தாயாயுமென்றந்தை தானாயுநின்று நீ
தானாகவருள் புரியவும்
தாபந்தமெல்லா மறிந்த நிஷ்டைச்
சகாவென்றவருள் புரியவும்
நாயடியனுய்பும் பொருட்டாகரட்சித்து
நாடோறுமருள் புரியவும்
நச்சுநச்சென்றனைய ரற்றுறெ என்றனை
நகைத்திடாதருள் புரியவும்
தூயனேமாயனே நேயனே தாயனே
தொழும்புகொண்டருள் புரியவுந்
தோலாவழக்கனிவ னென்றுசொல்லாமெலென்
றுரையேயுனருள் புரியவும்
வாய்மொழிமறக்கும்முன் றவராஜசிங்கமே
வரவேண்டுமென்றனருகே
மாகுணங்குடிவாழு மென்னகத்தீசனே
பொருள்:
எனக்கு தாயாகவும் ,தந்தையாகவும் நின்று தானாக அருள் புரியவும்,புலன்களின் இயக்கத்தை ஒடுக்கி தாங்கள் அறிந்த தியானத்தில் சங்கடம் இல்லாமல் வாசியே எனக்கு நண்பனாக அருள் புரியவும்,நாய் போன்ற அடியேனையும் ஒரு பொருட்டாக ஏற்று ரட்சித்து நாள்தோறும் அருள் புரியவும்,நச்சு,நச்சு என்று புலம்புகின்ற என்னை பார்த்து சிரிக்காமல் அருள் புரியவும் ,தூய்மை ஆனவரே,மாய தோற்றம் கொண்டவரே ,அன்புள்ளம் கொண்டவரே ,தாய் போன்றவரே,உன் அடியார் கூட்டத்தில் என்னை ஆட்கொண்டு சேர்த்து அருள் புரியவும்,தீராத வழக்கு கொண்டவன் சொல்லி என்னை ஒதுக்காமல் என் துரையே அருள் புரியவும்,உண்மையான மொழியால் அடியேன் பாடியவை யாவும் மறக்கும் முன் தவத்திற்க்கே ராசாவாக விளங்கும் சிங்கமே,மவுனத்திற்கு குருவாய்,ஆசாரியனாய் விளங்கும் மாகுணங்குடி வாழும் அதாவது என் உள்ளே வாழும் அகத்தீசனே என் அருகே வர வேண்டுகிறேன்.


