ்வளவோ வைத்தியம் செய்து பார்த்தும் மகளை குணப்படுத்த முடியவில்லை. எனவே, பெரியவர்களின் ஆலோசனைப்படி, பெருமான் அருள் புரியும் கோயிலில் அவளைக் கிடத்தி, அவள் பிணியை குணப்படுத்தும் பொறுப்பை பெருமானிடமே விட்டுவிட்டுச் சென்றான். அச்சமயத்தில் திருஞானசம்பந்தர் பல தலங்களை தரிசனம் செய்து கொண்டு மழவ நாட்டைச் சார்ந்த திருப்பாச்சிலாச்சிராமம் என்ற இத்தலத்திற்கு எழுந்தருளினார். இதையறிந்த மன்னன் அன்புடன் சம்பந்தரை வரவேற்றுத் தன் மகளின் நோயை நீக்கியருள வேண்டினான். அருள் உள்ளம் கொண்ட சம்பந்தர் சிவனை வேண்டி துணிவளர் திங்கள் துளங்கி விளங்க எனும் பதிகம் பாடி இறைவனை வணங்க நோய் நீங்கி மன்னன் மகள் குணமடைந்தாள். சிவபெருமான் அவளது நோயை ஒரு பாம்பாக மாற்றி, அதன் மீது நின்று ஆடினார். இதன் அடிப்படையில் இங்குள்ள நடராஜர் காலுக்கு கீழே முயலகன் உருவம் இல்லாமை அறியத்தக்கது. திருவடியின் கீழ் அதற்குப்பதில் ஒரு உள்ள சர்ப்பத்தின் மீது நடனமாடுகின்றார். நரம்புத் தளர்ச்சி, வாதநோய், வலிப்பு நோய், சர்ப்ப தோஷம், மாதவிடாய் பிரச்னைகள் முதலியன இத்தல இறைவனை வழிபட குணமாகும். இவ்வாலயத்திலுள்ள ஆவுடையாப்பிள்ளை மண்டபத்தில் கொல்லி மழவன் மகளுக்கு சம்பந்தர் நோய் நீக்கிய வரலாற்றை விளக்கும் சிற்பங்கள் உள்ளன.

இத்தலத்தில் இறைவன் மாற்றுரைவரதீஸ்வரர் என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ளார். இறைவன் இந்த பெயர் பெறக் காரணமாக உள்ள வரலாறு சுவையானது. இத்தலம் வந்த சுந்தரர், சிவனிடம் பொன் கேட்டார். அவரை சோதிப்பதற்காக சிவன் பொன் தரவில்லை. கோபம் கொண்ட சுந்தரர், "சிவன் இருக்கிறாரா, இல்லையா" என்ற அர்த்தத்தில் இகழ்ந்து வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும் என்று தோடங்கும் பதிகம் பாடினார். பதிகத்தின் கடைசி பாடலில் "திரு நாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் இவரைப் பேசிய பேச்சுக்கள், உண்மையில் ஏசினவும் அல்ல, இகழ்ந்தனவும் அல்ல, ஆதலின், அவைகளை இவர் பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும், அது செய்யாராயினும், அடியேனது பிழைகளைப் பொறுத்து ஆளும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை" என்று குறிப்பிடுகிறார். சிறிதுநேரம் கழித்து சுந்தரருக்கு காட்சி தந்த சிவன், பொன் முடிப்பு தரவே, அந்தப் பொன் தரமானது தானா என்ற சந்தேகம் சுந்தரருக்கு வந்தது. அப்போது அங்கு வந்த இரண்டு வணிகர்கள் தங்கத்தை சோதித்துத் தருவதாகச் சொல்லி வாங்கிக் கொண்டனர். ஒருவர் பொன்னை உரைத்துப் (சோதித்து) பார்த்துவிட்டு, பொன் தரமானதுதான் என்றார். உடன் வந்தவரும் அதை ஆமோதித்தார். பின் இருவரும் மறைந்து விட்டனர். சுந்தரர் வியந்து நின்றபோது, சிவனே வணிகர் வடிவில் வந்து உரைத்து காட்டியதையும், மகாவிஷ்ணு அவருடன் வந்ததையும் உணர்த்தினார். தங்கத்தை உரைத்துக் காட்டியதால் சிவனுக்கு "மாற்றுரைவரதர்' என்ற பெயர் ஏற்பட்டது.

இவ்வாலயம் ஒரு 5 நிலை இராஜகோபுரத்துடனும், இரண்டு பிராகாரங்களுடனும் விளங்குகிறது. இத்தலத்தில் சுவாமி ருத்ராட்ச பந்தலின் கீழ் சுயம்பு லிங்கமாக அருளுகிறார். இராஜகோபுரத்தின் கீழே அதிகார நந்தி, மனைவியுடன் இருக்கிறார். இங்குள்ள நவக்கிரக சந்நிதியில் சூரியன் தன் மனைவியர் உஷா, பிரத்யுஷாவுடன் இருக்க மற்ற கிரகங்கள் அனைத்தும் அவரை பார்த்தபடி உள்ளன. திருவாசியில் வசித்த கமலன் என்னும் வணிகனுக்கு மகளாகப் பிறந்த அம்பிகை, சிவனை வேண்டி தவமிருந்து, அவரை மணந்தாள். இவள் இத்தலத்தில் பாலாம்பிகை என்ற பெயரில் எழுந்தருளியுள்ளாள். அர்த்தஜாமத்தில் இவளுக்கே முதல் பூஜை நடக்கும். அம்பாள் சன்னதி எதிரே செல்வ விநாயகர் இருக்கிறார். அருகில் அன்னமாம்பொய்கை தீர்த்தம் இருக்கிறது. அம்பாள் சன்னதி முகப்பில் இரண்டு துவாரபாலகியர் உள்ளனர். திருமணமாகாத பெண்கள் நல்ல வரன் அமையவும், திருமணத்தடை உள்ளவர்கள் தடை நீங்கவும் இவர்களுக்கு மஞ்சள் கயிறு கட்டி பிரார்த்திக்கின்றனர். குழந்தையில்லாத பெண்களும் இவர்கள் முன் தொட்டில் கட்டுகின்றனர். துவாரபாலகியர் மூலமாக பக்தர்களின் கோரிக்கைகளை அம்பாள் ஏற்றுக் கொள்வதாக ஐதீகம். குழந்தைகளுக்கு ஏற்படும் பாலாரிஷ்ட தோஷம் நீங்க அம்பிகைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.

திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடப்பட்ட இத்தலத்தில் வைகாசி விசாகத்தில் திருத்தேர் உலா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இங்கே சுவாமிக்கு தினசரி நான்கு கால வழிபாடுகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து 48 நாட்கள் இத்தலத்திலுள்ள நடராசருக்கு அர்ச்சனை செய்து வந்தால் தீராத நோய்கள், வயிற்று வலி, பித்தம், வாதம் போன்ற நோய்கள் நீங்கப் பெறலாம். கோயிலில் உள்ள மாற்றுரைவரதேஸ்வரரை திங்கள் கிழமைகளில் இலுப்பை, நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பொருளாதார நிலை உயரும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

திருச்சியில் இருந்து முசிறி செல்லும் சாலையில் சுமார் 14 கி.மி. தொலைவில் திருவாசி என்கிற பேருந்து நிறுத்தம் வரும். அங்கிருந்து ஊருக்குள் செல்லும் ஒரு கிளைச் சாலையில் சுமார் 1/2 கி.மி. செல்ல இந்த சிவஸ்தலம் ஆலயத்தை அடையலாம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவாசி செல்ல நகரப் பேருந்து வசதி உள்ளது.

ஆலய முகவரி:

அருள்மிகு மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில்
திருவாசி
வழி பிச்சாண்டார் கோவில்
திருச்சி மாவட்டம்
பின் கோட் - 621216



மோக்ஷ தீபத்தின் சிறப்பைப் பற்றி அகத்திய பெருமான் அருளிய ஜீவ வாக்கு

ஒரு தில யாகத்தின் பலன் இதில் கிடைக்குமப்பா. ஒவ்வொரு குடும்பத்திலும் வாழ்ந்து மறைந்த முன்னோர்களின் ஆத்மா எந்த நிலையில் இருந்தாலும் அதை சற்றே ஒரு படியாவது உயர்த்துவதற்கு இந்த மோக்ஷ தீப கூட்டு வழிபாடு உதவும். ஆன்மா சாந்தி பெறுவதற்கும் அல்லது மீண்டும் ஒரு நல்ல பிறவி எடுப்பதற்கும், அந்த குடும்பத்தில் உள்ள சாபங்கள் தீர்வதற்கும் இந்த வழிபாடு உதவும். உதவிக்கொண்டு இருக்கிறது. ஆனாலும் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் இறைவனின் அருளாணையால்தான் இப்பொழுது பல இடங்களில் அவற்றை நிகழ்த்த வேண்டாம் என்று நாங்கள் நிறுத்தி வைக்க அருளாணையிட்டிருக்கிறோம். எனவே இதை வேறுவிதமாக எண்ணிவிட வேண்டாம். அஃதொப்ப மட்டுமல்லாது இஃதொப்ப எம் தாரத்தின் மண்ணிலே நீ செய்து வந்த மோக்ஷ தீப வழிபாடு சிறப்பாக இருந்தாலும் கூட பல்வேறு இடர்பாடுகளையெல்லாம் விதிப்படி சந்திக்க வேண்டும் என்பதால்தான் நாங்கள் அதை அமைதிப்படுத்தியிருக்கிறோம். ஆனாலும் அதற்காக நீ கலங்க வேண்டாம்.  மற்ற இடங்களில் நடக்கும் வழிபாடுகளில் நீ கலந்து கொள்ளலாம். மற்ற சேவைகளை நீ தொடர்ந்து செய்து கொண்டே இரு.

திருச்சி உய்யகொண்டான் திருமலையில்  மோட்ச தீபம்


10 வருடமாக திருச்சி உய்யகொண்டான் திருமலையில் அமாவாசை தோறும் மோட்ச தீபம் ஏற்றப்படுகிறது. பல ஆன்மாக்கள் இதன் மூலம் இறை பாதம் சென்று அடைந்துள்ளன. இதனை தொடர்ந்து செய்ய சொல்லி உள்ளார். இதில் கலந்து கொண்டால் பித்ரு தோசம் நீங்கும். பல தலைமுறையில் உள்ள ஆன்மாக்கள் மோட்ச கதி அடையும் என கூறியுள்ளார்.

தஞ்சாவூர் சித்தர் அருட்குடில் (கணேசன் அய்யா) & திருச்சி ததீசி அகமும்  இணைந்து இதையும் மற்றும் பல்வேறு அற பணிகள் செய்து வருகிறார்கள்.

அவற்றில் சில

  • 500 வாரத்திற்கும் மேலாக செவ்வாய்க்கிழமை திருச்சியை சுற்றி முருகர் அபிசேகம் செய்கிறார்கள். 
  • வருடத்திற்கு 4அல்லது 5 முறை கோவில்களுக்கு சிறப்பு  அபிசேகம் நடத்தப்படுகிறது.
  • அனாதை பிணங்கள் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
  • ஏழைகளுக்கு இலவச திருமணம் செய்யப்படுகிறது.
  • முதியோர் அனாதை இல்லங்களுக்கு உணவு உடை போன்றவை  செய்யப்படுகிறது.
  • ரோட்டோரம் இருப்பவர்களுக்கு வாரம் தோறும் உணவு அளிக்கப்படுகிறது.


இந்த மாதம் 17-12-2017அமாவாசை அன்று மாலை திருச்சி உய்யகொண்டான் திருமலையில்  மோட்ச தீபம் ஏற்றப்படுகிறது.

ஆகவே இயன்ற போதெல்லாம் அன்பர்கள் மோட்ச தீப நிகழ்வில் கலந்து கொண்டு  மற்ற பணிகளிலும் அனைவரும் பங்கு கொண்டு இறையருள் பெற்று இன்புற்று வாழ வேண்டுகிறோம்

கோவில் முகவரி :

அருள்மிகு உஜ்ஜீவநாதர் திருக்கோயில், திருக்கற்குடி, உய்யக்கொண்டான் மலை-620 102 ,திருச்சி மாவட்டம்.

செவ்வாய், 5 டிசம்பர், 2017

ஸ்ரீ கோரக்க மஹரிஷி குரு பூஜை விழா





ஆன்மிக அன்பர்களே,வணக்கம் 

சோழ திருநாட்டில் மணிமுத்தா நதிக்கரைக்கு வடக்கே 3கிலோ மீட்டர் தொலைவில் மூகாசபரூர் என்ற கிராமத்தில் அருள்பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீ அன்னபூரணி உடனுறை விஸ்வநாதர் திருக்கோவிலில்,சிரஞ்சீவி வரம் பெற்ற கோரக்கர் சித்தர் ஜீவ சமாதி உள்ளது.இத்திருக்கோவிலில் உள்ள விஸ்வநாதரை கோரக்க சித்தர் தன் திருக்கரங்களால் பிரதிஷ்டை செய்தும் பூஜை செய்தும் வந்துள்ளார்.

இத்திருக்கோவிலில் ஜீவ சமாதி அடைந்த மஹான் ஸ்ரீ  கோரக்கர் சித்தர் பெருமானுக்கு குருபூஜை நிகழும் மங்களகரமான ஹேவிளம்பி வருடம் கார்த்திகை மாதம் 22ம் தேதி வெள்ளிக்கிழமை (08-12-2017) அன்று நடைப் பெற உள்ளது.குருபூஜையில் கலந்து கொண்டு கோரக்கர் சித்தர் அருள் பெற்று எல்லா நலமும் பெற அன்புடன் அழைக்கின்றோம்.

கோரக்க மஹரிஷி வரலாறு 


சிவபெருமான் உமாதேவிக்கு கடற்கரையில் தாரக மந்திரத்தை உபதேசித்தபோது தேவி கண்ணயர்ந்திருக்க மீன் குஞ்சு ஒன்று அதைக் கேட்டு மீன் வடிவமாகியது. சிவன் அதை மச்சேந்திரன் எனப்பெயரிட்டு ஞானத்தை அருள் புரிய அனுப்பினார். ஓர் ஊரில் இவருக்கு மனக்குறையுடன் ஒரு பெண் பிச்சை போட்டதை யோகத்தால் அறிந்து அவள் மகப்பேறு இல்லாமல் வருந்துவதைக் கேட்டு அறிந்தார்.

மச்சேந்திரர் அந்தப் பெண்ணிடம் சிறிது திருநீறு கொடுத்து இதனை நீ உட்கொள்வாயானால் மகட்பேறு அடைவாய் என்றார், அவள் திருநீறு பெற்றதை கேட்ட பக்கத்து வீட்டுப்பெண் அது போலியாக இருக்கும் என்று சொல்லியதால் அடுப்பில் போட்டுவிட்டாள். சில ஆண்டுகள் கழித்து அவ்வூருக்கு வந்த மச்சேந்திரர் அப்பெண்ணை அழைத்து உன் மகனைக்கூப்பிடு என்றவரிடம் தான் பக்கத்துவீட்டுபெண் பேச்சைக்கேட்டு அதை அடுப்பில் போட்டதாகக் கூற மச்சேந்திரர் அந்த அடுப்பு இருந்த பக்கம் சென்று ‘கோரக்கா’ எனக் கூப்பிட்டார். மச்சேந்திரர் நீறு கொடுத்த காலம்முதல் இது வரை என்ன வளர்ச்சியிருக்குமோ அதே வளர்ச்சியுடன் ஒரு சிறுவன் கப்பதார அடுப்புச் சாம்பலிலிருந்து வந்தவனை சீடராக்கிக் கொண்டார்.

ஒருநாள் கோரக்கர் பிச்சை எடுக்கும்போது ஓர் பெண்மணி வடை ஒன்றை அளிக்க அதை தன் குருநாதரிடம் அளித்தார். அடுத்த நாளும் அதே போல் வடைவேண்டும் என குருநாதர் கேட்க, வடைதந்த வீட்டிற்கு சென்று வடை கேட்டார். அந்தப் பெண் வடை இல்லை. தினமும் வடை சுட முடியுமா. இன்று தயிர்சாதம் தான் இருக்கின்றது என்று சொல்ல, கோரக்கர் என் குருநாதர் வடைதான் கேட்டார் என்றார். அந்த பெண் வடை என்பதால் பரவாயில்லை. இதுவே அவர் உன் கண்ணைக் கேட்டிருந்தால் கொடுத்திருப்பாயா என்றாள். அதற்கு கோரக்கர் என் குருநாதர் எதைக் கேட்டாலும் நான் தருவேன் என்று தன் கண்ணை பெயர்த்து அப்பெண்ணிடம் கொடுத்து அதற்கு பதிலாக வடை கேட்டார். அவரின் உணர்சியைக் கண்ட அப்பெண் வடைகளை சுட்டு தந்தாள். வடையைச் சுவைத்த மச்சேந்திரர் கோரக்கா உன் கண் என்ன வாயிற்று என்றார். கோரக்கர் நடந்ததைக் கூறினார். கோரக்கரின் அன்பை அறிந்த மச்சேந்திரர் அவருக்கு மீண்டும் கண்வரச் செய்தார்.

மச்சேந்திரர் மலையாள நாட்டிற்கு சென்று அந்நாட்டு அரசி பிரேமலா என்பவரை மணந்து இல்வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தார். அவர்களுக்கு மீனநாதன் என்ற குழந்தை பிறந்தது. இதனை அறிந்த கோரக்கர் அங்கிருந்து தன் குருவை எப்படியும் கூட்டி வந்துவிட வேண்டும் என மலையாள நாட்டை அடைந்தார். குருவைப் பார்த்து குருவே புறப்படுங்கள் நம் இருப்பிடம் செல்வோம் என்றார். வழிச்செலவிற்கு என பிரேமலா ஒரு தங்கக் கட்டியை மச்சேந்திரரிடம் கோரக்கருக்குத் தெரியாமல் கொடுத்தார்.

வழியில் எதிர்பட்டவர்களிடம் இங்கே கள்வர் பயம் உண்டோ எனக் கேட்டுக் கொண்டே சென்றார் மச்சேந்திரர். இதைக் கவனித்த கோரக்கர் குரு அறியாமல் அந்த தங்ககட்டியை எடுத்து வீசீனார். அதற்கு பதில் ஒரு செங்கல்லை வைத்தார். ஒருநாள் பையைத்திறந்த மச்சேந்திரர் செங்கல்லைக் கண்டு கோரக்கர் மீது கோபமுற்றார். என்னுடைய பொருளை கைப்பற்றிய நீ என்னுடைய சீடனல்ல. இனி நீ என்னுடன் சேராதே என்றார்.
குருவை நல்வழிப்படுத்த எண்ணிய கோரக்கர் ஒரு சிறிய மலைமீது ஏறி சிறு நீர் கழித்தார். அந்தமலை தங்க மலையானது. கோரக்கர் குருவைப்பார்த்து தங்களுடைய பொருளை எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். அறியாமையில் உலன்ற மச்சேந்திரரைப் பிடித்த மாயை விலக மனம் தெளிவு பெற்று சீடரைப் பாராட்டினார். எனினும் கோரக்கர் தனியே பிரிந்து சென்று தவம் புரிந்து அஷ்டமாசித்திகளையும் காய சித்தியையும் பெற்றார்.
கோரக்கர் திருக்கயிலை சென்றார். அங்கு எதிர்பட்ட ஒருவரை (அல்லாமாதேவர்) நீங்கள் யார் என்றார். அவர் இறந்து போகும் உடலில் பற்று கொண்டுள்ளவரை மதித்து சொல்லத்தக்கது ஒன்றுமில்லை என்றார். கோரக்கர் நான் குருவின் அருளினால் காயசித்தி பெற்றவன் என்றார். அல்லாமாதேவரோ காய சித்தி வாழும் நாளைத்தான் அதிகமாக்கும் அன்றி நிலைத்திருக்க உதவாது, இதை அழியா உடல் எனக்கூறுவது வீண் என்றார்.
வீண் தர்க்கம் வேண்டாம். இதோ நிறுபித்துக் காட்டுகின்றேன் எனக்கூறி அல்லாமாதேவரிடம் ஓர் வாளினைக் கொடுத்து உன் தோள் வலிமையால் என்னை வெட்டு என்றார். அல்லமர் வெட்ட உடலின் மீது பட்டவாள் கிண் என்ற ஒலியுடன் தெரித்தது. உடம்பில் எந்த காயமும் ஏற்ப்படவில்லை. நல்லது நீ உன் திறமையை நிரூபித்தாய். இதோ இவ்வாளினால் உன் வலிமையுடன் நீ என்னை வெட்டு என்றார்.

கோரக்கர் வெட்ட வாள் அல்லமரின் உடலில் புகுந்து வந்தது. வெட்டும்போது காற்றை வெட்டுவது போலிருந்தது. கோரக்கர் உண்மை உணர்ந்து தன்னைவிட சக்தி மிகுந்த அல்லாமாதேவரை வணங்கி தன் தவறை ஒப்புக்கொண்டான். உடம்பிலுள்ள பற்றைநீக்கி உனது உண்மை நிலையை அறிவாய் என்றார்.
கோரக்கர் வரதமேடு எனும் காட்டினுள் தவம் செய்யச் சென்றபோது பிரம்ம முனியைச் சந்தித்து நண்பர்களாயினர். இருவரும் தவம் செய்து அரிய சித்திகளை அடைந்து ஐந்தொழிலை இயக்கும் ஆற்றல்பெற யாகம் செய்யத்தொடங்கினர். யாகத்திலிருந்து இரண்டு அழகான பெண்கள் வந்தனர். அப்போது அங்கு வந்த அக்னியும் வாயுவும் அப்பெண்களை மோகித்து நின்றனர். யாகத்தை தடைசெய்த அந்த அப்பெண்கள்மேல் கோபங்கொண்டு கமண்டல நீரைத் தெளிக்க ஒருபெண் புகையிலை (பிரம்மபத்திரம்) செடியாகவும் மற்றொருத்தி கஞ்சா செடியாகவும் மோகித்த அக்னியும் வாயுவும் நெருப்பும் நீருமாக மாறி அச்செடிகளுடன் சேர்ந்தனர். சிவபெருமான் தோன்றி இறந்தவர்களை பிழைக்க வைக்கும் சக்தி உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் உண்டாக்கிய இந்த செடிகள் மூலிகைகளாகத் திகழும் என்றார்.

கோரக்கர் தான் அறிந்த ஞானங்களையெல்லாம் வெளிப்படையாகப் பாடினார். அந்த நூல்கள் தீயவர்களிடம் கிடைத்து விடக்கூடாது என்று நினைத்த சித்தர்கள் அவரது ஆசிரமத்திற்கு வந்தனர். கோரக்கர் அரிசியுடன் கஞ்சாவைச் சேர்த்து அடை செய்து சித்தர்களின் கண்ணில் படும்படியாக வைத்தார். அதனை சாப்பிட்டவர்கள் மயங்கினர். அப்போது முக்கியமான நூல்களை எடுத்து மறைத்து வைத்தார். சித்தர்கள் எழுந்து கிடைத்ததை எடுத்துச் சென்றனர்.

கோரக்கர் சந்திரரேகை, நமநாசத்திறவுகோல், ரக்ஷமேகலை, முத்தாரம், மலைவாக்கம், கற்பம், முத்திநெறி, அட்டகர்மம், சூத்திரம், வசார சூத்திரம், மூலிகை, தண்டகம், கற்பசூத்திரம், பிரம்ம ஞானம் முதலிய நூல்களை எழுதினார். கோரக்கர் வைப்பு என்பதில் சரம்பார்க்க ஆசனவிதி, சரம்பார்க்கும் மார்க்கம், போசன விதி, கருப்பக் குறியின் முறை, நாடிகளின் முறைமை முதலியன பற்றி குறிப்பிடப்பட்டுள்ளனர்.

ஸ்ரீ ஈஸ்வர பட்டர் சுவாமிகளின் குரு பூஜை விழா


ஈஸ்வர பட்டர் சுவாமிகள் கர்நாடகா மாநிலத்தில் ஈஸ்வரமங்களம் என்ற கிராமத்தில் பிறந்தார். பிறந்து சில மாதங்களிலேயே அவரது தந்தையார் காலமானார். பின் அவரது ஆரம்பக் கல்வி காலகட்டத்தில் அவரது தாயாரும் மரணமடைந்தார். இவ்வாறு எந்த ஒரு துணை இல்லாமல் தனித்து விடப்பட்ட அவர், அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று கடுமையாகத் தவம்  செய்ய ஆரம்பித்தார். அப்போது அவரது ஆன்மா அவரது உடலை விட்டுப் பிரிந்தது. அதே சமயத்தில் அவரது உடம்பில்அற்புத நிகழ்வாக ,  மற்றொரு புனித ஆத்மா உள்ளே நுழைந்தது. அந்த புனித ஆத்மாவானது சூரியனின் புனித ஆத்மா ஆகும். பின்பு அவரது 16வது வயதில், தென்னிந்தியாவில் உள்ள புனிதத்தலமான பழனி வந்தடைந்தார். ஈஸ்வரபட்டர் அங்கு சிந்தை கலங்கிய நபராகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, பல்வேறு மனிதர்களுக்குப் பல அற்புதங்களையும், சுகங்களையும் அளித்து மக்களை ஞானவழியில் கொண்டு சேர்ப்பதற்கு, ஞானகுரு “வேணுகோபால் சுவாமிகள்” மற்றும் “திருமதி.ராஜம்மாள் பாலசுப்ரமணியன்” ஆகியோரைக் கருவியாகப் பயன்படுத்தி சத்தியத்தின் சக்தி நிலையை வெளிப்படுத்தினார். ஈஸ்வரபட்டர் தனது ஸ்துல உடலை உதிர்த்து விட்டு காரண பிரபஞ்ச லோகத்திற்குச் சென்றுஅங்கிருந்து கொண்டு உலக மக்களுக்கு ஆன்ம நலம் உண்டாக அருள் புரிந்து கொண்டு இருக்கிறார். அவரது ஸ்துல உடலானது இன்றும் ஜீவசமாதி நிலையில் பழனியில் உள்ளது.

இவரது புகைப்படத்தை வைத்து "ஓம் ஈஸ்வரப்பட்டர் நமஹ"என்று கூறினால்  அவரது அருளாசி கிட்டும்,வழக்கு  மற்றும்  நம் லோகாய வாழக்கையில் ஏற்படும் பிரச்சினைகளையும் தீர்ப்பார் என்பது மறைந்த மிஸ்டிக் மிஸ்டிக் செல்வம் அய்யா அவர்களின் வாக்கு.

ஸ்ரீ ஈஸ்வர பட்டர் சுவாமிகளின் ஒடுக்கம் ( ஜீவசமாதி ) பழனியில் இருந்து சுமார் 1.5 கிலோ மீட்டர்  தொலைவில் இடும்பன் மலை கோயில் செல்லும் வழியில்  "இரசமணி சித்தர் ஸ்ரீலஸ்ரீ ஈஸ்வரபட்டர் சுவாமிகள் சித்தவைத்திய ஜீவசமாதி ஆசிரமம் "  என்ற பெயரில் அமைந்துள்ளது.



முகவரி,

77, திண்டுக்கல் ரோடு, ( பழனி ஆண்டவர் கலை கல்லூரி பின்புறம் )
பழனி, திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு.







ஸ்ரீ ஈஸ்வர பட்டர் சுவாமிகளின் குரு பூஜை விழா வரும் 04.01.2018 அன்று பழனி மற்றும் திருச்செந்தூரில் நடைப் பெறவுள்ளது.அன்பர்கள் கலந்து கொண்டு அருள் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் .

தொடர்புக்கு :இரா.சந்தானகிருஷ்ணன் அடிகளார்,9159532526