புதன், 15 ஆகஸ்ட், 2018

சிலைகளுக்கு பால் அபிஷேகம் செய்வதை விட , ஏழைகளுக்கு கொடுக்கலாமே என்ற கேள்விக்கு ஸ்ரீ அகத்திய பெருமான் அருளிய ஜீவ வாக்கு



ஒருவனின் மனம், புத்தி  , ஞானம் , அறிவு இவற்றை நல்க கூடிய கிரக அமைப்பு - இதை பொறுத்து தான் இதனை எடுத்துக்கொள்ள வேண்டும் .முழுக்க முழுக்க பக்திக்கு முதலிடம் தருகின்ற மனிதனிடம் , நீ தர்மம் செய் என்று நாங்கள் கூறினாலும்  அவன் சிறிதளவே செய்கிறான்.

ஆனால் அவன் பாவங்கள் குறைவதில்லை , அவன் பாவங்களை எப்படி குறைப்பது ? சரி , இவனுக்கு தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்தால் தான் திருப்தி என்றால் , அப்படியே செய்யட்டும் . அபிஷேகத்திற்காக அவன் பொருட்கள் வாங்குகிறான் அல்லவா ? அந்த வியாபாரம் செழித்து வளரட்டும் .அது அந்தந்த மனிதர்களுக்கு போய் சேர்கிறதல்லவா ? அப்படியாவது சிறிதளவு கர்மா இவனுக்கு குறையட்டும் என்றுதான் கூறுகிறோம் .

சரி , கல்லில் ஏன் அதை ஊற்ற வேண்டும் ? அதை  ஏழைகளுக்கு   தந்தால்  ஆகாதா ? என்றால் , ஒருவனுக்கு பிரியமான தாய், தந்தை , மனைவி , மக்கள் ஆகியவர்களின் பிம்பங்களை களங்கப் படுத்து , எச்சில் உமிழ் , என்றால் உமிழ்வானா ? எனவே அந்த பிம்பங்களில் அவன் தான் உற்ற பந்தங்களாகவே பார்க்கின்ற  குணம் இன்றளவும் உள்ளது . அப்படி இருக்கும்  போது , சிலை என்று கருதக்கூடிய மனிதனுக்கு , அது தான் வணங்கக்கூடிய தெய்வம் தான் என்று ஆணித்தரமாக நம்பக்கூடிய மனிதர்கக்ளுக்கு , நாம் தெய்வத்திற்கே அபிஷேகம் செய்கிறோம் என்ற சந்தோஷமும் , அதன் மூலம்  மன அமைதியும் வரும் .

இப்படிப்பட்ட மனிதனை சற்றே பக்குவப்பட்ட பிறகு தர்மத்தின் வழியில் திருப்பி விடலாம் . எடுத்த எடுப்பிலேயே நி அப்படி எல்லாம் அபிஷேகம் செய்து பொருளை வீண் செய்யாதே , அதை ஏழைகளுக்கு கொடு என்றால் அவன் மனம் ஏற்காது. ஓரளவுக்கு நல்ல ஆத்மா கால போக்கில் திருந்துவான் என்றால் நாங்கள் அவனை அவன் போக்கில் சென்று தான் திருத்துவோம் . எனவே இதில் யார் செய்வதும் குற்றமல்ல பாதிப்பும் அல்ல . இரண்டு வழிகளுமே சிறப்புதான் - குருநாதர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக