வெள்ளி, 24 ஏப்ரல், 2020

குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்கள் அருளிச் செய்த அகத்தியர் சதகம் -குருவருள் நிலை-பாடல் -2



என் தலையிட்ட விதி என்னமோ என்னநான்
இடையாமல் அருள் புரியவும்
என் செய்தேன் என்றடிமை எண்ணாத எண்ணங்கள்
எண்ணாமல் அருள் புரியவும்
பந்தமதில் இட்ட மெழுகு என்னை நெஞ்சுருகிப்
பதைத்திடாது அருள் புரியவும்
பாவி ஆகாது என கருணை நயனம் கொண்டு
பார்த்து நல் அருள் புரியவும்
மந்திரம் கொண்டு மாங்காய் விழாது ஆதலான்
மனம் உவந்து அருள் புரியவும்
மாரியினும்  நின் கருணை மாறி அணுமாறாது
வருஷிக்க  அருள் புரியவும்
வந்து பணிவார்க்கு உதவு மெய் தவராஜ சிங்கமே
வரவேண்டும் எந்தன் அருகே
மாகுணங்குடி வாழும் என் அகத்தீசனே
மௌன தேசிக நாதனே

பொருள்

என் தலையில்  எழுதப் பட்ட  விதி என்னவாக இருந்தாலும் அடியேனுக்கு அருள் புரியவும், அடியேன்  என்ன செய்தேன் என்று எண்ணங்களால் எண்ணிப் பார்க்காது அருள் புரியவும், மெழுகு போன்ற பந்தத்தில் இடப் பட்ட என்னை மெழுகாகப்பட்டது நெருப்பால் உருகிப் போவது போல் பதைத்திடாது அருள் புரியவும்,என்னை பஞ்சமாபாதகம் செய்த பாவி என்று ஆகாது என ஒதுக்காமல் நின் கருணை பார்வை கொண்டு பார்த்து நல் அருள் புரியவும்,வெறும் மந்திரம் சொன்னால் மாங்காய் பால் என்ற அமிர்தம் சகஸ்ரஹாரத்தில் இருந்து சுரக்காது மற்றும் நின் கருணையால் அது கூடும் என்று சித்தாதி சித்தர்கள்,தேவர்கள்,ரிஷிகள் நினைப் பணிந்தனர், ஆதலால் மனம் உவந்து அருள் புரியவும்,மேகத்திலிருந்து பொழியும் நீரின் தன்மை அணு அளவு கூட எப்படி மாறதோ அது போல் அடியேனும் கருணை மழை  பொழிந்து  அருள் புரியவும் ,உன்னை வந்து பணிபவர்களுக்கு எல்லாம்  உதவுகின்ற சத்தியமாகிய,தவத்திற்க்கே ராசாவாக விளங்கும் சிங்கமே,மவுனத்திற்கு குருவாய்,ஆசாரியனாய்  விளங்கும் மாகுணங்குடி வாழும் அதாவது என் உள்ளே வாழும் அகத்தீசனே என் அருகே வர வேண்டுகிறேன்.

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக