வெள்ளி, 30 மார்ச், 2018

அருள்மிகு காரைக்கால் அம்மையார் குரு பூசை விழா


காரைக்கால் அம்மையார் பற்றி குருநாதர் அருளிய ஜீவ வாக்கு :

இறைவனை தாய்,தந்தையில்லாதவர் என்று கூறுவார்கள்.அப்படிப்பட்ட இறைவனே “எம் அம்மை வருகிறாள்”என்று ஏனையோருக்கு சுட்டிக் காட்டிய பெருமை கொண்ட,மிக அதீத பக்தி கொண்ட,தொண்டு செய்யும் உள்ளம் கொண்ட பெண்மனியப்பா.

காரைக்கால் அம்மையார் வரலாறு 

கி.பி.5-ம் நூற்றாண்டில் காரைக்காலை சேர்ந்த தனதத்தர் என்ற செல்வந்தருக்கு மகளாகப் பிறந்தவர் புனிதவதியார்(காரைக்கால் அம்மையார்).

சிவபக்தை

இளவயது முதல் சிறந்த சிவபக்தையாக அவர் விளங்கினார். இந்த நிலையில் புனிதவதியாருக்கு, நாகப்பட்டினத்தை சேர்ந்த செல்வந்தரான பரமதத்த செட்டியார் மணமுடித்து வைக்கப்பட்டார். ஒருநாள் பரமதத்த செட்டியாரை காண வந்த வணிகர் ஒருவர் இரண்டு மாங்கனிகளை அவரிடம் கொடுத்துச்சென்றார். பரமதத்தர் அந்த இரண்டு மாங்கனிகளையும் தமது இல்லத்திற்கு அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில் புனிதவதியாரின் இல்லத்திற்கு சிவனடியார் ஒருவர் பசித்த நிலையில் வந்தபோது புனிதவதியார் அவரை தமது இல்லத்திற்குள் அழைத்துச் சென்று உணவு பரிமாறினார். அப்பொழுது கணவர் அனுப்பி இருந்த இரண்டு மாங்கனிகளுள் ஒன்றை அவருக்கு அளித்தார்.

இறைவனின் கருணையால்

அதன் பிறகு இல்லம் வந்த கணவருக்கு புனிதவதியார் மாங்கனியுடன் உணவு பரிமாறினார். அந்த மாங்கனி சுவையாக இருந்ததால் மற்றொரு மாங்கனியை கேட்க, புனிதவதியார் என்ன செய்வது? என்று தெரியாமல் இறைவனை வேண்டினார். அப்போது அவரது கையில் இறைவனின் கருணையால் மாங்கனி ஒன்று வந்தடைந்தது. 

அந்த மாங்கனியை புனிதவதியார் தமது கணவருக்கு அளித்தார். அந்த மாங்கனி முன்பை விட இனிமையாக இருந்ததால் இதுதான் அனுப்பியது அல்ல என்றும், இந்த மாங்கனி ஏது? என்றும் பரதமதத்தர் கேட்க, புனிதவதியாரும் நடந்த உண்மைகளை கணவரிடம் கூறினார். அப்படி என்றால் இன்னொரு மாங்கனியை பெற்றுத்தா என்று பரமதத்தர் கேட்கவும், புனிதவதியார் கைகளை ஏந்தி இறைவனை வேண்டினார். அப்போது அவரது கையில் மேலும் ஒரு மாங்கனி வர அதனை அவர் கணவரிடம் அளித்தார்.

அந்த மாங்கனியை பரமதத்த செட்டியார் வாங்கும்போது அது திடீரென்று மறைந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பரமதத்தர் தமது மனைவி மனிதப்பிறவி அல்ல, தெய்வப்பிறவி என்பதை அறிந்து அவரை விட்டு விலகிச்சென்று பாண்டிய நாட்டில் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

அம்மையே என்று அழைத்த இறைவன்

கணவர் பாண்டிய நாட்டில் இருப்பதை அறிந்த புனிதவதியார் அவரை தேடிச்சென்றபோது பரமதத்த செட்டியார் தமது இரண்டாவது மனைவி மற்றும் மகளுடன் வந்து புனிதவதியாரின் கால்களில் விழுந்து வணங்கினார். அதனைத் தொடர்ந்து தமக்கு இனி இந்த அழகுமேனி வேண்டாம், பேய் உருவம் வேண்டும் என்று இறைவனிடம் வேண்ட, இறைவனும் அவரது வேண்டுதலுக்கு இரங்கினார். பேய் உருவம் தாங்கிய நிலையில் தலையால் நடந்து கயிலாயத்தை சென்றடைந்தார். அங்கு அவரை சிவபெருமான் அன்புடன் ‘அம்மையே’ என்று அழைக்க, அம்மையார் சிவபெருமானை ‘அப்பா’ என்று அழைத்து அவரது திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார்.

அப்போது ‘நம்மிடம் நீ வேண்டுவது யாது’ என்று சிவபெருமான் கேட்க, அதற்கு அம்மையார் ‘இறவாத அன்பு வேண்டும், பிறவாமை வேண்டும். மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும். உன் ஆட்டத்தை கண்டு மகிழ்ந்த வண்ணம் பாடிக் கொண்டே உன் பாதத்தின் கீழிருக்க வேண்டும்’ என்று வேண்டினார். 

அதனை ஏற்றுக்கொண்ட சிவபெருமான், ‘அம்மையே! நீ திருவாலங்காடு அடைந்து எமைப்பாடு என்று கூறினார். அதனை தொடர்ந்து திருவாலங்காடு சென்றடைந்த அம்மையார், ‘கொங்கை திரங்கி’ மற்றும் ‘எட்டி இலம் ஈகை’ என்று தொடங்கும் திருப்பதிகங்களை பாடி அருளினார். திருவாலங்காட்டில் இறைவனின் பொற்பாத நிழலில் என்றும் வீற்றிருக்கும் பெரும்பேறு பெற்றார் என்பது புராண வரலாறு.

வரும் ஏப்ரல் 1 மற்றும் 2ம்  தேதிகளில் காரைக்கால் அம்மையார் அவர்களுக்கு குரு பூசை விழா திருவாலங்காடு கோவிலில் நடைபெற உள்ளது.சித்த அடியார்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.  



வியாழன், 29 மார்ச், 2018

வான்மீகி தலமெனும் திருவான்மியூரில் ஸ்ரீ அகத்திய பெருமானுக்கு திருக்கல்யாண காட்சி - 30-03-2018


நடுவு நில்லாது இவ் உலகம் சரிந்து
கெடு கின்றது எம் பெருமான் என்ன ஈசன்
நடு உள அங்கி அகத்திய நீ போய்
முடுகிய வையத்து முன்னிர் என்றானே.
-திருமந்திரம்( இரண்டாம் தந்திரம்-1.அகத்தியம்)

பெரும்பூதம் ஐந்தினும் நடுவாக வுள்ளது தீ. அத் தீயின் நடுவுள் அதற்கு ஒளியும் சூடும் ஈந்து விளங்கிக் கொண்டிருப்பவன் சிவபெருமான். அவன் 'அவ்வெரியினை உருவருக்கங்களில்' ஒன்றாகக் கொள்பவன். அதனால் விண்ணவர் ஒருங்கு திரண்டு சிவபெருமான்பாற் சென்று "தீயின் நடுவுள் விளங்கும் ஆண்டவனே! உலகம் தென்பாலுயர்ந்து வடபால் தாழ்ந்து நடுவிழந்து நிற்கின்றது, காத்தருள வேண்டும்," என்று வேண்டினர். சிவபெருமான் அவ் வேண்டுகோளைத் திருச்செவி ஏற்றுத் தக்க அகத்தியனை நோக்கி! அகத்தியனே "படிப்பினாலும் பண்பாட்டினாலும் உண்மை உயர்வைத் தென்னாடு எந்நாளும் எய்தி நிற்கின்றது. அத் தென்பால் நீ சென்று அவற்றை ஆய்ந்து கைக்கொண்டு முன்னுவாயாக" என்று அருளினன்.

இதற்கு வழங்கும் வரலாறு பின் வருமாறு: 

முன்னொரு காலத்துத் திருக்கைலாய மலையில் இறவாப் பிறவா நிலைசேர் சிவபெருமானுக்கும் அத்தகைய மலைமகளார்க்கும் திருமணம் நிகழ்ந்தது. அத் திருமணங்கண்டு பேறு பெறுதற்பொருட்டு விண்ணவரும் மண்ணவரும் ஒருங்கு கூடினர். அதனால் நிலவுலகம் தென்பால் உயர்ந்து வடபால் தாழ்ந்து தடுமாறலாயிற்று. அதுகண்டு விண்ணவர் நடுங்கினர். சிவபெருமான் அவ்விண்ணவரை நோக்கித் தென்பால் என்னை ஒப்பான் ஒருவன் சென்றால் வடபாலுள்ள தாழ்வு தீரும் என்றருளி அகத்தியனை அழைத்துப் போகக் கட்டளையிட்டருளினன். 

அகத்தியனும் அச் சிவபெருமானைப் பணிந்து வணங்கி எம்பெருமானே! 'தென்பாண்டி நாடே சிவலோகம்' ஆதலின் ஆண்டு வாழ்வார் உண்மையான் உன்னையுணர்த்துவதும், என்றும் உனக்கு உவப்பாயுள்ளதும், இருவழக்கினும்நின்று நிலவுவதும், இனிமையும் சுருக்கமும் தெளிவும் சிறப்பும் இயற்கையும் நயனும் ஒருங்கமைந்ததும் ஆகிய கன்னிச் செந்தமிழ் மொழியின் மன்னியபுலமை என்ப. அவர்களுடன் அளவளாவி உறவு பூண்டு உறைவதற்கு அறந்தவறாத்திறம் அமைந்த அத் தண்டமிழ் மொழியின் அமைதியினை அடியேற்கு அருளுதல் வேண்டுமென விண்ணப்பித்தனர். சிவபெருமானும் முதன்மையும் முன்மையும் நன்மையும் இயல்பாக அமைந்த நற்றமிழ் அமைதியினை அறிவுறுத்தருளி நண்ணுவித்தனன். இவ்வுண்மை வரும் பரஞ்சோதியார் திருவிளையாடற் புராணச் செய்யுளான் உணர்க.

பரம்பொருளின் வேண்டுகோளை ஏற்று தென் புல மக்களுக்கு ஞானத்தை அருளிச் செய்யப் புறப்பட்ட அகத்திய பெருமான்  திருமணக் காட்சியை வேண்ட, அக்கணமே

" நீ நினைக்கும் போதெல்லாம் அக்காட்சியை உனக்கு அருளிச் செய்வோம்" என்று வரமீந்தார் .

அந்த வரத்தின் படி அவர் 1008 திருக்கோவில்களில் திருக்கல்யாண காட்சி தரிசித்தார்.அத்தகைய காட்சியாகப் பட்டது  வருடா வருடம் பங்குனி மாதத்தில் அகத்திய பெருமான் திருமண காட்சியை கண்ட ஓர் இடமான  வான்மீகி தலமெனும் திருவான்மியூரில் நடைபெறும்.

அத்தகைய சிறப்பு வாய்ந்த திருக்கல்யாணம் இன்று 30-03-2018 மாலை 05:30 மணிக்கு மருந்தீஸ்வரர் ஆலயத்தில்  வன்னி மரத்தடியில் நடைப்பெற  உள்ளது.அகத்திய பெருமானின் அடியவர்கள் தரிசித்து இன்புற்று வாழ வேண்டுகிறோம் . 

விழா அழைப்பிதழ் 

அருள்மிகு திரிபுர சுந்தரி உடனாய ஸ்ரீ அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோவில் வரலாறு 


இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், மூலவரின் விமானம் சதுர்வஸ்தம் என்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 258 வது தேவாரத்தலம் ஆகும்.

சிஷ்டமுனிவர் செய்த சிவபூஜைக்காக, இந்திரன் தன்னிடமிருந்த காமதேனுவை கருடனுடன் அனுப்பி வைத்தான். பூஜை நேரத்தில் காமதேனு பால் சுரக்காமல் தாமதம் செய்யவே கோபம்கொண்ட முனிவர், அதனை புனிதத்தன்மை இழந்து காட்டுப்பசுவாக மாறும்படி சபித்தார்.  கலங்கிய காமதேனு, தனக்கு விமோசனம் கேட்க, இத்தலத்தில் வன்னி மரத்தடியில் சுயம்புலிங்கமாக உள்ள சிவனை வணங்கினால் விமோசனம் உண்டு என்றார். அதன்படி, இங்கு வந்த காமதேனு சுயம்புவாய் இருந்த சிவன் மீது தினசரி பால் சுரந்து விமோசனம் பெற்றது. இதனால், இங்குள்ள இறைவன் "பால்வண்ணநாதர்' என்றும் அழைக்கப்படுகிறார்.

கொள்ளைக்காரராக இருந்த வால்மீகி, திருந்திட எண்ணம் கொண்டு இங்குள்ள சிவனை வணங்கி வந்தார். ஒருமுறை, அவர் சிவனை தரிசிக்க வந்தபோது, அவரைக்கண்டு பயந்த காமதேனு ஓடியது. அப்போது இங்கிருந்த லிங்கத்தை அறியாமல் மிதித்ததில் சுவாமியின் மேனியில் தடம் பதிந்தது. இன்றும்கூட, சுவாமியின் தலையிலும், மார்பிலும் பசு மிதித்த தடம் இருக்கிறது.

தன்னை வணங்கி திருந்திய வால்மீகிக்கு, சிவன் வன்னி மரத்தினடியில் காட்சி தந்தார். அப்போது, வால்மீகி இறைவனிடம் வேண்டியதற்கேற்ப அவரது பெயரிலேயே இத்தலம் விளங்குகிறது. பிரகாரத்தில் அகத்தியர், வால்மீகிக்கு சிவன் காட்சி தந்த வன்னிமரம் உள்ளது. இவ்விடத்தில் பங்குனி பிரம்மோற்ஸவத்தின் போது, அகத்தியருக்கு காட்சி தந்த வைபவ நிகழ்ச்சி நடக்கிறது. நடராஜர், அருணகிரியாரால் பாடல் பெற்ற முத்துக்குமரர், மூன்று சக்தி விநாயகர்கள், 108 சிவலிங்கங்கள், பஞ்சலிங்கங்கள் தனித்தனி சன்னதியில் உள்ளன. தினசரி அதிகாலையில் கோபூஜை செய்யப்பட்ட பின்பே சுவாமிக்கு அபிஷேகம் நடக்கிறது. சுவாமிக்கு வான்மீகிநாதர், வேதபுரீஸ்வரர், அமுதீஸ்வரர், பால்வண்ணநாதர் என்ற பெயர்களும் உள்ளது.

அகத்தியருக்கு உபதேசம்: அகத்திய முனிவர் இங்கு வந்து சுவாமியை வணங்கி தவம் செய்தார். அவருக்கு, வன்னி மரத்தடியில் காட்சி தந்த சிவன் உலகில் தோன்றியுள்ள நோய்களுக்கு உண்டான மருந்துகளைக்குறித்தும், மூலிகைகளின் தன்மைகள் குறித்தும் உபதேசம் செய்தார். எனவே, இத்தலத்து ஈசன் "மருந்தீஸ்வரர்' எனப்படுகிறார்.

மேற்கு திரும்பிய சிவன்: அபயதீட்சிதர் எனும் பக்தர் ஒருவர், சுவாமியை வழிபட வந்தபோது கடும்மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்படவே, அவரால் நீரைக்கடந்து சுவாமியைக்காண வரமுடியவில்லை. அவர் சுவாமிக்கு பின்புறம் இருந்ததால் சுவாமியின் முதுகுப்பகுதியை மட்டும்தான் தரிசிக்க முடிந்தது. வருத்தம்கொண்ட அவர், "சிவனே! உன் முகம் கண்டு தரிசனம் செய்ய அருள மாட்டாயோ?' என வேண்டினார். அவருக்காக சிவன் மேற்கே திரும்பி காட்சி தந்தார். இதனால், இங்கு சிவன் மட்டும் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். அம்பாள், சுவாமிக்கு பின்புறமாக தெற்கு நோக்கியும், முருகன், விநாயகர் ஆகியோர் கிழக்கு நோக்கியும் காட்சி தருகின்றனர்.

முகவரி:

அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில்,
திருவான்மியூர், சென்னை-600 041. 
சென்னை மாவட்டம்.  
போன்:+91 - 44 - 2441 0477.

ஞாயிறு, 25 மார்ச், 2018

ஸ்ரீ அகத்திய பெருமான் ஆணைப்படி சிங்கப்பூரில் ஸ்ரீ பாலா மகாயாகம் மற்றும் 151 பாலா பூஜை


எண்ணுகின்ற எண்ணமெல்லாம் நீயே " என் செயல் அதற்கும் மூலம் அது நீயே

 "சித்தர்களெல்லாம் பணியும் அகத்திய மகாகுருவே . உன் திருவடிகளுக்கு நமஸ்காரம் .. உயரிய சொல் அது உன் சொல்லே . உன்னதம் அது உன் செயலே . ஆணையிடுகின்ராய் பணிகிறேன் . ஆட்டுவிக்கின்றாய் ஆடுகிறேன் .மகாகுருவே .. உன் பார்வை ஒன்றே போதும் தர்மங்கள் எல்லாம் தழைக்க . ஐயனே .நீ இட்ட புதிய பணி தற்போது நிகழ இருக்கின்றது .சிங்கப்பூர் நாட்டில் சென்று அங்கு வரும் அன்னையின் பாதத்தை பணிவாய் என ஆணையிட்டாய் . உன்ஆணைக்கு இணங்க சிங்கப்பூர் நாட்டிலே சித்தர்களின் தலைவி அன்னை பாலா , பவனி வரஇருக்கிறாள் .

ஸ்ரீ ருத்ர காளி அம்மன்கோயில் வளாகத்தில் எதிர்வரும் 31.03.2018 சனிக்கிழமை காலை 8 மணிக்கு ஸ்ரீ பாலா மகாயாகமும் . மாலை 6 மணிக்கு 151 பாலா கன்னிகா பூஜையும் உன் ஆணைப்படி நிகழ்த்த இருக்கின்றோம். வாலை மனோன்மணி . புவனை திரிபுரை என சித்தர்களால் போற்றப்பட்டவள் பாலா திரிபுரசுந்தரி .அன்னைக்கு சிங்கப்பூர் மாநகரில் முதன்முதலாக 151 பாலா பூஜையை மகாகுரு அகத்தியரின் ஆணைப்படி நடத்த இருக்கிறோம் . பரம ரகசியமான அற்புத ஆற்றல் கொண்ட மஹா மூலிகைகள் .அன்னை பாலாவிற்கு பிரியமான சமித்துக்கள் .அன்னைக்கு பிரியமான தர்மங்களும் தா னங்களும் நிகழ இருக்கிறது .151பெண் குழந்தைகள் மத்தியில் நானே வந்து அமர்வேன் என அன்னை பாலா வாக்களித்து இருக்கிறாள் . அன்னையின் கோலம் காண என் மகாகுரு அகத்தியரும் வருகிறார் . அன்னை லோபாமுத்ரா தேவி 151 சுமங்கலிகளில் ஒருவரை இருப்பதாக வாக்களித்து இருக்கிறாள் . காண கண் கோடி வேண்டும் தாயே வாலை குமரியே உன் வருகையை காண .எல்லோரும்வாருங்கள் என் அன்னையை காண .

இந்தமகா யாகத்தை நடத்தி தரும் ருத்ர காளி அம்மன் கோயில் நிர்வாகத்திற்கும் , அகத்திய கிருபாசிங்கப்பூர் அமைப்பின் பொறுப்பாளர்களான திரு .அறுமுகம்,அறிவரசன்,மனோகரன் மற்றும் அனைத்து அகத்திய கிருபா நண்பர்களுக்கும் என் பணிவான வணக்கங்கள் . தொடரட்டும் அகத்தியரின் தர்மங்கள் .வளம்பெறட்டும் தேசம் .வருகின்ற அன்னை வாலை மனோன்மணியை வரவேற்று பணிவோம் .
ஒளி வடிவாக விளங்கி சித்தர்களுக்கு எல்லாம் தலைவியாக இருக்கும் ஸ்ரீ பாலா த்ரிபுரசுந்தரியே . தாயே .ஒளிமயமான சிறு பெண் வடிவமே உன்னை அகத்தியரின் அடிமைகள் பண்ணிகின்றோம் . வரவேண்டும் தாயே .யாகத்தில்  இந்த யுகத்தின் தர்மங்கள் தழைக்க வரவேண்டும் .மக்களின் துயரங்கள் எல்லாம் தீர்க்க வருவாய் தாயே  உன் சின்னஞ்சிறு பாதங்கள் ஸ்ரீ ருத்ரமா காளி ஆலயத்தில் வலம் வந்து இந்த உலகம் நலம்பெற வருவாய் அன்னையே . உனக்கென  ஒளிவிடும் வில்வ மர நெல்லி மர கட்டைகள் எல்லாம் உன் யாகத்தீயில் பூரணமாக காத்துகொண்டு இருக்கிறது .பரிசுத்தமான மனங்களில் வாழும் சிறு குழந்தையே பாலா . உனக்கென யாகத்தில் இட காமதேனுவின் வம்சத்தில் வந்த பரிசை என்னும் பசுவின் பரிசுத்தமான நெய் காத்துஇருக்கிறது தாயே . தாமரையை கைகளில் ஏந்தியவளே .உன்னக்கென தாமரைகள் காத்துஇருக்கின்றன .பரிசுத்தமான செவ்வாழை பழங்களால் ஆன உன்னதமான உணவுகள் இருக்கின்றன தாயே .வருவாய் அம்மா.

எங்களை வாழவைக்க .உன்னை வரவேற்க 151 சுமங்கலிகள் காத்து இருக்கிறோம் . உன் பாதங்களில் நலங்கிட.அம்மா உன் பிஞ்சு பாதங்கள் இந்த உலகம் செழிக்க வரவேண்டும் இந்த யாகத்திற்கு தாயே .இந்திய தேசத்தின் காடுகளில் உள்ள அதி அற்புதமான பிரபஞ்சத்தை வாழவைக்கும் மூலிகைகள் உன் யகத்திற்காக காத்திருக்கிறது . தாயே வருவாய் உனக்கு பிரியமான மாதுளை முத்துக்களை அருந்துவாய் தாயே . உனக்கென பரிசுத்தமான அன்னங்கள் தயாராக இருக்கும் தாயே .அன்னை பாலாம்பிகையே உனக்கென 1லட்சம் உன் நாமங்களால் உருவேற்றிய , மகாபாலா எந்திரம் பொறிக்கப்பட்ட பட்டு வஸ்திரம் காத்து இருக்கிறது தாயே .அன்னையே உன்னை வரவேற்க உன்னைப்போல் வேடமிட்ட 151 சிறு பெண் குழந்தைகள் அன்போடு இருக்கிறார்கள் அன்னையே .உனக்கென பரிசுத்தமான வெற்றிலைகளில் பரிமளம் கலந்த தாம்பூலம் தயாராக இருக்கிறது அம்மா . வருவாய் என் மகாகுரு அகத்தியனையும் அழைத்துக்கொண்டு .வரவேண்டும் அம்மா .இந்த யுகத்தின் தர்மங்கள் தழைக்க வருவாய் சித்தர்கள் மனம் மகிழ வருவாய் .எங்களின் துயர் தீர்க்க வருவாய் .
அன்னைஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியே சரணம் சரணம் சரணம் .

முகவரி:
Sri Ruthra Kaliamman Temple,100 Depot Rd, Singapore 109670

நன்றி
அகத்திய கிருபா அறக்கட்டளை

சனி, 17 மார்ச், 2018

அகத்திய பெருமானுக்கு முருகப்பெருமான் உபதேசித்த சுப்ரமணியர் ஞானம் இருநூறு,பாடல் 13


மாட்டுகிறேன் யென்மகனே மாணாகேளு
மகத்தான கற்பமென்ற மார்க்கஞ்சொல்வேன்
பூட்டுகிறேன் சிகாரமென்ற நெல்லிச்சேறு
புதுமையுள்ள மகாரமென்ற நீருஞ்சேரு
ஆட்டுகிற ஆதிவஸ்தை யதிலேசேரு
யடங்காத யென்றாள் வஸ்துஞ்சேரு
நாட்டுகிற நாலையுந்தா யென்றதாக
நலமான தேவியைத்தா னாட்டுவாயே. 
-சுப்ரமணியர் ஞானம் இருநூறு,பாடல் 13

விளக்கம்:

இந்த பாடலில் முருகப் பெருமான் தனது மாணாக்கன் ஆகிய அகத்திய பெருமானுக்கு எது உண்மையான கற்பம் என்று போதிக்கிறார்.கற்பம் என்பது வெளியில் இல்லை இந்த பிண்டத்திலே அது உள்ளது என்று அதற்குரிய மந்திரைத்தை கூறி முருகப் பெருமான் பதிமூன்றாவது பாடலை நிறைவு செய்கிறார்.    

சப்தமாதர்களைப் பற்றி அகத்திய பெருமான் அருளிய ஜீவ வாக்கு


சப்தமாதர்கள் யார் ? சக்தியின் அம்சங்கள்தான். இப்படியே பிரிந்து, பிரிந்து பார்த்துக்கொண்டே வந்தால் ‘ எனக்கு அம்பாளை பிடிக்கிறது, எனக்கு முருகனைப் பிடிக்கிறது, எனக்கு விநாயகரைப் பிடிக்கிறது ‘ என்று மீண்டும், மீண்டும் வடிவங்களில் மனிதன் சிக்கிவிடுகிறான். தவறொன்றுமில்லை. எஃதாவது ஒரு வடிவத்திற்குள் தன் மனதை ஒடுக்கப்  பழகிக்கொண்டால்கூட போதும். இந்த சப்தமாதர்கள் என்பது, சித்தர்கள், முனிவர்கள் இவர்களுக்கே சக்தியை அருளக்கூடிய நிலையில் உள்ள அம்பாளின் உபசக்திகள்தான். எனவே சப்தமாதர்களை வணங்கினாலும், சாக்ஷாத் அன்னை பராசக்தியை வணங்கினாலும் எல்லாம் ஒன்றுதான். அதற்காக விநாயகப்பெருமானை வணங்கினால் அல்லது முக்கண்ணனாகிய சிவபெருமானை வணங்கினால் அவையேதும் பலனைத் தராதா ? என்று கேட்கவேண்டாம். இவள் கேட்ட கேள்வியின் அடிப்படையில் எமது பதில் அமைவதால் அந்தக் கேள்வி, அதற்குரிய அளவில் இந்த பதிலை எடுத்துக்கொள்ள வேண்டும். நாங்கள் அடிக்கடி எமை நாடுகின்ற சேய்களுக்கு கூறுவது, சப்தகன்னியர்கள் அல்லது சப்தமாதர்கள் இரண்டும் ஒன்றுதான். சப்தம் என்ற சொல்லின் பொருளைப் பார்த்தால் ஏழு என்ற எண்ணைக் குறிக்கும்.

சப்தம் என்ற சொல்லுக்கு ஏழு என்ற பொருள் எப்படி வந்தது தெரியுமா ? ஏழு வகையான விலங்குகள் ஒரே சமயத்தில் ஒரேவிதமான ஒலியளவை எழுப்பினால் அப்பொழுது ஒருவிதமான இனிமையான இசை வடிவம் பிறக்கும். அந்த இசை வடிவத்தை வரிவடிவமாக மாற்றினால் என்ன கிடைக்கும் தெரியுமா ? ச,ரி,க,ம,ப,த,நி,ச என்ற ஒலி வரிவடிவமாக அப்பொழுது கிடைக்கும். இந்த சப்தம் என்ற சொல்லுக்குப் பின்னால் எத்தனையோ பொருள் இருக்கிறது. இருட்டிலே வழிகாட்டியாக இந்த சப்தமாகிய ஒலி இருக்கிறது. எந்தவிதமான ஒளி, அதாவது வெளிச்சம் இல்லாத நிலையிலே ஒலிதான் மனிதனுக்கு கண்ணாக இருக்கிறது. எனவே ஏழுவகையான சக்திகள் என்பதை குறிக்கதான் சப்தம், சப்தமாதர்கள், சப்தரிஷிகள் என்றெல்லாம் ஒருவகையான பொருளில் கூறப்படுகிறது. இன்னும் பல்வேறுவிதமான பொருள் இருக்கிறது. அது குறித்தெல்லாம் தக்க காலத்தில் விளக்கம் தருவோம்.

சப்தமாதர்களை வணங்கினால் என்ன பலன் ?

 என்று பார்த்தால், பொதுவாக எல்லாவகையான தோஷத்திற்கும் எத்தனையோ வகையான பரிகாரங்கள் இருக்கின்றன. அத்தனை பரிகாரங்களையும் ஒரு மனிதனால் செய்ய இயலாது என்பது எமக்கும் தெரியும், இறைவனுக்கும் தெரியும். அப்படியிருக்கும் பட்சத்தில் மிக எளிமையாக சப்தமாதர்களை அவனவன் அறிந்த மொழியில் வணங்கிவந்தால் அது நல்ல தோஷ பரிகாரமாக இருக்கும். அடுத்ததாக குறிப்பாக பெண்களுக்கு நாங்கள் கூறவருவது, இக்காலத்திலே வெளியில் செல்லவேண்டிய நிலை பெண்களுக்கு ஏற்படுகிறது. வெளியில் செல்லும்பொழுதே புரிந்துகொள்ள வேண்டும், ஆபத்தும் உடன் வருகிறது என்று. அப்படி வரக்கூடிய ஆபத்துக்களிலிருந்து பெண்கள் தங்களைக் காத்துக்கொள்ள இந்த சப்தமாதர்கள் வழிபாட்டை அனுதினமும் இல்லத்தில் அமர்ந்து அமைதியாக செய்து வந்தால் நல்ல பலன் உண்டு.

 இன்னும் கூறப்போனால், மனமொன்றி சப்தமாதர்கள் வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டே வந்தால், எல்லோரும் கேட்கிறார்களே, குண்டலினி என்றால் என்ன ? அந்த குண்டலினி சக்தியை எழுப்பினால் என்ன நடக்கும் ? என்று. இந்த அன்னையர்களின் கருணையாலே எந்தவிதமான தியான மார்க்கமில்லாமல் சப்தமாதர்களை பிரார்த்தனை செய்வதன் மூலமே ஒரு மனிதன் அடையலாம். ஆனால் இது அத்தனை எளிதான காரியமல்ல. பல்வேறு சோதனைகள் வரும். அவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு ஒருமைப்பட்ட மனதோடு சப்தமாதர்களை வணங்கிவந்தால் ஒரு மனிதனுக்கு வேண்டிய எல்லா நலன்களும் இகத்திலும், பரத்திலும் கிட்டும். இன்னும் பல்வேறு விளக்கங்களை பிற்காலத்தில் உரைப்போம்.

பூஜை முறை அறிய விரும்பினால் கீழ்கண்ட தளத்தில் செல்லுங்கள் .

http://temple.dinamalar.com/Slogandetails.php?id=887

நாட்டில் மது ஒழிய வேண்டி கேட்ட போது அகத்திய பெருமான் அருளிய ஜீவ வாக்கு


இறைவன் அருளாலே இஃதொப்ப தீய பழக்க, வழக்கங்கள் மனிதனிடம் இன்று, நேற்று தோன்றியது அல்ல. என்று மனித குலம் தோன்றியதோ அன்றிலிருந்தே தீய பழக்கங்கள், அசுர பழக்கங்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இது வேண்டாம், முற்றிலும் ஒழித்துவிடலாம் என்று மனிதன் எண்ணலாம். ஆனால் இது ஒருபொழுதும் நடக்கப்போவதில்லை என்பதே உண்மையாகும். ஆனால் ஒவ்வொரு மனிதனும் இதுபோன்ற தீய பழக்கத்திலிருந்து தம்மை தற்காத்துக்கொள்ள மனதை வைராக்யமாக வைத்துக்கொள்வது அவசியம். அந்த செயலை செய்வதால் என்ன நன்மை ? என்ன தீமை ? என்பதை ஒருவன் சுயமாக சிந்தித்துப் பார்த்தால் அப்பொழுது புரியும். மிருகங்கள் இதுபோன்ற பழக்கங்களுக்கு அடிமையாவதில்லை. மிருகங்களுக்கு ஐந்தறிவு. மனிதனுக்கு ஆறறிவு என்று மனிதனே கூறிக்கொள்கிறான். ஐந்தறிவு கொண்ட மிருகம் போதைக்கு அடிமையாவதில்லை. ஆனால் ஆறறிவு கொண்டவன் அடிமையாகிறான் என்றால் எங்கே தவறு இருக்கிறது ? என்பதை மனிதன் புரிந்துகொள்ளவேண்டும். இது விளக்கம்.

இதற்கு பிராயச்சித்தம் என்றால் கதிர்மதி எனப்படும் அமாவாசை தினங்களிலே வடக்கு நோக்கி இருக்கின்ற காளி போன்ற உக்ரமான தெய்வங்களுக்கு மிக, மிக உயர்வான பொருள்களைக் கொண்டு அபிஷேகம், குறிப்பாக பசுவின் பாலைக்கொண்டு எத்தனை அளவு முடியுமோ அதைக்கொண்டு அபிஷேகம் செய்து, அரசக்கனி எனப்படும் எலுமிச்சம் கனிகளால் மாலை சாற்றி, நறுமண மலர்கள் மாலை சாற்றி அதன் பிறகு மிக, மிக உயர்வான அன்னங்களை, அதை ( தனம் கொடுத்து வாங்கி உண்ண முடியாத ) ஏழைகளுக்கு யார் ஒருவர் தருகிறார்களோ அஃதொப்ப பகுதியிலே அதுபோன்ற பகுதியிலே இதுபோன்ற தீய பழக்கங்கள் படிப்படியாகக் குறையும்.