நடுவு நில்லாது இவ் உலகம் சரிந்து
கெடு கின்றது எம் பெருமான் என்ன ஈசன்
நடு உள அங்கி அகத்திய நீ போய்
முடுகிய வையத்து முன்னிர் என்றானே.
-திருமந்திரம்( இரண்டாம் தந்திரம்-1.அகத்தியம்)
பெரும்பூதம் ஐந்தினும் நடுவாக வுள்ளது தீ. அத் தீயின் நடுவுள் அதற்கு ஒளியும் சூடும் ஈந்து விளங்கிக் கொண்டிருப்பவன் சிவபெருமான். அவன் 'அவ்வெரியினை உருவருக்கங்களில்' ஒன்றாகக் கொள்பவன். அதனால் விண்ணவர் ஒருங்கு திரண்டு சிவபெருமான்பாற் சென்று "தீயின் நடுவுள் விளங்கும் ஆண்டவனே! உலகம் தென்பாலுயர்ந்து வடபால் தாழ்ந்து நடுவிழந்து நிற்கின்றது, காத்தருள வேண்டும்," என்று வேண்டினர். சிவபெருமான் அவ் வேண்டுகோளைத் திருச்செவி ஏற்றுத் தக்க அகத்தியனை நோக்கி! அகத்தியனே "படிப்பினாலும் பண்பாட்டினாலும் உண்மை உயர்வைத் தென்னாடு எந்நாளும் எய்தி நிற்கின்றது. அத் தென்பால் நீ சென்று அவற்றை ஆய்ந்து கைக்கொண்டு முன்னுவாயாக" என்று அருளினன்.
இதற்கு வழங்கும் வரலாறு பின் வருமாறு:
முன்னொரு காலத்துத் திருக்கைலாய மலையில் இறவாப் பிறவா நிலைசேர் சிவபெருமானுக்கும் அத்தகைய மலைமகளார்க்கும் திருமணம் நிகழ்ந்தது. அத் திருமணங்கண்டு பேறு பெறுதற்பொருட்டு விண்ணவரும் மண்ணவரும் ஒருங்கு கூடினர். அதனால் நிலவுலகம் தென்பால் உயர்ந்து வடபால் தாழ்ந்து தடுமாறலாயிற்று. அதுகண்டு விண்ணவர் நடுங்கினர். சிவபெருமான் அவ்விண்ணவரை நோக்கித் தென்பால் என்னை ஒப்பான் ஒருவன் சென்றால் வடபாலுள்ள தாழ்வு தீரும் என்றருளி அகத்தியனை அழைத்துப் போகக் கட்டளையிட்டருளினன்.
அகத்தியனும் அச் சிவபெருமானைப் பணிந்து வணங்கி எம்பெருமானே! 'தென்பாண்டி நாடே சிவலோகம்' ஆதலின் ஆண்டு வாழ்வார் உண்மையான் உன்னையுணர்த்துவதும், என்றும் உனக்கு உவப்பாயுள்ளதும், இருவழக்கினும்நின்று நிலவுவதும், இனிமையும் சுருக்கமும் தெளிவும் சிறப்பும் இயற்கையும் நயனும் ஒருங்கமைந்ததும் ஆகிய கன்னிச் செந்தமிழ் மொழியின் மன்னியபுலமை என்ப. அவர்களுடன் அளவளாவி உறவு பூண்டு உறைவதற்கு அறந்தவறாத்திறம் அமைந்த அத் தண்டமிழ் மொழியின் அமைதியினை அடியேற்கு அருளுதல் வேண்டுமென விண்ணப்பித்தனர். சிவபெருமானும் முதன்மையும் முன்மையும் நன்மையும் இயல்பாக அமைந்த நற்றமிழ் அமைதியினை அறிவுறுத்தருளி நண்ணுவித்தனன். இவ்வுண்மை வரும் பரஞ்சோதியார் திருவிளையாடற் புராணச் செய்யுளான் உணர்க.
பரம்பொருளின் வேண்டுகோளை ஏற்று தென் புல மக்களுக்கு ஞானத்தை அருளிச் செய்யப் புறப்பட்ட அகத்திய பெருமான் திருமணக் காட்சியை வேண்ட, அக்கணமே
" நீ நினைக்கும் போதெல்லாம் அக்காட்சியை உனக்கு அருளிச் செய்வோம்" என்று வரமீந்தார் .
அந்த வரத்தின் படி அவர் 1008 திருக்கோவில்களில் திருக்கல்யாண காட்சி தரிசித்தார்.அத்தகைய காட்சியாகப் பட்டது வருடா வருடம் பங்குனி மாதத்தில் அகத்திய பெருமான் திருமண காட்சியை கண்ட ஓர் இடமான வான்மீகி தலமெனும் திருவான்மியூரில் நடைபெறும்.
அத்தகைய சிறப்பு வாய்ந்த திருக்கல்யாணம் இன்று 30-03-2018 மாலை 05:30 மணிக்கு மருந்தீஸ்வரர் ஆலயத்தில் வன்னி மரத்தடியில் நடைப்பெற உள்ளது.அகத்திய பெருமானின் அடியவர்கள் தரிசித்து இன்புற்று வாழ வேண்டுகிறோம் .
விழா அழைப்பிதழ்
அருள்மிகு திரிபுர சுந்தரி உடனாய ஸ்ரீ அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோவில் வரலாறு
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், மூலவரின் விமானம் சதுர்வஸ்தம் என்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 258 வது தேவாரத்தலம் ஆகும்.
சிஷ்டமுனிவர் செய்த சிவபூஜைக்காக, இந்திரன் தன்னிடமிருந்த காமதேனுவை கருடனுடன் அனுப்பி வைத்தான். பூஜை நேரத்தில் காமதேனு பால் சுரக்காமல் தாமதம் செய்யவே கோபம்கொண்ட முனிவர், அதனை புனிதத்தன்மை இழந்து காட்டுப்பசுவாக மாறும்படி சபித்தார். கலங்கிய காமதேனு, தனக்கு விமோசனம் கேட்க, இத்தலத்தில் வன்னி மரத்தடியில் சுயம்புலிங்கமாக உள்ள சிவனை வணங்கினால் விமோசனம் உண்டு என்றார். அதன்படி, இங்கு வந்த காமதேனு சுயம்புவாய் இருந்த சிவன் மீது தினசரி பால் சுரந்து விமோசனம் பெற்றது. இதனால், இங்குள்ள இறைவன் "பால்வண்ணநாதர்' என்றும் அழைக்கப்படுகிறார்.
கொள்ளைக்காரராக இருந்த வால்மீகி, திருந்திட எண்ணம் கொண்டு இங்குள்ள சிவனை வணங்கி வந்தார். ஒருமுறை, அவர் சிவனை தரிசிக்க வந்தபோது, அவரைக்கண்டு பயந்த காமதேனு ஓடியது. அப்போது இங்கிருந்த லிங்கத்தை அறியாமல் மிதித்ததில் சுவாமியின் மேனியில் தடம் பதிந்தது. இன்றும்கூட, சுவாமியின் தலையிலும், மார்பிலும் பசு மிதித்த தடம் இருக்கிறது.
தன்னை வணங்கி திருந்திய வால்மீகிக்கு, சிவன் வன்னி மரத்தினடியில் காட்சி தந்தார். அப்போது, வால்மீகி இறைவனிடம் வேண்டியதற்கேற்ப அவரது பெயரிலேயே இத்தலம் விளங்குகிறது. பிரகாரத்தில் அகத்தியர், வால்மீகிக்கு சிவன் காட்சி தந்த வன்னிமரம் உள்ளது. இவ்விடத்தில் பங்குனி பிரம்மோற்ஸவத்தின் போது, அகத்தியருக்கு காட்சி தந்த வைபவ நிகழ்ச்சி நடக்கிறது. நடராஜர், அருணகிரியாரால் பாடல் பெற்ற முத்துக்குமரர், மூன்று சக்தி விநாயகர்கள், 108 சிவலிங்கங்கள், பஞ்சலிங்கங்கள் தனித்தனி சன்னதியில் உள்ளன. தினசரி அதிகாலையில் கோபூஜை செய்யப்பட்ட பின்பே சுவாமிக்கு அபிஷேகம் நடக்கிறது. சுவாமிக்கு வான்மீகிநாதர், வேதபுரீஸ்வரர், அமுதீஸ்வரர், பால்வண்ணநாதர் என்ற பெயர்களும் உள்ளது.
அகத்தியருக்கு உபதேசம்: அகத்திய முனிவர் இங்கு வந்து சுவாமியை வணங்கி தவம் செய்தார். அவருக்கு, வன்னி மரத்தடியில் காட்சி தந்த சிவன் உலகில் தோன்றியுள்ள நோய்களுக்கு உண்டான மருந்துகளைக்குறித்தும், மூலிகைகளின் தன்மைகள் குறித்தும் உபதேசம் செய்தார். எனவே, இத்தலத்து ஈசன் "மருந்தீஸ்வரர்' எனப்படுகிறார்.
மேற்கு திரும்பிய சிவன்: அபயதீட்சிதர் எனும் பக்தர் ஒருவர், சுவாமியை வழிபட வந்தபோது கடும்மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்படவே, அவரால் நீரைக்கடந்து சுவாமியைக்காண வரமுடியவில்லை. அவர் சுவாமிக்கு பின்புறம் இருந்ததால் சுவாமியின் முதுகுப்பகுதியை மட்டும்தான் தரிசிக்க முடிந்தது. வருத்தம்கொண்ட அவர், "சிவனே! உன் முகம் கண்டு தரிசனம் செய்ய அருள மாட்டாயோ?' என வேண்டினார். அவருக்காக சிவன் மேற்கே திரும்பி காட்சி தந்தார். இதனால், இங்கு சிவன் மட்டும் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். அம்பாள், சுவாமிக்கு பின்புறமாக தெற்கு நோக்கியும், முருகன், விநாயகர் ஆகியோர் கிழக்கு நோக்கியும் காட்சி தருகின்றனர்.
அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில்,
திருவான்மியூர், சென்னை-600 041.
சென்னை மாவட்டம்.
போன்:+91 - 44 - 2441 0477.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக