புதன், 18 ஏப்ரல், 2018

ஸ்ரீபெரும்புதூரில் ஸ்ரீராமானுஜர் பெருமானின் 1001வது ஜெயந்தி விழா


வருகின்ற ஏப்ரல் 21தேதி சனிக்கிழமை அன்று ஸ்ரீபெரும்புதூரில் ஸ்ரீராமானுஜர் பெருமானின் 1001வது ஜெயந்தி விழா நடைப் பெற உள்ளது.காலை பத்து மணிமுதல் மதியம்  இரண்டு மணிவரை ஸ்ரீபெரும்புதூர் அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகாரசுவாமி திருக்கோயிலில் ஜெயந்தி விழா  நடைப் பெறும்.அதுசமயம் அனைவரும் கலந்து கொண்டு அருள் பெற வேண்டுகிறோம்.

அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகாரசுவாமி திருக்கோயில் வரலாறு 


ஸ்ரீராமானுஜர், ஸ்ரீவிசிஸ்டாத்வைதம் எனும் ஸ்ரீவைஷ்ணவ தத்துவத்தையும் ஓம் நமோநாராயணாயநம எனும் இரகசியமந்திரத்தையும் அகிலமும் அறியசெய்து பல்வேறு சீர்திருத்தங்களை செய்தார். ஸ்ரீராமானுஜரின் சீடர்கள் விருப்பப்படி பின்புள்ளோர்தரிசிக்கும் பொருட்டு ஸ்ரீராமானுஜர் திருவுருவ உற்சவவிக்கிரத்தை வடித்து ஸ்ரீராமனுஜர் முன் சமர்ப்பிக்க அவ்வுற்சவவிக்கிரத்தைதன் இரு கரத்தாலும் ஆரத்தழுவி தனதுசக்தியை அளித்து தானுகந்த திருமேனியாக இத்திருத்தலத்தில் அருள்பாலித்துவருகிறார்.

விஜயநகரசாம்ராஜியத்தின் பேரரசரான ஸ்ரீகிருஷ்ண தேவராயரால் இத்திருக்கோயில்,திருப்பணிகள், செய்யப்பட்டு முழு கட்டமைப்பைபெற்றது. இத்திருக்கோயில் 6.35 ஏக்கர்பரப்பளவிலும்,ஆதிசேஷனால் உருவாக்கப்பட்ட அனந்தசரஸ் எனும் திருக்குளம் 3.00 ஏக்கர்பரப்பளவிலும் அமைந்துள்ளது.

ஸ்ரீராமானுஜரின் வாழ்க்கைகுறிப்பு


கலியுகம் 4119 சாலிவாகன,சக 939,பிங்களஆண்டு,சித்திரைமாதம், 13-ம் நாள் ,வியாழக்கிழமை, வளர்பிறை,பஞ்சமிதிதி,திருவாதிரை திருநட்சத்திரம்,கடகலக்னத்தில் ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தார்.

புகழ் பெற்ற வைணவ ஆச்சார்யார்களுள் முதன்மையானவர் ராமானுஜர். கி.பி.1017ல் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தார். இவரது தந்தை ஆருலகேசவ சோமயாகி. தாய் காந்திமதி அம்மையார். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர். ராமானுஜர் தனது வீட்டிலேயே தங்கியிருந்து தன் தந்தையிடமே வேதங்களை எல்லாம் கற்று வந்தார்.

16-ம் வயதில் தனது தந்தையை இழந்தார். 17 வது வயதில் தஞ்சம்மாளை திருமணம் செய்தார். பின்பு யாதவப்பிரகாசர் என்பவரிடம் பாடங்களை கற்றார். பாடம் தொடர்பான பல்வேறு விஷயங்களில், ராமானுஜருக்கும் யாதவப்பிரகாசருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும். இதனால் குருவுக்கு கோபம் வந்து, ராமானுஜரை கொன்றுவிடவும் திட்டமிட்டார்.

இப்படித்தான் விசிஷ்டாத்வைதத்தின் விதை முளைத்தது. அதன் பிறகு திருக்கச்சி நம்பியிடம் மாணவராக சேர்ந்து விட்டார். இதையடுத்து ராமானுஜரின் பெயரும் புகழும் எல்லா இடங்களிலும் பரவியது. பிற்காலத்தில் தன் சொல் வன்மையாலும், இறைவனின் கருணையாலும் ஆயிரக்கணக்கானோரை வைணவ சம்பிரதாயத்தின் பால் ஈர்த்தார் ராமானுஜர்.

ஜாதி, பேதமற்ற சமுதாயத்தை படைக்க அவர் வழிகாட்டினார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த திருக்கச்சி நம்பியை தனது குருவாக ஏற்றுக்கொண்டவர்.
உறங்காவில்லி தாசர் என்ற தாழ்த்தப்பட்ட சமுதாய மாணவரை தனது சீடராக ஏற்றுக்கொண்டவர்.

விஷ்ணுதாசர்கள் இன்றும் போற்றி மகிழும் வேதாந்த சங்கரஹம், வேதாந்த சாரம், வேதாந்த தீபம், கீதா பாஷ்யம், கட்யத்ரயம் ஆகியவற்றை உலகுக்கு அளித்தார். கோயில்களில் பின்பற்றப்படும் திருவாராதனத்தை ஒழுங்குபடுத்தும் நித்யம் என்ற கிரந்தத்தையும் வகுத்தார். அவர் வாழ்ந்தது கிட்டத்தட்ட நான்கு தலைமுறையாகும். அவர் வாழ்நாளிலேயே அடியார்களும் பக்தர்களும் ‘தெய்வம்’ என்றே கொண்டாடினார்கள். ஒரு மாபெரும் நாட்டையே பரிபாலிப்பதுபோல் திருவரங்கனின் சாம்ராஜ்யத்தைப் பரிபாலித்தவர்.

அரங்கன் ஆலயத்துக்கு வந்து, ‘கோயிலொழுகு’ ஏற்படுத்தி, ஓர் மன்னர்போல விளங்கி ‘யதிராஜர்’ என்ற சிறப்புப் பெயர் பெற்றவர். ராமானுஜருக்கு தொண்ணூறு வயதாகும்போது, மீண்டும் ஸ்ரீரங்கத்தில் அவரது வாழ்க்கை தொடர்ந்தது.அப்போது ஸ்ரீரங்கத்தில் ஆளவந்தார் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் காஞ்சிபுரம் சென்ற ராமானுஜரை சந்தித்தார். வைஷ்ணவத்தை வளர்க்க ஒரு மகான் கிடைத்துவிட்டார் என்ற திருப்தி அவருக்கு ஏற்பட்டது. ஸ்ரீரங்கத்திற்கு வரும் படி ராமானுஜரிடம் ஆளவந்தார் கேட்டுக்கொண்டார்.

ஸ்ரீரங்கம் திரும்பியதும் ஆளவந்தாரின்உடல்நிலை மோசமானது. அவர் தனது சீடர் பெரியநம்பியை அனுப்பி ராமானுஜரை உடனடியாக ஸ்ரீரங்கத்திற்கு அழைத்துவரும்படி செய்தார். பெரியநம்பி காஞ்சி சென்று ராமானுஜருடன் ஸ்ரீரங்கம் திரும்பினார். அதே நாளில் ஆளவந்தார் பரமபதம் அடைந்தார்.ஒருமுறை திருக்கச்சி நம்பியிடம் பெருமாள் தோன்றி, சன்னியாசம் பெற்ற ராமானுஜரை நல்ல ஒரு மடத்தில் வைத்து வேதம் கற்றுக்கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படியே ராமானுஜருக்கு பல்வேறு வேதங்கள் கற்றுத்தரப்பட்டன.

அங்கு வந்த ராமானுஜரின் பழைய குருவான யாதவபிரகாசர், மாணவன் என்றும் பாராமல் ராமானுஜரின் கால்களில் விழுந்தார். தன்னைக்கொல்ல முயன்றவர் என்றும் பாராமல் அவருக்கு கோவிந்தஜீயர் பட்டத்தை வழங்கினார் ராமானுஜர். எதிரியையும் நட்புடன் நடத்திய பெருமைக்குரியவர் ராமானுஜர். சிறிது காலம் கழித்து அவர் ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார். ஸ்ரீரங்கம் கோயிலில் அவ்வூர் பிராமணர்கள் மிகுந்தஆசாரசீலராக தங்களை காட்டிக்கொண்டதை ராமானுஜர் கண்டித்தார். நீங்கள் அத்தனை உயர்ந்தவர்களாக இருந்தால் ஸ்ரீ ரங்கநாதனை நீங்கள் சேவிக்கக்கூடாது. அவருக்கு நிவேதனம் செய்யப்படும் பிரசாதத்தையும் ஏற்கக்கூடாது.

தீண்டப்படாதவரான திருப்பாணாழ்வாரை அவர் தம்முடன் இணைத்துக்கொண்டதால் உங்கள் நோக்கப்படி ரங்கநாதனும் தீட்டு உள்ளவர்தான். அவர் அருகே செல்லாதீர்கள் என்று கண்டித்தார். இந்த அளவுக்கு ஜாதி வித்தியாசம் பாராமல் திட சித்தமுள்ளவராக இருந்த உலகில் இணையற்ற ஒருமதத்தை ஸ்தாபித்து அருளிய ராமானுஜரின் புகழ் எங்கும் பரவியது. வைஷ்ணவமும் எங்கும் பரவியது. இவ்வளவும் இருந்தது போக, அவருக்கு ஒரு குறையும் இருந்தது. அது தான நாராயண மந்திரத்தின் பொருள் அறிவது.

 இதற்காக ஆளவந்தாரின் சீடரான திருக்கோஷ்டியூர் நம்பியிடம் சரண் புகுந்தார். ஆனால் நம்பியோ, ராமானுஜரை நம்பி மந்திரத்தின் பொருள் கூற மறுத்தார். ஸ்ரீரங்கம் திரும்பிய ராமானுஜர் சற்றும் மனம் தளரவில்லை. 17 முறை தொடர்ந்து ஸ்ரீரங்கத்திற்கும் திருக்கோஷ்டியூருக்கும் நடையாய் நடந்தார். அந்த பாதயாத்திரையின் பலன் 18வது சந்திப்பில் கிடைத்தது.

ராமானுஜர் மீது இரக்கப்பட்டு திருமந்திரத்திற்கு விளக்கம் சொன்னார். அத்துடன் இதை வேறு யாருக்கும் வெளியிடக்கூடாது எனவும் நிபந்தனை விதித்தார். குருவின் கருத்தை புறக்கணித்த ராமானுஜர் நேராக திருக்கோஷ்டியூர் கோபுரத்தின் மீதேறி திருமந்திரத்தின் பொருளை இந்த உலகமே அறியும் படி உரக்க கத்தினார்.

இதனால் ஆத்திரமடைந்த நம்பி ராமானுஜரிடம் விளக்கம் கேட்டார். இந்த மந்திரத்தை அறிந்து கொள்வதால் ஆயிரக்கணக்கானோருக்கு வைகுண்டம் செல்ல வாய்ப்பு கிடைக்குமானால் நான் நரகம் செல்வதில் கவலையில்லை என்றார். ஆழ்வார்களின் தமிழ் பாசுரங்களை வடமொழி வேதங்களுக்கு இணையாக கருதும் படி செய்தார்.

சமஸ்கிருதத்திலும், தமிழிலும் தேர்ச்சி பெற்ற ஞான பண்டிதர்களை ஒன்று திரட்டி, வேத உபநிஷத்துக்கள் குறித்தும், பிரபந்தம் குறித்தும் வாதம் செய்து ஆராய்ச்சிகள் நடத்தினார். தாமே சிலவற்றிற்கு பாஷ்யங்களும் செய்தருளினார். பிரம்ம சூத்திரத்திற்கும், கீதைக்கும் அவர் செய்த பாஷ்யங்கள் பிரசித்தமாயுள்ளன.
நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் முடிவில் சேர்க்கப்பட்டுள்ள ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி, திருவரங்கத்து அமுதனார் என்ற ஒரு சீடரால் உருவாக்கப்பட்டு, ராமானுஜர் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டு அவர் ஆக்ஞையையட்டி நாலாயிரப் பிரபந்தத்தின் முடிவில் சேர்க்கப்பட்டது. வைணவ சம்பிரதாயம் நீடித்து வளர வேண்டியதற்கான சிறந்த ஏற்பாடுகளைச் செய்தார். நாராயண சேவைக்கென எழுபத்தைந்து தலைவர்களை நியமித்தார். செய்ய வேண்டிய கடமைகளையெல்லாம் செவ்வனே செய்து முடித்தார்.

பிறகு தனது சக்தி அனைத்தையும் ஸ்ரீபெரும்புதூரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்ரகத்தில் புகுத்திவிட்டு திவ்யமந்திரத்தை உச்சரித்தபடியே பெருமாள் திருவடி எய்தினார். 120 ஆண்டுகள் வாழ்ந்தார். கி.பி.1138--ல் பரமபதம் அடைந்தார்.

அவதாரம் : ஸ்ரீபெரும்புதூர் - கி.பி. 04-04-1017
தந்தையார் : ஆசூரிகேசவசோமயாஜி.
தாயார் : காந்திமதியம்மை.
திருப்பெயர் : ஸ்ரீராமானுஜர்.
உபநயனம் : கி.பி. 1026-26
திருமணம் : கி.பி. 1033
துணைவியார் : தஞ்சமாம்பாள்
தந்தையார் மறைவு : கி.பி.1033
காஞ்சிபுரம் வருதல் : கி.பி. 1034
காசியாத்திரை : கி.பி.1035
ஆளவந்தார் சந்திப்பு : கி.பி. 1041 ஆம் ஆண்டு
துறவறம் மேற்கொள்ளல் : கி.பி. 1047. வயது 30
ஸ்ரீரங்கம் அடைதல் :கி.பி. 1048
திருக்கோட்டியூர்நம்பி சந்திப்பு : கி.பி. 1049
ஸ்ரீரங்கம் நிர்வாகம் மேற்கொள்ளுதல் : கி.பி.1050
ஸ்ரீ பாஷ்யம் அருளுதல் : கி.பி. 1051 - 1055
வேங்கடவன் மீண்டும் சங்கு சக்கரம் தரித்தவைபவம் : கி.பி. 1057
ஸ்ரீரங்கம் நிர்வாகசீர்திருத்தம் : கி.பி. 1058 - 1090

ஸ்ரீராமானுஜர் திருமேனிகள் உள்ள இடங்கள் 


1.தாம் உகந்ததிருமேனி - ஸ்ரீபெரும்புதூர்
2.தமர்உகந்ததிருமேனி - திருநாராயணபுரம்
3.தானானதிருமேனி - ஸ்ரீரங்கம்
ஸ்ரீராமானுஜரின் முக்கியசீடர்கள்

1.ஸ்ரீ கூரத்தாழ்வான்.
2.ஸ்ரீ முதலியாண்டான்.
3.ஸ்ரீ எம்பார்.
4.ஸ்ரீ திருக்குருகை பிரான்பிள்ளை.
5.ஸ்ரீ அருளாளப்பெருமாள் எம்பெருமானார்
6.ஸ்ரீ சோமாசியாண்டான்.

புதன், 11 ஏப்ரல், 2018

தமிழ் வருடப் பிறப்பு பற்றி ஸ்ரீ அகத்திய பெருமான் அருளிய ஜீவ வாக்கு



தமிழாகட்டும்,இந்திய,பாரத பாரம்பர்யமாகட்டும்.அனைத்துமே ஜோதிட இயலோடு தொடர்பு உடையது.சித்திரை மாதம் வெயில் தகிக்கிறது என்றால்,மேஷத்திலே சூரியன் உச்சம் என்று பொருள்.கடகத் திங்கள்,ஆடி,ஆனியிலே படிப்படியாக குறைகின்ற வெயில்,மீண்டும் ஆவணியிலே விஸ்வரூபம் எடுக்கும்.அங்கே சிம்மத்திலே ஆட்சி பெறுகிறது.இப்படி வருகின்ற சூரியனானது,துலாத்திலே வலுப்பெறுகிறது.ஐப்பசியில் சூரியன் வலுகுறைந்து நன்றாக மழை பெய்கிறது.இந்த நியதி அடிப்படையில்தான்,தமிழிலே பெயர்கள் சூட்டப்பட்டிருக்கிறது.வருடங்களும் அவ்வாறுதான்.தமிழ் வருடம் என்று கூறிக்கொண்டு,பிற வடமொழிக்கலப்பு அதிகமாக இருக்கிறது.இருந்தாலும் கூட.இதுவும் தமிழ்தான்.ஏனென்றால் தமிழில் இருந்துதான் வடமொழிக்கு பல சொற்கள் போயிருக்கிறது.எனவே, ஏனைய இலக்கணங்கள் வசதி,சூழ்நிலைக்கேற்ப,எப்படி பேசினால்,எழுதினால் எளிதோ,அதற்கேற்ப வடிவமைக்கப்பட்ட மொழி இலக்கணமாகும்.ஆனால்,தமிழ் மொழியிலே கூடுதலாக இறை சார்ந்த,இறை அருள் இருக்கிறது.சரியான உச்சரிப்போடு தமிழைப் பேசினாலே,அது சுவாசப்பயிற்சிக்கு சமம்.தமிழ் இலக்கணத்தைப் பற்றிக் கூறினால்,எத்தனையோ அதிசயங்கள்,அற்புதங்கள் உள்ளது.

இந்த உலகத்திலே பரபரப்பாக வாழும் மனிதனுக்கு “தமிழாவது?மொழியாவது?சிறப்பாவது?யார் இவற்றை எல்லாம் கவனிப்பது?வயிற்றுப்பாட்டிற்கே போராடிக் கொண்டிருக்கிறோம்.” என்றெல்லாம் அளந்து கொண்டு இருக்கிறார்கள்.அப்படியல்ல.தமிழ் மொழியிலே காரண,காரியங்கள் இல்லாமல் எதுவுமே அமைக்கப் படவில்லை.எனவேதான்,உலகத்திலே எந்த மொழியிலும் “ழ”கரம் என்ற உச்சரிப்பு கிடையாது.மூன்று இனமாக பிரிக்கப்பட்டு அதற்கு ஏற்ப எழுத்துக்கள் உள்ளது.ஒலிக்குறிப்பே (போதும்),அது எந்த இனம் என்று கூறிவிடலாம்.மரபு இலக்கணப்படி ஒவ்வொரு பாடலும் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும்?எந்த தளை,சீர்,எத்தனை அடியிலே அமைக்கப்பட வேண்டும்?என்றெல்லாம் உள்ளது.இதுதான் தமிழின் சிறப்பு.இவ்வாறு மனதிலே இலக்கணத்தை வைத்து யாரும் பாடல்களை புனையவில்லை.அவை,தானாக வந்து அமைந்து விட்டன.உதாரணமாக ஒரு வெண்பா பாடலை மேலெழுந்தவாரியாகப் பார்த்தால்,சாதாரணமாகத் தோன்றும்.ஆனால் உள்ளே மிகப்பெரிய ஞானக்கருத்தெல்லாம் அடங்கியிருக்கும். சமையல் பாட்டுக்களாய் தோன்றுவதெல்லாம்,”மையல்” பாட்டாகவும் இருக்கும்.ஞானப்பாட்டாகவும் இருக்கும்.


பிறக்கவிருக்கும் விளம்பி ஆண்டில் எல்லோரும் அனைத்து வளங்களும் பெற்று வாழ வேண்டுகிறோம் 
 

திங்கள், 9 ஏப்ரல், 2018

பதினெண் சித்தர்கள் சிலை நிறுவ உதவி தேவை


ஸ்ரீமகாகுரு தபோவனம் என்ற தக்ஷிணாமுர்த்தி ஆலயம் திருப்பூர் வட்டம்,தாராபுரம்ரோடு,குண்டடம் அருகே ஏரகாம்பட்டி என்ற கிரமத்தில் அமைந்து உள்ளது .கோவில் திருப்பணிகளும் நடைப் பெற்று வருகிறது. சுற்றி சித்தர்கள் சூழ அமரபெறும் சிவசொருபமான ஸ்ரீமகாகுரு தக்ஷிணமுர்த்தி ஆலயம் அமைய பெறுகிறது .சுவாமியை பிரஷ்டைசெய்துவிட்டோம். மேலும் பணிதொடர சுற்றியும் நவகிரகமரங்கள் சூழ அதன்அடியில் நவகிரகத்திற்கான சித்தர் சிலைகளும் சூழ நிறுப்பட உள்ளது. இதற்கான சித்தர் சிலைகளும் அமையஉள்ளது.

சித்தர் சிலை தர விருப்பமுள்ள அன்பர்களும் தொடர்பு 8248272980 கொள்ளலாம். பொருளதார உதவியோ பொருள் உதவியோ வரவேற்கப்படுகிறது.

நன்றி.

புதன், 4 ஏப்ரல், 2018

சத்குரு ஸ்ரீ ஆதிசேஷ பதஞ்சலி மஹரிஷியின் அவதார தின குருபூஜை மற்றும் பங்குனி மூல நட்சத்திரப் பெருவிழா


பங்குனி மூலம் என்பது சத்குரு ஸ்ரீ ஆதிசேஷ பதஞ்சலி மஹரிஷி அவதரித்த திருநாள் ஆகும்
.
அதையொட்டி நமது மதுரை பழங்காநத்தம் ஈஸ்வரன் திருக்கோவிலில் அவதார தின குருபூஜை வழிபாடு வெள்ளிக்கிழமை (6.4.2018) மாலை 6.50 மணியன்று நடைபெற இருப்பதால் அவ்வமயம் பக்த கோடிகளும், சிஷ்ய சிகாமணிகளும் இதையே நேரடி அழைப்பாக ஏற்று குருபூஜையில் கலந்து கொண்டு குருவருள் பெற வேண்டுகிறோம்.

சத்குருவிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் ஸ்வார்த்தம் சத்சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

“ஆயிரம் தலை என்றும் அளிக்குமே நமக்கு ஆறுதலை ”
ஓம் சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மா மகரிஷிக்கு ஜெய்

சத்குரு ஸ்ரீ ஆதிசேஷ பதஞ்சலி மஹரிஷி வரலாறு 



ஸ்ரீ ராமர் என்று சொன்னவுடன் அவரது இணை பிரியாத பக்த சிரோண்மணி  ஸ்ரீ ஆஞ்சநேய  ஸ்வாமியினை  நினைப்பது போல  ஸ்ரீ நடராஜப் பெருமானை நினைக்கும்போது இருவரின் நினைவு வரும். ஸ்ரீ நடராஜரின் பிம்பமானாலும்  சரி, ஓவியம் ஆனாலும் சரி அவர் அருகே  இந்த இருவரும் கண்டிப்பாக இருப்பார்கள் . பாம்பும் புலியும் இருபக்கம் என்று இந்த இவர்களைப் பற்றி பல சாஸ்திரங்கள் , புராணங்களில் சொல்லப் பட்டுள்ளது.

இதில் ஒருவருக்கு உடலில் பாதி கீழே பாம்பாகவும், இன்னொருவருக்கு  பாதி உடல் புலியாகவும்  அதாவது, புலிக்கால்களுடன் இருக்கும். பாண்டிய மன்னனுக்காக கால் மாறி ஆடிய  நடராஜர் இவர்களுக்காகவும் கால் மாறி ஆடியுள்ளார்.  இந்த இருவரே ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி  என்றும் , வியாக்ர பாதர்  எனவும் அழைக்கப் படுகின்றனர்.

இந்த இருவரும் நடராஜப் பெருமானின் நடனத்தில் எப்போதும் தங்கள் கண்களையும் , இதயத்தையும் நிலை நிறுத்தி , சதா இறை சிந்தனையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு தொழுத வண்ணம் நின்றிருப்பவர்களாவர்.  ஸ்ரீ பதஞ்சலி  ஸ்ரீ ஆதிசேஷனின் அவதாரம் என்று அவருடைய  வரலாற்றில் பலப்பல  ஆதாரங்களுடன் சொல்லப் படுகிறது. பிரளய காலத்தில் இந்த உலகமெல்லாம் அழிந்த பின் மிச்சமாக  நின்றவர்  என்ற பொருளில் ஆதிசேஷன்  என்ற நாமம் அழைக்கப் படுகிறது.

திருப்பாற் கடலில் , ஸ்ரீமன் நாராயணனுக்கு படுக்கையாக இருப்பவர்.அனந்தன் என்றால் பாம்பு.

நாராயணன் அவர் மேல் படுத்து இருப்பதால் அனந்த சயணன் என்று புராணங்கள் கூறுகின்றன.

நாராயண உபநிஷத்தில் மஹா விஷ்ணுவின் இருதய கமலத்தில் பரமேஸ்வரன் நடனமாடுகிறார் என்பதாக மந்திரங்கள் இருக்கின்றன. . ராமாதவாரத்தில்  ஸ்ரீ ராமச் சந்திர மூர்த்திக்கு, தம்பி லக்ஷ்மணனாக அவதாரம் செய்தார். ஆதிசேஷன் கிருஷ்ணாவதாரத்தில் , அண்ணன் பலராமராகவும் அவதாரம் செய்தவர் ஆதிசேஷனின்  அம்சாவதாரமான  ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியே ஆவார்.

பார்வதி தேவிக்கு கையில் கங்கணமாக விளங்கியவர். அத்ரி மகரிஷியின் மகனாக பதஞ்சலி அவதரித்தார் . இதனால் ஆத்ரேயர் என்றும் அழைக்கப் படுகிறார்.

கோணிகா  என்ற தபஸ்வினிக்கு  மகனாகப் பிறந்த  கதையினைச் சொல்லி பதஞ்சலி என்ற பெயர் வந்ததற்கு வேறு ஒரு விளக்கமும் வருகின்றது.

கோணிகா  அம்மை அஞ்சலி முத்திரையுடன் கூடிய கையில் அர்க்கிய ஜலத்தை வைத்துக் கொண்டு சூரிய பகவானிடம் தனக்கு மகாத்மா வான புத்திரனை அருளுமாறு வேண்ட , அப்போது ஆதிசேஷன் அந்த அஞ்சலி ஹஸ்தத்தில் விழுந்து அவதரித்தார்.

பத் என்றால்  விழுவது என்று பெயர்.

அஞ்சலி செய்த ஹஸ்தத்தில்  விழுந்ததால் அவருக்கு பதஞ்சலி  என்று மாதா பெயரிட்டார்.பதஞ்சலி விஜயத்தில் இது கூறப் பட்டுள்ளது.

இறையனாரின் திருத் தாண்டவம் கண்டு அவரின் பாதத்திற்கு  அஞ்சலி செய்ததால் பாதாஞ்சலி என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். எல்லா யுகங்களிலும் ஆதிசேஷன்  ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியின் திரு உருவத்தில் இருந்து பல காரியங்களை  தேவர்களுக்கும், மானிடர்களுக்கும் அருள் செய்திருக்கிறார்.

ஸ்ரீ நடராஜ மூர்த்தியின்  தாண்டவத்தில்  எழும் டமருக நாதத்திற்கு  பாணினி  மகரிஷி நாத ரூப விளக்கமாக வியாகரண சூத்ரம் அருளினார்.

இந்த சூத்திரம் மிக சூக்ஷமானதும் , மிக மேதாவிலாஸமுள்ளோர் மட்டுமே புரிந்து கொள்ளும் நிலையில் அடங்கியது.

இந்த சூத்திரத்திற்கு  ஸ்ரீ பதஞ்சலி எல்லோரும் கற்றுணரும் வகையில் உரை  எழுதினார்.மேலும் யோகா சாதனை புரிய பதஞ்சலி யோக சூத்திரம் எழுதினார்.
  • இயமம்
  • நியமம்
  • ஆசனம்
  • பிராணாயாமம்
  • பிரத்யாஹாரம்
  • தாரணை
  • த்யானம் 
  • சமாதி  

என்று எட்டு அங்கங்களை கொண்டதால் அஷ்டாங்க யோகம் என்று பெயர் பெற்றது. இதற்கும் பாதாஞ்சலம் என்றும் பெயர் திகழ்கின்றது.

யோகம் என்றால் சேர்க்கை (அல்லது ) இணைப்பு என்று பொருள்.மனதை அடக்கி பரம்பொருளோடு சேர்க்கை ஏற்படுத்துவது.

பரம்பொருளை நுகர பல யோகங்கள் இருந்தாலும் பதஞ்சலி எழுதிய இந்த நூலுக்கு மட்டுமே இராஜ யோகம் என்று பட்டம் கொடுக்கப் பட்டுள்ளது.

இவர் திரிகரணத்திற்கும்  திருத் தொண்டு என்று மனதிற்கு யோக சூத்திரமும் , வாக்கிற்கு வியாகரண பாஷ்யமும், இந்த உடல் சம்பந்தப் பட்டவைகளுக்கு  சரகம் என்றும் மூன்று மஹா விசேஷமான நூல்களை இந்த உலகிற்கு அருளியவர் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி ஆவார்.சரகம் என்ற நூலுக்கு ஆத்ரேய சம்ஹிதை  என்ற பெயர் உண்டு.  இந்நூலை  எழுதியதால் சரகர் என்றும் அழைப்பார்.

ஒரு நாள் மாலை மஹாவிஷ்ணு தியானம் செய்து தம் ஹ்ருதய கமலத்தில் சிவதாண்டவத்தை  பார்த்து  ரசித்து மகிழ்ந்து கொண்டிருந்தார்.  அவர்தம்  மகிழ்ச்சியில்  ஏற்பட்ட உடல் பூரிப்பால் உண்டான பாரத்தை ஆதிசேஷனால்  தாங்க முடியவில்லை.

என்ன ஸ்வாமி !

இன்று  உங்கள் உடல் வழக்கத்திற்கு மாறாக மிகுந்த கனமாக இருக்கிறதே ? என்று ஆதிசேஷன்  மஹா விஷ்ணுவிடம் கேட்க  ஏன் ஹ்ருதயத்தில்  பரமேஸ்வரன் நர்த்தனம் பண்ணுகிறார்.

அதுவே  பாரத்திற்கு காரணம் என்கிறார்.  இது கேட்ட ஆதிசேஷன்  மிகவும் மகிழ்ந்து போய்  நானும் அந்த நடனத்தை  பார்க்க வேண்டும் என்ற தனது ஆசையினை வெளிப்படுத்தினார்.  திருமாலும் மகிழ்ந்து சிதம்பரம் சென்று ஸ்ரீ நடராஜ மூர்த்தியின் நடனத்தைக் கண்டு வர அனுமதி வழங்கினார். அவ்வாறே சென்று  இறையனாரின் நடனத்தைக் கண்டு ஆனந்த  பரவசம்  மேலோங்கி பக்தியில் திளைத்து  தில்லை நாதனின்  பாதத்திற்கு அஞ்சலி செய்தார்.

இதனாலும் ஆதிசேஷன் பதஞ்சலி என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர்.

தவஞான சிம்மமான மகரிஷி பதஞ்சலியின்  யோக சூத்திரத்தில் சமாதி பாதத்தின் மூலம் சித்தி பெற்றால்
  •  மற்றவரின் மனதை அறிதல்,
  • கூடுவிட்டு கூடு பாய்தல், 
  • நீர் மேல் நடத்தல் ,
  • காற்றில் மிதத்தல்,
  • பிராணிகளின்  மொழியினை அறிதல்,
  • அதி தூர ஒலி கேட்டல்,  

போன்ற சகல சித்திகளும் அடைய முடியும் என்று அவர் நூலின் மூலம் போதிக்கிறார்.

குருபூஜை நடைப் பெறும் முகவரி:

அருள்மிகு காசி விசாலட்சி சமேத காசி விஸ்வநாதர் திருக்கோவில்
ஸ்வார்த்தம் சதங்கம், பதஞ்சலி யோககேந்திரம்
மாடக்குளம் மெயின் ரோடு,  சர்ச் அருகில் ,
பழங்காநத்தம்
மதுரை

தொடர்புக்கு –

சிவ. உதயகுமார் - 9344937539
மு. கமலக்கண்ணன்- 9789300607

ஸ்ரீ அகத்திய பெருமான் திருமணக் கோலம் கண்ட ஸ்ரீ காந்திமதி அம்பாள் உடனுறை அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோவில் ஜீர்ணோத்தாரன அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம்


ஞான சம்பந்தரால் சமண சமயத்திலிருந்து சைவசமயத்துக்கு மாறி,  சிவபக்தி செலுத்தி வந்தார். அவர் மனைவி மங்கையர்க்கரசியாரும் சிவபக்தியில் திளைத்திருந்தார். அப்போது நெல்லைச் சீமையில் வாழ்ந்து வந்த வேளையில், அவரது நண்பர் தன் புதல்வனை,  பெண் என்று மறைத்துச் சொல்லியபடியே பெண்ணாகக் கண்டார். பிறகு இறைவனின் பேரருளால் அந்த நண்பருக்கு மற்றுமொரு ஆண் குழந்தை பிறந்தது. அதையடுத்து அவர்களைக் கொண்டும் சிவனாரின் துணையைக் கொண்டும் வடதேசத்து அரசனை வென்றார். அதையொட்டி, அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக, ஆலயத்துக்கு மணிமண்டபம் எழுப்பி, திருப்பணிகள் செய்தார் மன்னன்!

திருநெல்வேலி ரயில்நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் பிரமாண்டமாக அமைந்து உள்ளது நெல்லையப்பர் கோயில். இங்கே இருந்தபடி அகிலத்து மக்களுக்கு அருள்பாலிக்கும் சிவனாருக்கு நெல்லையப்பர் என்பது திருநாமம். அவர் நெல்லை வேலியிட்டு காத்தருளினார் என்பதால் ஸ்வாமிக்கும் ஊருக்கும் அதுவே பெயராயிற்று.

அகத்திய மாமுனிவர், சிவனாரின் உத்தரவுப்படி பொதிகைமலைக்கு வந்தார். இவரால் பூமியும் சமநிலைக்கு வந்தது. அதுமட்டுமா கங்கை நீரைக் கொண்டு, இங்கே தாமிரபரணியை, பொருநை நதியை உண்டுபண்ணினார் என்கிறது நெல்லைப்புராணம்.

அகத்தியர் மனைவி லோபாமுத்திரை திருச்செந்தூர் வேலவனை வணங்கி முக்தி பெற்றார். அகத்திய முனிவர், வேணுவனமாகத் திகழ்ந்த திருநெல்வேலியை அடைந்து நெல்லையப்பர் தலத்தில் சிவபார்வதியின் திருக்கோலம் கண்டு மகிழ்ந்தார். எனவே திருநெல்வேலி திருத்தலம், மிகத் தொன்மையான, புராண மற்றும் புராதனப் பெருமைகள் கொண்ட தலம் எனப் பெருமை கொள்கிறார்கள் பக்தர்கள்! .

நைமிசாரண்ய முனிவர்களுக்கு இந்தத் தலம், தீர்த்தம், மூர்த்தம் ஆகியவற்றின் பெருமையையும் இங்கு வந்து தரிசித்து முக்தி அடைந்தவர்களின் விவரங்களையும் விரிவாகச் சொல்லி அருளினார் சூதமுனிவர். வடமொழியில் இருந்த தலபுராண மகாத்மியத்தை, பின்னாளில் நீலகண்ட சாஸ்திரியார் உதவியால் தமிழில் பாடியவர் நெல்லையப்பபிள்ளை என்ற புலவர். மிகுந்த சிவபற்று உடையவர். சிவபெருமானே இவரைப் பாடச் சொல்லிக் கேட்டதாக தெரிவிக்கிறது ஸ்தல வரலாறு.

நெல்லையம்பதியின் தலபுராணத்தையும் பக்தி கொண்டிருந்தவர்களையும் இகழ்ந்த நாகப்பன் என்பவன், குன்ம நோயால் அவதிப்பட்டான். பிறகு தன் தவறை உணர்ந்தவன், தல புராண சருக்கங்களைப் படித்து, சிவானரைத் தொழுது, நோய் நீங்கப்பெற்றான்.

நான்கு வேதங்களும் ஒருமுறை சிவனாரிடம் வந்தன. ‘மரமாகத் திகழ்ந்து நிழலைத் தந்து, நித்தியமாய் இருக்க வேண்டும். அதற்குத் தாங்களே அருளவேண்டும்’ என வேண்டின. ‘யாம் திருநடனம் புரியும் 21 தலங்களில், தென்காஞ்சி என்று போற்றப்படும் நெல்லையம்பதியில் வேணுவாக அமருங்கள். அங்கே லிங்கத் திருமேனியாக எழுந்தருள்வேன்’ எனச் சொல்லி அருளினார் ஈசன். வேணு என்றால் மூங்கில். வேதங்கள் சிவனார் சொன்னபடி, வேணுவாக, மூங்கில் மரங்களாக இந்த வனத்தில் வந்து அமர்ந்து கொள்ள, அதுவே பின்னாளில் நெல்லையம்பதி எனும் புண்ணியத் தலமாயிற்று என்கிறது ஸ்தல புராணம்!

ஸ்ரீராமபிரான், மாரீசனாகிய மாயமானைத் தொடர்ந்து சென்ற போது, வழியில் கயத்தாறு எனும் பகுதியில் வில்லினால் கீறிப் பொருநையை, தாமிரபரணியை வரச் செய்தார். அதேபோல் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள மானூர் எனும் பகுதியில், மாயமானைக் கொன்ற பிறகு சீதாதேவியைத் தேடி அலைந்தார் என்றும் பிறகு நெல்லையப்பரை வணங்கி வரம் பெற்று, ராமேஸ்வரம் சென்று வழிபட்டார் என்றும் அதையடுத்து ராவணனை வென்று, சீதையுடன் அயோத்திக்குச் சென்றார் ஸ்ரீராமர் என்றும் தெரிவிக்கிறது ஸ்தல புராணம்.

‘‘வேணுநாதன் தம்மோடு
காமகோட்ட நாயகியைத் தொழுதெழுவார்
வினையும் போம் - படுமல்லலும்
போந் திண்ணமிதே’’

சிவபெருமானின் ஐந்து சபைகளில் தாமிர சபை என்பது போற்றத்தக்கது. இது திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் அமைந்துள்ளது. இதனை  தரிசிக்க அனைத்து சித்தர்களுமே வந்து நின்றனர். இந்தத் தலத்திற்கு வேணுவனம் என்று பெயர். அதனால் இத்தல ஈசனை வேணுநாதர், வேய்தநாதர், சலீவ நாதர், நெல்வேலி நாதர் என்றெல்லாம் போற்றி சித்தர்கள் தொழது நின்ற, நிற்கும் பூமி இது. ஸ்ரீ அகத்திய பெருமான்  பலகாலம் தங்கி  தொழுது இன்புற்ற கோயில் இது.

‘‘கருணையிளவள் கடலினும் பெரிதாகி
இன்னலை எரித்து இனிது தாயென
வேண்டுவதெல்லாம் தரும் வேத
நாயகி வடிவு கண்டு அயர்ந்தோமே’’

சித்தர்கள் இத்தல அன்னையை, காந்திமதி அம்மன், திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார், வடிவுடை அம்மன் என்றெல்லாம் கொண்டாடுகி றார்கள். ‘‘கருணையின் மொத்த வடிவம் மட்டும் அல்ல, நம்மை ஆட்கொள்ளும் தாய் இவள்’’ என்கின்றார், போகர்.




இத்தகைய சீரும்,சிறப்பும் கொண்ட இத்திருக்கோவிலில் வரும் 27.04.2018 அன்று  ஜீர்ணோத்தாரன  அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் நடைப்பெற உள்ளது.அடியார்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம் .  

முகவரி:
ஸ்ரீ காந்திமதி அம்பாள் உடனுறை அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோவில்
திருநெல்வேலி அஞ்சல்
திருநெல்வேலி மாவட்டம், 627001
தொபே. 0462 2339910