இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் நேற்றே இது குறித்து யாங்கள் கூறியிருக்கிறோம். நேற்றே என்றால் உலக பார்வையில் நேற்று என்று பொருள். இஃதொப்ப நிலையிலே பொதுவாக யாம் திருக்கருகாவூர் ஸ்தலத்தை குறிப்பிட்டோம். அஃதோடு பாஸ்கரன் பூஜை (சூர்யன்)செய்யும் அல்லது பூஜை செய்வதாக ஐதீகம் கொண்ட ஆலயங்கள் சென்று வழிபாடு செய்யலாம். அஃதொப்ப நவக்ரக வழிபாடுகளையும் செய்யலாம். தன்வந்திரி யாகம், தன்வந்திரி வழிபாட்டினை செய்யலாம். இஃதொப்ப நிலையிலே குறிப்புக்காக இவற்றைக் கூறினோமே தவிர, நாங்கள் குறிப்பிடாத வேறு ஆலயத்திற்கு சென்று வணங்கினால் கர்மப்பிணி போகாது என்று பொருள் அல்ல. உள்ளன்போடு பக்தி செலுத்தி வழிபாடு செய்து வந்தால் குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இருந்தும் கூட கடுமையான பாவ வினைகளின் எதிரொலிதான் இஃதொப்ப சர்மப்பிணியாகும். எல்லாப் பிணியும் பாவ வினைகளின் எதிரொலி என்றாலும் கூட சில பிணிகள் கடுமையான பாவங்கள் இருப்பதை சுட்டிக் காட்டுகிறது. இஃதொப்ப கடுமையான நோய் தாக்கம் கொண்டவர்கள், அஃதொப்ப கடுமையான ருணம் போன்ற கடன் சிக்கல் கொண்டவர்கள் எல்லாம் பிதுர் சாபங்கள் கடுமையாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்திருப்பார்கள். அல்லது முன்னோர்களின் பாவத்தையும் சேர்த்து சுமக்க வேண்டிய அல்லது முன்னோர்கள் வழியாக வருகின்ற சாபத்தையும் சேர்த்து அஃதொப்ப பலனை நுகர வேண்டிய நிலையிலும், முற்பிறப்பில் பெற்ற சாபத்தையும் சேர்த்து நுகர வேண்டிய நிலையிலும் பிறப்பு எடுத்திருப்பார்கள். இவர்கள் அன்றாடம் கால பைரவர் அல்லது வேறு பைரவர் வழிபாட்டை உள்ளன்போடு செய்வதும், பைரவருக்கு இயன்ற வகையில் எல்லா வகையான வழிபாட்டை உள்ளன்போடு செய்வதும், நல்ல முறையிலே, உயர்வான முறையிலே “ தெய்வத்தீவு “ (ராமேஸ்வரம்) ஏகி தில யாகத்தை செய்வதும், ஏனைய தர்மகாரியங்களோடு அஃதொப்ப ஆவினங்களுக்கு(பசுக்கள்) வேண்டிய உதவிகளை செய்வதும் தக்க மாற்று வழியாக இருக்கும். இவற்றோடு கயப்பும், துவர்ப்பும் உணவில் அதிகமாக சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் உண்டு.
திருக்கருகாவூர்
திருக்கருக்காவூர் - திருக்கடாவூர் வெள்ளடயீஸ்வரர் கோயில் சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் வட்டத்தில் அமைந்துள்ளது. பசியோடிருந்த சுந்தரருக்கு இறைவன் கட்டமுதும் நீரும் தந்து பசிபோக்கிய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென் கரையில் அமைந்துள்ள 18ஆவது சிவத்தலமாகும்.
ஊர்த்தவ மகரிஷியின் சாபத்தால் நித்துவரின் மனைவி வேதிகைக்கு ஏற்பட்ட கருச்சிதைவை இறைவன் மருத்துவம் பார்த்து அவள் கருவைக் காத்ததால் - கருகாவூர் என்று பெயர் பெற்றது.
திருக்களாவூர் என மக்களால் பொதுவாக அழைக்கப்பெறும் இத்தலம் மாதவி வனம், முல்லைவனம், திருக்கருகாவூர், கர்ப்பபுரி என்று பல பெயர்களால் நூல்களில் குறிப்பிடப்படுகிறது. மாதவி (முல்லைக்கொடியை) தலவிருட்சமாகக் கொண்டுள்ளதால் மாதவி வனம் (முல்லை வனம்) என்றும், கரு+கா+ஊர். கரு-தாயின் வயிற்றில் உள்ள (குழந்தைக்) கருவை, கா-காத்த (காக்கின்ற), ஊர்-ஊர், கருகாவூர் எனப் பெயர் பெற்றது.
கும்பகோணம் - ஆவூர் - மிலட்டூர் வழியாகத் தஞ்சாவூர் செல்லும் சாலையில் உள்ளது இத்தலம். இத்தலத்திற்கு தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்தும், கும்பகோணத்திலிருந்தும் நகரப் பேருந்துகள் உள்ளன.
சூரிய பகவான் ஆலயம்
தமிழ்நாட்டில் கும்பகோணத்துக்கு கிழக்கே கும்பகோணம்-பூம்புகார் சாலையில் சூரியனார் கோவில் அமைந்துள்ளது. ஆடுதுறை இரயில் நிலையத்தில் இறங்கி அணைக்கரை செல்லும் பேருந்தில் ஏறி இக்கோவிலை அடையலாம். திருமங்கலக்குடி காளியம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சற்றுத் தொலைவு நடந்து கோவிலை அடையலாம். இந்த கோவில் ஒன்பது நவக்கிரகக்கோயில்களில் முதன்மையானதாகும்
கயப்பு, துவர்ப்பு உணவு
கசப்பு சுவை: பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய்,வெந்தயம்,பூண்டு, எள்ளு, வேப்பம்பூ ,ஓமம்,தேங்காய் மற்றும் தேன்
துவர்ப்பு:வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை மற்றும் அத்திக்காய்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக