புதன், 2 ஆகஸ்ட், 2017

அகத்திய பெருமானுக்கு முருகப்பெருமான் உபதேசித்த சுப்ரமணியர் ஞானம் இருநூறு,பாடல் 2



காட்டுகிறேன் பூரணமே வெளியதாகக்
கலங்காமல் வெளியினுட பதமும் போற்றி
பூட்டுகிறேன் ரவிமதியைக் காண்பதற்குப்
புகழ்பெரிய நாதாக்கள் பாதம் போற்றி
நாட்டுகிறேன் மெய்ஞ்ஞானம் வெளியதாக
நல்வினையுந் தீவினையு மிரண்டும்போகப்
பூட்டுகிறேன் திறவுகோல் திறந்துதானும்
புத்தியுள்ள பிள்ளாய் நீ பேணிக்கேளே

-சுப்ரமணியர் ஞானம் இருநூறு,பாடல் 2

விளக்கம்:

வெட்ட வெளியை வேண்டி போற்றி பூரணம் என்றால் என்ன என்று இந்த நூலில் வெளிப்படையாக கலங்காமல் நான் காட்டுகிறேன்.புகழ் பெற்ற நாதாக்களின் பாதத்தை போற்றி ரவி என்ற சூரிய கலையையும்,மதி என்ற சந்திரகலையையும்  காண்பதற்கு இந்த நூலில் எடுத்து கூறுகிறேன்.புத்தியுள்ள தூய பிள்ளையே, நல்வினை என்கிற சூரிய கலையும், தீவினை என்ற சந்திரகலையும் இரண்டும் போய் திறவுகோல் எனும் சுழுமுனை திறக்க வழியை, மெய்ஞ்ஞானத்தை வெளிப்படையாக இந்த நூலில் எடுத்து கூறுகிறேன். நீயும் நல்ல விதமாய் கேளே என்று கூறி இரண்டாம் பாடலை நிறைவு செய்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக