திருநெல்வேலி ரயில்நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் பிரமாண்டமாக அமைந்து உள்ளது நெல்லையப்பர் கோயில். இங்கே இருந்தபடி அகிலத்து மக்களுக்கு அருள்பாலிக்கும் சிவனாருக்கு நெல்லையப்பர் என்பது திருநாமம். அவர் நெல்லை வேலியிட்டு காத்தருளினார் என்பதால் ஸ்வாமிக்கும் ஊருக்கும் அதுவே பெயராயிற்று.
அகத்திய மாமுனிவர், சிவனாரின் உத்தரவுப்படி பொதிகைமலைக்கு வந்தார். இவரால் பூமியும் சமநிலைக்கு வந்தது. அதுமட்டுமா கங்கை நீரைக் கொண்டு, இங்கே தாமிரபரணியை, பொருநை நதியை உண்டுபண்ணினார் என்கிறது நெல்லைப்புராணம்.
அகத்தியர் மனைவி லோபாமுத்திரை திருச்செந்தூர் வேலவனை வணங்கி முக்தி பெற்றார். அகத்திய முனிவர், வேணுவனமாகத் திகழ்ந்த திருநெல்வேலியை அடைந்து நெல்லையப்பர் தலத்தில் சிவபார்வதியின் திருக்கோலம் கண்டு மகிழ்ந்தார். எனவே திருநெல்வேலி திருத்தலம், மிகத் தொன்மையான, புராண மற்றும் புராதனப் பெருமைகள் கொண்ட தலம் எனப் பெருமை கொள்கிறார்கள் பக்தர்கள்! .
நைமிசாரண்ய முனிவர்களுக்கு இந்தத் தலம், தீர்த்தம், மூர்த்தம் ஆகியவற்றின் பெருமையையும் இங்கு வந்து தரிசித்து முக்தி அடைந்தவர்களின் விவரங்களையும் விரிவாகச் சொல்லி அருளினார் சூதமுனிவர். வடமொழியில் இருந்த தலபுராண மகாத்மியத்தை, பின்னாளில் நீலகண்ட சாஸ்திரியார் உதவியால் தமிழில் பாடியவர் நெல்லையப்பபிள்ளை என்ற புலவர். மிகுந்த சிவபற்று உடையவர். சிவபெருமானே இவரைப் பாடச் சொல்லிக் கேட்டதாக தெரிவிக்கிறது ஸ்தல வரலாறு.
நெல்லையம்பதியின் தலபுராணத்தையும் பக்தி கொண்டிருந்தவர்களையும் இகழ்ந்த நாகப்பன் என்பவன், குன்ம நோயால் அவதிப்பட்டான். பிறகு தன் தவறை உணர்ந்தவன், தல புராண சருக்கங்களைப் படித்து, சிவானரைத் தொழுது, நோய் நீங்கப்பெற்றான்.
நான்கு வேதங்களும் ஒருமுறை சிவனாரிடம் வந்தன. ‘மரமாகத் திகழ்ந்து நிழலைத் தந்து, நித்தியமாய் இருக்க வேண்டும். அதற்குத் தாங்களே அருளவேண்டும்’ என வேண்டின. ‘யாம் திருநடனம் புரியும் 21 தலங்களில், தென்காஞ்சி என்று போற்றப்படும் நெல்லையம்பதியில் வேணுவாக அமருங்கள். அங்கே லிங்கத் திருமேனியாக எழுந்தருள்வேன்’ எனச் சொல்லி அருளினார் ஈசன். வேணு என்றால் மூங்கில். வேதங்கள் சிவனார் சொன்னபடி, வேணுவாக, மூங்கில் மரங்களாக இந்த வனத்தில் வந்து அமர்ந்து கொள்ள, அதுவே பின்னாளில் நெல்லையம்பதி எனும் புண்ணியத் தலமாயிற்று என்கிறது ஸ்தல புராணம்!
ஸ்ரீராமபிரான், மாரீசனாகிய மாயமானைத் தொடர்ந்து சென்ற போது, வழியில் கயத்தாறு எனும் பகுதியில் வில்லினால் கீறிப் பொருநையை, தாமிரபரணியை வரச் செய்தார். அதேபோல் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள மானூர் எனும் பகுதியில், மாயமானைக் கொன்ற பிறகு சீதாதேவியைத் தேடி அலைந்தார் என்றும் பிறகு நெல்லையப்பரை வணங்கி வரம் பெற்று, ராமேஸ்வரம் சென்று வழிபட்டார் என்றும் அதையடுத்து ராவணனை வென்று, சீதையுடன் அயோத்திக்குச் சென்றார் ஸ்ரீராமர் என்றும் தெரிவிக்கிறது ஸ்தல புராணம்.
‘‘வேணுநாதன் தம்மோடு
காமகோட்ட நாயகியைத் தொழுதெழுவார்
வினையும் போம் - படுமல்லலும்
போந் திண்ணமிதே’’
சிவபெருமானின் ஐந்து சபைகளில் தாமிர சபை என்பது போற்றத்தக்கது. இது திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் அமைந்துள்ளது. இதனை தரிசிக்க அனைத்து சித்தர்களுமே வந்து நின்றனர். இந்தத் தலத்திற்கு வேணுவனம் என்று பெயர். அதனால் இத்தல ஈசனை வேணுநாதர், வேய்தநாதர், சலீவ நாதர், நெல்வேலி நாதர் என்றெல்லாம் போற்றி சித்தர்கள் தொழது நின்ற, நிற்கும் பூமி இது. ஸ்ரீ அகத்திய பெருமான் பலகாலம் தங்கி தொழுது இன்புற்ற கோயில் இது.
‘‘கருணையிளவள் கடலினும் பெரிதாகி
இன்னலை எரித்து இனிது தாயென
வேண்டுவதெல்லாம் தரும் வேத
நாயகி வடிவு கண்டு அயர்ந்தோமே’’
சித்தர்கள் இத்தல அன்னையை, காந்திமதி அம்மன், திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார், வடிவுடை அம்மன் என்றெல்லாம் கொண்டாடுகி றார்கள். ‘‘கருணையின் மொத்த வடிவம் மட்டும் அல்ல, நம்மை ஆட்கொள்ளும் தாய் இவள்’’ என்கின்றார், போகர்.
இத்தகைய சீரும்,சிறப்பும் கொண்ட இத்திருக்கோவிலில் வரும் 27.04.2018 அன்று ஜீர்ணோத்தாரன அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் நடைப்பெற உள்ளது.அடியார்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம் .
முகவரி:
ஸ்ரீ காந்திமதி அம்பாள் உடனுறை அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோவில்
திருநெல்வேலி அஞ்சல்
திருநெல்வேலி மாவட்டம், 627001
தொபே. 0462 2339910



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக