இறைவனின் கருணையால், நீக்கமற நிறைந்துள்ள பரப்பிரம்மம்,பரம்பொருள், தனிமனித ஆன்ம மேம்பாட்டிற்காக மகான்களும்,ஞானிகளும் வகுத்துக் கொடுத்த வழியிலே கட்டப்பட்டு,இறைவன் கருணையால் எழுப்பப்பட்டுள்ள ஆலயத்திலே குடிகொண்டு,வருகின்ற நன் மக்களுக்கு நல்லதொரு அருளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது.எந்த ஆலயம் சென்று,எந்த விதமான பிரார்த்தனையை வைத்தாலும் அல்லது எந்தவிதமான பிரார்த்தனையும் வைக்காமல் பொதுவாக சென்று வந்தாலும்,ஒவ்வொரு மனிதனுக்கும் கட்டாயம் நன்மைகள் உண்டு.அஃதொப்ப நிலையிலே மனித மனம் எஃதாவது ஒன்றை பிடித்துக் கொண்டு,எப்படி ஒரு குழந்தை நடை பயில,நடை வண்டி தேவைப்படுகிறதோ,அப்படி சராசரி பக்தி கொண்ட மனிதன் மேலே வருவதற்கு எஃதாவது ஒன்றை பிடித்துக்கொண்டு வரவேண்டும் என்பதற்காகத்தான் புராண சம்பவங்களும்,சரித்திர சம்பவங்களும்,விதவிதமான ஆலயங்களும்,அந்த ஆலயங்களுக்கு உண்டான தாத்பர்யங்களும்.அதற்காக களத்திர தோஷம் நீக்க வேண்டிய ஆலயத்திற்கு சென்று,”எனக்கு நோய் அதிகமாக இருக்கிறது.எனக்கு அந்த நோயை நீக்கிக்கொடு இறைவா! என்று வேண்டக்கூடாது”என்று பொருள் அல்ல.
பொதுவாக இப்படியெல்லாம் கூறும்பொழுது,அப்படியாவது,அந்த குறிப்பிட்ட நோக்கத்திற்காகவாவது மனிதன் அந்த ஆலயத்திற்கு செல்லட்டுமே என்பதுதான்.அஃதொப்ப கிரக நிலை கொண்ட மனிதர்கள் அந்த ஆலயத்தின் மண்ணை மிதிக்கும்பொழுது தோஷங்கள் குறையட்டும் என்பதற்காகவும் இஃதொப்ப விதவிதமான ஆலயங்கள் எழுப்பப் பட்டுள்ளது.பெரும்பாலும் ஒரே ஆலயம்,சராசரி மனிதன் செல்லும்பொழுது உலகியல் தேவையை தரும் தருவாகத் தோன்றுகிறது.அதே ஆலயத்திற்கு ஓரளவு பற்றை விட்ட ஞானி செல்லும்பொழுது முக்தியை நல்குகின்ற ஆலயமாக தோன்றுகிறது.எனவே இருப்பது அஃதொப்ப ஒரே ஆலயம்தான்.செல்லுகின்ற பக்தர்களின் எண்ண ஓட்டத்திற்கு ஏற்ப,மனோ நிலைக்கு ஏற்ப,மனோ தர்மத்திற்கு ஏற்ப,மன பக்குவத்திற்கு ஏற்ப அந்த மனிதனுக்கு நல்லருளை வழங்குகிறது.’எஃதும் வேண்டாம்.இறைவா!நீதான் வேண்டும்” என்று வேண்டுகின்ற உள்ளங்கள் ஆலயம் செல்லும்பொழுது அஃது எந்த நோக்கத்திற்காக எழுப்பப்பட்டுள்ள ஆலயமாக இருந்தாலும் அஃதொப்பவே நலம் நடக்கிறது.நீ கூறிய ஆலயமும் இப்படி பன்முக கருத்து அமைந்த ஆலயம்தான்.இருந்தாலும் ஞானப் பசி கொண்டவனுக்கும்,இறை ஞானம் புரியாமல் அதே சமயம் அதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவனுக்கும் உகந்த ஆலயம் ஆகும்.நீ அறிந்த மற்ற சிறப்புகளும் உண்டு.(அவையும்) உண்மையே.
அருள்மிகு ஞானாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில்
இக்கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அய்யம்பேட்டை அருகேயுள்ள சூலமங்கலம் என்னுமிடத்திற்கு அருகே புரசக்குடி என்னுமிடத்தில் அமைந்துள்ளது.
இறைவன், இறைவி
இக்கோயிலின் மூலவராக காளஹஸ்தீஸ்வரர் உள்ளார். இறைவி ஞானாம்பிகை எனப்படுகிறார்.
அமைப்பு
வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது பலி பீடம், நந்தி ஆகியவை காணப்படுகின்றன. அதனை அடுத்து உள்ளே செல்லும்போது மூலவர் சன்னதி கிழக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. அம்மன் சன்னதி தெற்கு நோக்கிய நைலயில் உள்ளது. காசி விசுவநாதர் மற்றும் விஸ்வக்ஞானர் என்றழைக்கப்படுகின்ற இரு லிங்கத் திருமேனிகள் உள்ளன.இக்கோயிலில் பைரவர், சூரியன், சந்திரன், சனீசுவரர், ஆஞ்சநேயர், விநாயகர், வரதராஜப் பெருமாள், முருகன், சண்டிகேசுவரர் ஆகியோர் உள்ளனர். தேவகோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி உள்ளார். இங்குள்ள தட்சிணாமூர்த்தி சிற்பத்தின் இடப்புற காலுக்கு கீழ் ஓர் அடியவர் காணப்படுகிறார். அந்த அடியவர் இரு கரங்களைக் கூப்பிய நிலையில் தட்சிணாமூர்த்தியை வணங்கும் கோலத்தில், இடுப்புக்குக் கீழே ஆடை அணிந்த நிலையில் காணப்படுகிறார். இச்சிற்பம் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தைச் சார்ந்தது என்று கூறுகின்றனர்.
ஞானம் பெற இங்குள்ள ஞானாம்பிகையை வழிபடுவதும், இங்குள்ள தட்சிணாமூர்த்தி விக்கிரகத்தின் இடப்புறக் காலுக்குக் கீழ் அடியவர் சிற்பம் ஒன்று உள்ளதும் தலத்தின் சிறப்பு.
திருவிழாக்கள்
அன்னாபிஷேகம், பிரதோஷம், சிவராத்திரி போன்ற விழாக்கள் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
முகவரி
அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில், அய்யம்பேட்டை சூலமங்கலம் தொலைவில் புரசக்குடி, கும்பகோணம், தஞ்சாவூர்.
தொடர்புக்கு :+91 99411 28535, 90252 58547
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக