ஆனால் அஃதோடு மட்டும் இருந்தால் குருவின் அருள் கிட்டுமா ? குருவாகிய நிலையில் இருக்கக்கூடிய, அவனுக்கு முழுமையான தகுதி இருக்கிறதோ, இல்லையோ, ஒரு உபதேசம் செய்யும் பணியில் இருந்திருப்பான். பணியை விட்டு விலகியிருப்பான். அல்லது பணியிலே அயர்வு கண்டிருப்பான். அவனுடைய ஊதியம் போதுமானதாக இராது. அவன் குடும்பம் மிகவும் வேதனைப்படும். அது போன்ற மனிதனை தேடிப்பிடித்து முடிந்த உதவிகள் செய்தால், ஏன், குருவின் கடாக்ஷம் கிடைக்காதா ? சனி பகவானின் தொழில் காரகத்துவம் பெறுகின்றவன் யார் என்று பார்த்து, அந்தத் தொழில் செய்பவர்களில் யார் கடினப்படுகிறார் ? என்று பார்த்து உதவி செய்தால், அங்கே சனி பகவானின் அருள் கிட்டாமல் போய்விடுமா ?. செவ்வாயின் அருள் கிட்ட வேண்டுமென்றால் அது தொடர்பான மனிதர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்தால் அஃதொப்ப செவ்வாயின் தோஷம் அகன்று அருள் கிட்டாதா ? குருதி காரகன் என்று சொல்லத் தெரிகிறது. குருதி தானம் என்றால் பயந்து ஓடத் தெரிகிறது. குருதி தானம் செய்தால் செவ்வாயின் தாக்கம் குறையும் என்பது கூட ஒரு மகான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா ? எனவே, நவக்ரகங்களை நேரடியாக வழிபட்டாலும், நவக்ரகங்கள் மூலமாக செயல்படுத்தப்படும் தொழிலை யார் செய்கிறார்களோ, அவர்களில் யார் மெய்யாக கடினப்படுகிறார்களோ, அவர்களுக்கு அள்ளி, அள்ளித் தருவதாலும் தாராளமாக நவக்ரக தோஷங்கள் விலகும். இதைப் புரிந்து கொண்டால் எந்த கிரகம், எங்கு சென்றால் என்ன ? என்று அச்சப்படாமல் மனிதன் சுகமாக வாழலாம்.
இராகு திசை, சனி திசை, அங்காரக திசைகளில் குழந்தைகள் பெற்றோர்கள் பேச்சைக் கேட்காமல் தீய வழிகளில் செல்கிறார்கள். இதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்
இறைவனின் கருணையைக்கொண்டு நாங்கள் மீண்டும், மீண்டும் வலியுறுத்துவது நவக்ரகங்கள் நேர்மையான அதிகாரிகள் என்று வைத்துக்கொள்ளலாம். எந்த கிரகத்தையும் தீய கிரகம் என்றும், அசுப கிரகம் என்றும் கூறுதல் மகா பாவம். அவரவர்கள் கடமையை இறைவனின் அருளாணைக்கேற்ப செய்கிறார்கள். ஆக ஒருவனின் விதிப்படி எதை அவன் நுகரவேண்டுமோ அது அவனுக்கு வருகிறது. வெற்றியும், புகழும், நல்ல சுகமும் கிடைக்கும்பொழுது இவையெல்லாம் வேண்டாம் என்று யாரும் கூறுவதில்லை. அதே மனிதனுக்கு திசை மாற்றங்கள், அந்தர மாற்றங்கள் ஏற்படும்பொழுது, சில மாறுபட்ட நிகழ்வுகள், துன்பங்கள் நிகழும்பொழுது “ இறைவா ! என்னால் தாங்கமுடியவில்லை. கிரகங்கள் என்னை பாடாய் படுத்துகிறது “ என்று புலம்புகிறான். ‘ அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் ‘ என்ற வழக்கு ( சொல் ) இருக்கிறது. நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். ஒரு மனிதனின் முன் ஜென்ம பாவ, புண்ணியத்திற்கேற்ப கிரகங்கள் செயல்படும் தருணம் ஒரு மனிதனின் அறியாமையில் அமர்ந்துகொண்டுதான் செயல்பட முடியும். எனவேதான் ஒரு மனிதன் இறைவனை நோக்கி “ இறைவா ! எனக்கு செல்வத்தைக் கொடு. இறைவா ! எனக்கு நல்ல பதவியைக் கொடு. இறைவா ! எனக்கு நல்ல ஆரோக்யத்தைக் கொடு. இறைவா ! என் கடனை தீர்த்துவிடு. இறைவா ! என் பிள்ளைகளை நன்றாக வாழ வை “ என்று கேட்பதைவிட, “ இறைவா ! என் அறியாமையை நீக்கிவிடு. இறைவா ! எனக்கு தெய்வீக ஞானத்தைக் கொடு “ என்று வேண்டிக்கொண்டால் அனைத்து பிரச்சினைகளும் அதிலேயே தீர்ந்துவிடும்.
யோகிக்கும் கிரக பலன்களால் நன்மை, தீமைகள் உண்டு. மனிதனுக்கும் உண்டு. ஞானிக்கும் உண்டு. அஞ்ஞானிக்கும் உண்டு. ஞானி துன்பங்களால் கலங்க மாட்டான். அஞ்ஞானிதான் கலங்குகிறான். இருந்தாலும் மனிதர்கள் அனைவரும் எடுத்த எடுப்பிலேயே ஞானியாக முடியாது என்பதற்காகத்தான் சில வழிமுறைகளைக் கூறுகிறோம். பொதுவாக நாங்கள் நேரிய வழியைத்தான் காட்டுவோம். ஆனாலும்கூட கிரகங்களால் மனிதர்கள் அவஸ்தைகளுக்கு ஆளாகி துன்பத்திலே ஆழ்ந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் சில குறுக்கு வழிமுறைகளைக் கூறுகிறோம்.
எத்தனையோ விளக்கங்கள் கூறினாலும் இன்னவள் வினவியதுபோல ஏழரை சனியின் பலனும், அட்டம சனியின் பலனும், அர்த்தாட்டம சனியின் பலனும், ஏனைய இராகு, கேது திசைகளும் பொத்தாம்பொதுவாக தீங்கைத்தான் தருகிறது என்பதை நாங்கள் ஒத்துக்கொள்ள மாட்டோம். நல்ல ஞானத்தையும், நல்ல அனுபவத்தையும்கூட அதன் மூலம் மனிதன் கற்றுக்கொள்ளலாம். இந்த இடத்திலே சுருக்கமாக நாங்கள் கூறுவது என்னவென்றால் இதுபோன்ற தருணங்களில் மனிதன் கூடுமானவரை மனதை தளரவிடாமல் அன்றாடம் ஏதாவது ஒரு ஆலயம் சென்று ஒரு நெய் தீபமாவது ஏற்றவேண்டும். நாங்கள் கூறுவது குறைந்தபட்சம். அதுகூட இயலாதவர்கள் இல்லத்திலே உடல் சுத்தி, உள்ள சுத்தி செய்து குறைந்தபட்சம் இரண்டரை நாழிகை இயன்ற வழிபாடுகளை செய்யவேண்டும். குறிப்பாக நவக்ரக அதிதெய்வ வழிபாடுகளை செய்யவேண்டும். அடுத்ததாக இதுபோன்ற ஒரு சூழல் உள்ளவர்கள், சற்றே பொருளாதாரம் உள்ளவர்கள் குடும்பத் தேவைக்காக ஒரு இல்லத்தை புதியதாக வாங்குவதோ, வாகனத்தை வாங்குவதைப் போன்ற செயல்களில் ஈடுபடாமல், அப்படி வாங்கியதாக எண்ணிக்கொண்டு, அந்த தனத்தையெல்லாம் தக்க ஆலயத்திற்கோ, தக்க ஏழைக்கோ தர்மமாக கொடுத்துவிட்டால், கட்டாயம் கூறுகிறோம், இதுபோன்ற திசா, புத்திகளில் ஒரு மனிதனை துன்பங்கள் அதிக அளவில் தாக்காது.
சுருக்கமாகக் கூறுகிறோம். ஒருவனிடம் சில லகரங்கள் தனம் இருக்கிறது. அவன் ஒரு இல்லம் வாங்கவேண்டும் என்று எண்ணுகிறான். அதை நாங்கள் தவறு என்று கூறவில்லை. சுயமாக இல்லம் இருந்தால் வசதி என்று அவன் எண்ணுகிறான். ஆனால் அப்பொழுது அதை செய்ய உகந்த காலமல்ல. அவன் இல்லம் வாங்கினால் என்னவாகும் ? எல்லா சிக்கல்களும், தொல்லைகளும் அந்த இல்லத்தால் வரும். அந்த தனமும் தேவையில்லாமல் விரயமாகும். ஆனால் அதே தருணத்தில் அந்த தனத்தை சுப விரயம், தர்ம விரயம் செய்துவிட்டால் பாவங்களும் குறையும். அந்த திசா, புத்தி, அந்தரம் முழுவதும் பெரிய அளவிலே அவனுக்கோ, அவன் குழந்தைகளுக்கோ அபாயம் வராமல் இருக்கும். இது ஒன்றுதான் சுருக்கமான வழிமுறையாகும். ஆனால் மனிதன் என்ன எண்ணுகிறான் ? அன்றாடம் திறமையாக வாழ்கிறேன் என்று தனத்தை சேர்த்து வைத்துக் கொள்கிறான். கனகத்தை சேர்த்து வைத்துக் கொள்கிறான். விலை ஏறுகிறது என்று மேலும், மேலும் ஆங்காங்கே மனைகளை வாங்குகிறான். இதை தவறு என்று கூறவில்லை. ஆனால் எமது வழியில் வரவேண்டும், கிரகங்களால் பாதிக்கப்படாமல் இருக்கவேண்டும் என்றால் குறைந்தபட்ச தேவைகளோடு வாழ்ந்துகொண்டு, ஏனைய தேவைகளையெல்லாம், யார், யாருக்குத் தேவையோ அவர்களுக்கு தாராளமாக பெருந்தன்மையோடு அளித்துவிட்டால், கட்டாயம் யாம் இறைவனருளால் கூறுகிறோம், ஏழரை சனியோ, அட்டம சனியோ, அர்த்தாட்டம சனியோ அல்லது வேறு, இவள் கூறியதுபோல, உகந்தது அல்லாத திசா, புத்திகள், ஏற்புடையது அல்லாத திசா, புத்திகள் எந்தவிதமான கெடுபலனையும் மனிதனுக்கு செய்யாது. தர்மத்தின் உச்ச நிலைக்கு எவன் செய்து விட்டானோ அவனிடம் கிரகங்கள், தன்னுடைய அருளாணையை, இறைவன் அருளாணையை முழுமையாக செலுத்தாது. அவனுக்கும் துன்பம் வரும். அதைத் தாங்குகின்றது அவன் செய்த தர்மம் என்பதால் அந்த துன்பத்தை அவன் உணர இயலாமல் போய்விடும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக