திங்கள், 13 நவம்பர், 2017

ஜேஷ்டாதேவி பற்றிய அகத்தியர் ஜீவ வாக்கு


இறைவனின் கருணையால் யாங்கள் அடிக்கடி கூறுவது போல பரம்பொருளின் வெவ்வேறு வடிவங்கள் விதவிதமான தெய்வ நாமத்தில் விளங்கி மனிதர்களின் தேவைக்கு ஏற்ப அருளைத் தருகிறது. ஒரே மனிதன் தந்தையாக, சகோதரனாக, கணவனாக, அலுவலகத்தில் அதிகாரியாக எப்படியெல்லாம்  உருமாற்றம் அடைகிறானோ, அப்படித்தான் பரம்பொருள் விதவிதமான வடிவங்களில் மனிதர்களுக்கு அருளை வாரி வழங்குகிறது. இஃதொப்ப நிலையிலே துயில்(தூக்கம்) தொடர்பான பிரச்சினைகள், அமைதியற்ற மனம் கொண்டவர்கள் நல்ல முறையிலே வழிபட வேண்டிய தெய்வ வடிவம் இன்னவன் வினவிய தேவியின் வடிவமாகும். இந்த அளவிற்கு இதனைப் புரிந்து கொண்டு இந்த வழிபாட்டில் கவனம் செலுத்தினால் நன்மையைத் தரும்.

 தல வரலாறு
 
 மூலவர் :பசுபதீஸ்வரர்
அம்மன் :சாந்த நாயகி
தல விருட்சம்: வில்வம்
ஊர் :திருக்கொண்டீஸ்வரம்

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள லிங்கத்தில் பசுவின் கொம்பால் ஏற்பட்ட பிளவை இன்றும் காணலாம். பிராகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், வைரவர், திருநாவுக்கரசர் சன்னதிகளும் உள்ளன. காமதேனு வழிபட்ட தலம்.

 "கொண்டி' என்றால் "துஷ்ட மாடு' என்று பொருள். கொண்டி வழிபட்டதால் இத்தலம் "கொண்டீஸ்வரம்' என அழைக்கப்படுகிறது. அம்பாள் சன்னதிக்கும், சுவாமி சன்னதிக்கும் இடையில் வெள்ளைக்கல்லால் செய்யப்பட்ட மிகப்பழமையான "ஜேஷ்டாதேவி' அருள்பாலிக்கிறாள்.  இத்தலத்தில் ஜேஷ்டாதேவி அனுக்கிரக தேவதையாக இருக்கிறாள். 

முகவரி:
அருள்மிகு சாந்தநாயகி சமேத பசுபதீஸ்வரர் 
திருக்கண்டீஸ்வரம். (வழி) சன்னாநல்லூர்,
நன்னிலம் ஆர்எம்எஸ்,
திருவாரூர்- 610 001. 
போன் 04366 228 033

தில ஹோமம் செய்வதினால் வரும் சிறப்பு பலன் பற்றிய அகத்தியர் ஜீவ வாக்கு



இறைவனின் கருணையாலே இது குறித்து பலமுறை கூறியிருக்கிறோம். சுருக்கமாகக் கூறுகிறோமப்பா. ஏற்கனவே கேட்ட மனிதனிடமிருந்து நீ அறிந்து கொள். இஃதொப்ப நாங்கள் கூறினால், உடனடியாக அடுத்த வினா வரும், மாற்று மதத்தவர்கள் என்ன செய்வது ? என்று. எம்மைப் பொறுத்தவரை அவரவர் உணர்ந்த வழிபாட்டினை செய்தால் அது இறை வழிபாட்டிற்கு எந்தவிதமான பங்கத்தையும் தராது என்பது யாம் கூறுகின்ற கருத்தாகும். இருந்தாலும் இந்த மார்க்கத்தில் பிறந்ததால் கூறுகிறோம். இஃதொப்ப தில தர்ப்பணம் அல்லது தில ஹோமம் என்பது அஃதொப்ப ஒரு மனிதனின் பூர்வீக பாவங்களைக் குறைப்பதற்கும், அந்த மனிதன் பிறந்த குடும்பத்திலே தொடர்ந்து வரும் சாபங்களையும், தோஷங்களையும் நீக்குவதற்கும் பேருதவியாக இருக்கும். இஃதோடு பைரவர் வழிபாடும், கூடுதலாக பலவிதமான தர்ம காரியங்களும் செய்தால் இந்த தில தர்ப்பணத்தின் பலன் சடுதியில் ஒவ்வொரு மனிதனுக்கும் இறைவனருளால் கிட்டும்.  

குரு சண்டாளம் (குரு எதிர்ப்பு) பற்றிய அகத்தியர் ஜீவ வாக்கு


 
சுருக்கமாகக்  கூறுங்கால் இவ்வாறு(ஜாதகத்தில்) ஒரு அமைப்பு பெற்றவர்கள்,தனக்கு குருவாக இருக்கக்கூடியவர்களை எதிர்க்கக்கூடிய நிலை வரும்.அது குருவின் குற்றம் காரணமாகவோ,அல்லாத நிலையிலோ கூட வரும்.குரு,சிஷ்ய பகை வளர்வதற்கு இது ஒரு காரணமாக இருக்கும்,பிறவிகள் தோறும்.பொதுவாக குரு சாபத்தையும்,குரு தோஷத்தையும் இது குறிக்கிறது.

வியாழக் கிழமைகளில் விரதம் இருந்து,குரு ஸ்தலம்,குரு தட்சிணாமூர்த்திக்கு வழிபாடு செய்தல் நலம்.குருவாக இருக்கும் ஏழை மனிதனுக்கு உதவி செய்வதும்,குரு தொடர்பான தொழில் செய்வோருக்கு முடிந்த உதவிகளை செய்வதும்,இந்த தோஷத்தில் இருந்து விடுதலை அளிக்கும்.

குரு ஸ்தலம்:

அருள்மிகு ஆபத்சகாயேசுவரர் கோயில்,ஆலங்குடி

குரு தொடர்பான தொழில்:

ஆசிரியர்,மடலாய குருமார்கள்

ஸ்ரீரங்கம் பற்றிய அகத்தியர் ஜீவ வாக்கு



பொதுவாகவே அரங்க ஸ்தலம் என்பது சுக்ரனுக்கு உகந்த ஸ்தலம் என்று கூறலாம். ஜாதகத்திலே சுக்ர பகவானின் அருள் குறைவாக இருக்கப் பெற்றவர்கள் சென்று வழிபட வேண்டிய ஸ்தலங்களில் ஸ்ரீரங்கமும் ஒன்று. எனவே அந்த ஸ்ரீரங்கம் மண் முழுவதுமே சுக்ரனின் ஆட்சி இருக்கிறது. அதனால்தான் அது ஆதிகாலத்தில் இருந்த நிலை நாளுக்கு நாள் மாறி, மாறி தற்காலத்திலே மிகப்பெரிய நகரமாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. அஃதொப்ப நிலையிலே அங்கு எந்த சன்னிதியிலே சென்று இறைவனின் எந்த வடிவத்தை வணங்கினாலும் கூட அது சுக்ர தோஷத்திற்கு பரிகாரமாக அமையும். எனவே மூலவரை வணங்கினாலும் வேறு உப சன்னிதியில் சென்று வழிபாடு செய்தாலும் கூட அது சுக்ரன் தொடர்பான தோஷங்களை நீக்கும். எனவே அங்குள்ள எல்லா வகை சன்னிதியிலும் ஒரு மனிதன் எந்த வகை பூஜை செய்தாலும் அதற்கு சுக்ர பரிகார பூஜை என்று பொதுவாக கொள்ளலாம். எனவே அந்த அடிப்படையில் எழுந்ததுதான் இன்னவன் விடுத்த வினா.

தண்டபாணி என்று சொல்லப்படுவதன் பொருள் பற்றிய அகத்தியர் ஜீவ வாக்கு


 

இறைவன் அருளால் அஃதொப்ப தண்டமும், அங்கே ஒரு ஆயுதமாக பயன்படுகிறது. அன்பை போதிக்கின்ற மகான்களும், ஞானிகளும் ஆயுதம் வைத்திருப்பார்களா ? அப்படியிருக்க அன்பே வடிவான, கருணையே வடிவான இறைவன் கையில் ஆயுதம் இருக்குமா ? அப்படியல்ல. இறைவன் கையில் ஆயுதத்தை வைத்ததின் மர்மமும், சூட்சுமமும் என்ன ? மனிதனுக்கு ஒரு பாதுகாப்பு. ஒரு காவலன் கையில் இருக்கின்ற ஆயுதம் மனிதனுக்கு அச்சத்தை தராது. ஏன் ? அது சமூகத்தைக் காப்பதற்காக அவனுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு, அதிகாரம். நாட்டை பாதுகாக்க ரணகளத்தில் பணியாற்றுகின்ற மனிதனிடம் ஆயுதம் இருக்கிறது. அந்த ஆயுதத்தை யாரும் அச்சத்தோடு பார்ப்பதில்லை. ஆனால் ஒரு கள்வன் கையில் ஆயுதம் இருந்தால் அச்சத்தோடு பார்க்கிறார்கள். எனவே ஆயுதம் என்பது பொதுவாக பார்த்தால் அது அஃறிணை. ஆனால் யாரிடம் இருக்கிறது ? என்பதை பொறுத்துதான் அதன் பலனும், பலாபலனும். ஆனாலும்கூட இறைவன் கையில் ஆயுதம் இருப்பது, அறியாமையில் இருக்கின்ற மனிதனுக்கு ‘ உன்னை இறைவன் பாதுகாப்பார். இறைவன் பராக்ரமசாலி, பலசாலி. உலகிலுள்ள சக்திகளுக்கெல்லாம் சக்தி என்பதை புரிந்துகொள்ளவே இறைவனுக்கு பலவிதமான கரங்களும், சிரங்களும் கொடுக்கப்பட்டன. ஆனால் அப்படித்தான் இறைவன் இருக்கிறாரா ? இல்லை. நினைத்தவர் தம் மனதிலே எப்படி நினைக்கிறார்களோ அப்படி காட்சி தரக்கூடிய நிலையில்தான் பரம்பொருள் இருக்கிறது.


எனவே பழனி முருகனிடம் தண்டம் ஆயுதமாக இருப்பதன் மர்மமே, பொதுவாக முருகனுக்கு எது ஆயுதம் ? வேல் ஆயுதம். அஃதொப்ப வேல், மனிதன் கையில் இருக்கின்ற வேல் அல்ல. இந்த வேல் ஆழமாக இருக்கும். அகலமாக இருக்கும். நீளமாக இருக்கும். குளுமையாக இருக்கும். இது ஞானவேல். அன்னை சக்தி தந்ததினால் சக்திவேல் என்றாலும் அது முழுக்க, முழுக்க ஞானத்தைத் தரக்கூடிய வேலாகும். இரத்தினவேல் என்றுகூட வேலிலே ஒருவகை இருக்கிறது. வைரவேலும் இருக்கிறது. சிலவகை தோஷங்களை வைரங்கள் போக்கும். சிலவகை தோஷங்களை வைரம் தரும். வைரவேல் தரிசனத்தைப் பார்த்தாலே மனிதர்களுக்கு சிலவகை தோஷங்கள் நீங்கும். சில முருக ஆலயங்களிலே வைரவேல் தரிசனம் என்பது இருக்கிறது. ஆக இந்த வேலானது ஞானத்தைக் குறிக்கிறது. இப்பொழுது இவள் கேட்டாளே, பாசத்திலிருந்து, பந்த்த்திலிருந்து, உலக மாயையிலிருந்து எவ்வாறு விடுபடுவது ? என்று. இவற்றையெல்லாம் அறுக்கின்ற ஆயுதம்தான் தண்டாயுதம்.


ஆக மனிதனுக்கு யார் எதிரி ? என்றால், புறத்தே இருக்கின்ற மனிதன் எதிரி அல்ல. அவன் மனதிலே விளையக்கூடிய களைகள், பதர்கள், தேவையற்ற எண்ணங்கள், சபலங்கள், கீழான எண்ணங்கள் – இவற்றையெல்லாம் விட்டுவிட முடியாமல் மனிதன் தவிக்கிறான், தடுமாறுகிறான். இவற்றையெல்லாம் அடித்து நொறுக்கக்கூடிய ஆயுதமே தண்டாயுதம், வேலாயுதம். இதுபோன்ற இறையுடன் இருக்கக்கூடிய ஆயுதம் அசுரர்களை அழிப்பதாக புராணங்கள் கூறுவதைக்கொண்டு, அசுரர்கள் என்றால் எங்கோ புறத்தே இருக்கிறார்கள். கோரப் பற்களோடும், மிகப்பெரிய பயமுறுத்தும் கண்களோடும் இருக்கிறார்கள். கருகரு என்று வருவார்கள். மனிதர்களை மிரட்டுவார்கள் என்று எண்ணுகிறார்கள். அந்த அசுரர்களைக்கூட மனிதர்கள் சமாளித்துவிடலாம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கின்றானே, பொறாமை எனும் அசுரன், காமம் எனும் அசுரன், சபலம் எனும் அசுரன், வேதனை எனும் அசுரன், விரக்தி எனும் அசுரன், கோபம் எனும் அசுரன் – இவற்றைதான் மனிதனால் விரட்ட முடியாது. இவற்றை விரட்டக்கூடிய ஆயுதம், தண்டாயுதம்.


அந்த தண்டு முதுகிலே மையப்பகுதியில் இருக்கும். அது முதுகுத்தண்டு. இஃதொப்ப தாமரையின் மையத்திலே இருக்கிறது. அது தாமரைத்தண்டு. தண்டு என்றாலே, பொதுவாக அதன் பொருள், மையம். அங்கே தண்டம் என்பது மனிதனிடம் இருக்கக்கூடிய எல்லாவகையான எதிரான குணங்களையும் நீக்கக்கூடிய ஒரு மையம். மனிதனுக்கு மையம் எது ? புருவ மத்தி. அந்த புருவ மத்தியை நோக்கி ஒரு மனிதன் சிந்தனை செய்தால், சர்வகாலமும் புருவ மத்தியை கவனித்துக்கொண்டே வந்தால் அவனுடைய சிந்தனை ஒழுங்குபடும், நேர்படும், நிரல்படும், உறுதிபடும். எனவே மனிதனுக்கு மையம் புருவ மத்தி. அங்கே தண்டு மையம். அந்த மையத்தை நோக்கி இவன் சென்றால் இவன் மையம் சரியாகும் என்பதன் பொருள்தான் தண்டாயுதமாகும்.

புதன், 1 நவம்பர், 2017

சதுரகிரி மகாலிங்க மலையில் அப்பன் மகாலிங்க பெருமானுக்கு அன்னாபிஷேகம்


சித்தர் பெருமான்களின் ஆசிகள் நிறைந்த சதுரகிரி மகாலிங்க மலையில் ,அப்பன் மகாலிங்க பெருமானுக்கு நாளை ( 3-11-2017) அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.அடியார்களும் அன்பர்களும் வந்தருள் பெரும் பாக்கியம் பெறுங்கள்.

படைக்கப்பட்ட உயிர்கள் எல்லாம் பசிதீர படியளக்கும் பரசிவ பெருமான் அப்பன் ஈசனை போற்றும் விதமாக ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

நட்சத்திரம் ,திதி தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் எல்லோருக்கும் பூலோக கைலாயமாம் சதுரகிரி மகா லிங்க மலையில் எல்லாம் வல்ல சித்தர் பெருமான்களின் ஆசிகள் பெரும் பாக்கியம் கிடைக்கும் ..!

வாழ்க வளமுடன் ! வளர்க அருளுடன் !

தொடர்புக்கு :9597376824

விஷ சுரம் தீர ஜீவ கருணை நாடியில் அகத்திய பெருமான் முக்கிய அறிவிப்பு



ஸ்ரீ மகா குரு அகஸ்திய பெருமானின் கருணை நாடியில் உலக மக்கள் நன்மைக்காகவும்,தற்போது தமிழகத்தில் பரவியிருக்கும் வைரஸ் கிருமிகளால் உண்டாகும் விஷ சுரமானது மேலும் பரவாமல் இருந்து உலக உயிர்கள் காப்பாற்றபட வேண்டி தஞ்சாவூரில் உள்ள புண்ணைநல்லூர் எனும் திவ்ய தலத்தில் வீற்றிருக்கும் அன்னை ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு 108 கலசங்களால் அபிஷேகமும் மற்றும் சுமங்கலி பூஜை தானமும் செய்ய ஸ்ரீ மகா குரு அகஸ்தியர் பணித்திருக்கிறார்.எதிர்வரும் வெள்ளிக்கிழமை 03-11-2017 அன்று காலை 8 மணி முதல் 12 மணி வரை 108 கலச பூஜை நிகழ உள்ளது.

உலக மக்கள் எல்லாம் தங்கள் பகுதியில் கோவில் கொண்டிருக்கும் ஸ்ரீ மாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்து 108 தீபங்கள் ஏற்றி வழிபட்டால் தமிழகத்தில் நிலவும் உயிர் பலிகள் குறைந்து சாந்தி நிலவும்.இதைக் காணும் மாந்தர்கள்,சித்தர்வழி செல்வோர்,ஆன்மிக பெருமக்கள்,தாய் மார்கள் என அனைவரும் வழிபாடு செய்ய வேண்டுகின்றோம் .

ஸ்ரீ மகா மாரியின் அருளால் தமிழகம் நோயற்று வாழட்டும் .

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் வரலாறு 


தஞ்சாவூர் - நீடாமங்கலம் சாலையில் சுமார் 5 கி.மீ.தொலைவில் உள்ளது புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில்.

18 ம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் வெங்கோஜி ராவ் தான் இந்த கோவிலை கட்டினார். அதற்க்கு முன்பு புற்று வடிவில் தான் இந்த ஆலயம் இருந்தது. அம்மை மற்றும் தோல் சம்பந்தமான நோய்களை குணமாக்கும் சக்தி புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு உள்ளது.

ஒரு முறை வெங்கோஜி மகாராஜா சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்துவிட்டு திரும்பும் வழியில் ஓரிடத்தில் ஓய்வெடுத்த பொழுது கனவில் வந்த மாரியம்மன் தஞ்சையை அடுத்த ஒரு புன்னை மர காட்டில் தான் இருப்பதாக சொல்கிறார். உடனே அங்கு விரைந்த மன்னர் புன்னை காட்டில் ஒரு வெள்ளை எறும்பு புற்றை காண்கிறார் அந்த இடத்திலயே ஆலயம் எழுப்புகிறார்.

பின்பு ஆட்சி புரிந்த சரபோஜி மன்னரும் இந்த கோவிலை புனரமைத்தார். ஒரு முறை துலஜா ராஜாவின் மகளுக்கு கண் பார்வை இழந்த போது புன்னைநல்லூர் மாரியம்மனை வேண்டி பார்வை திரும்ப கிடைத்ததாக சொல்லபடுகிறது. சதாசிவ பிரம்மேந்திரர்  இந்த கோவிலுக்கு வந்து புற்றில் மாரியம்மன் முக வடிவை அமைத்ததாகவும் ஸ்ரீசக்ரம் பதித்ததாகவும் சொல்லபடுகிறது.