ராமநாதபுரம் மாவட்டம் குணங்குடி என்ற சிற்றூரைப் பூர்வீகமாகக் கொண்டவர் இவர். பூர்வீகப் பெயர் சுல்தான் அப்துல்காதிர். குணங்குடி மஸ்தான் சாகிப்பின் காலம் கிபி 1788 – 1835க்கு இடைப்பட்டது. அவருடைய தாய்மாமன் புதல்வி மைமூனை மணமுடிக்கக் குடும்பத்தார் கோரிக்கை வைத்த போது, அதை நிராகரித்து விட்டு 17ஆம் வயதில் குடும்பத்தைத் துறந்தார்.
இஸ்லாமிய மார்க்கப் பிரிவுகளில் ஒன்றான காதிரிய்யா தரீகாவின் செயக்ப்துல் காதிரிலெப்பை ஆலிமிடம் மார்க்கக் கல்வி பெற்றார். திரிசிரபுரத்து ஆலிம் மௌலவி ஷாம் சாகிபுவிடம் தீட்சைபெற்றார். தொண்டி மரைக்காயர் தோப்பில் யோக நிஷ்டையிலும் ஆழ்ந்தார். சிக்கந்தர் மலைக்குகையில் சிராசனம் இருந்தார். பல ஊர்களுக்கு நாடோடியாக அலைந்தார். இறைக்காதலால் முற்றும் கவரப்பட்டவராகவும், தெய்வீகத்தில் நாட்டம் கொண்டவராகவும் அவர் இருந்ததால் உலகநடை நீங்கிப் பித்தநடை கொண்டார்.
குப்பை மேடுகள்கூட அவர் குடியிருக்கும் இடங்களாகின. அவருடைய பித்த நடையையும் அற்புதச் சித்துகளையும் கண்ட மக்கள் அவரை ‘மஸ்தான்' என அழைத்தனர். அப்பெயரே பின்னர் அவருக்கு நிலைத்தது. இவர் சென்னையில் வாழ்ந்த தொண்டியார் பேட்டை என்ற இடம்தான் பிற்காலத்தில் தண்டையார்பேட்டையானது. ராயபுரத்தில் இவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் உள்ளது.
குணங்குடியார் இஸ்லாமியச் சூபி ஞானியாக அறியப்பட்டாலும்கூட அவரது சீடர்களாக இருந்த பலரும் இந்து சமயத்தைச் சார்ந்தவர்களே என்பதில் இருந்து இந்து - இஸ்லாமிய பாரம்பரிய உறவை அறிய முடிகிறது. குணங்குடி மஸ்தான் சாகிப் எழுதிய 24 கீர்த்தனைகள் உட்பட 1057 பாடல்களும் முக்கியமானவை. முகியத்தீன்சதகம் 100 பாடல்களைக் கொண்டது. இஸ்லாமியச் சமயத்தை நடைமுறைப்படுத்திய முகமது நபி பற்றிய பாடல்கள் முக்கியமானவை.
இதேபோல அகத்தீசன் சதகமும் 100 பாடல்களைக் கொண்டது.குருவருள் நிலை,தவ நிலை, துறவு நிலை, நியம நிலை, வளி நிலை, தொகை நிலை, பொறை நிலை, காட்சி நிலை, தியான நிலை, சமாதி நிலை வேண்டி உருவான மனத்தின் பதிவுகளாக இப்பாடல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
முகமது நபியாண்டவரை சுகானுபவமுற துதித்தல், தவமே பெறவேண்டுமெனல், குறையிரங்கி உரைத்தல் வானருள் பெற்றோர் மனநிலை உரைத்தல், ஆனந்தக் களிப்பு பாடல் பகுதிகளும் இவரது பாடல்களில் அடக்கம்.
தாயனைய இன்பந் தனைத்தந்து தந்துகை
தழுவிநின் றருள் புரியவுந்
தந்தைதா யுந்தானே யாகவு மிருந்தெனைத்
தற்காத்து னருள்பு ரியவுஞ்
சேயென் றிரங்கியணை காலியின் கன்றெனச்
சீராட அருள்பு ரியவுஞ்
செங்கீரை யாடுசிறு மதலைபோற் கொஞ்சிநான்
செல்வமிட அருள்பு ரியவும்
பாயுமடை கால்கண்டு கரைபுரள வருமதிப்
பால்கொடுத் தருள்பு ரியவும்
பக்குவத் தோடுமவு னத்தொட்டி லுக்குட்
படுக்கவைத் தருள்பு ரியவும்
வாயுவைக் கட்டவுந் தவராஜ சிங்கமே
வரவேண்டும் மென்ற னருகே
மாகுணங் குடிவாழு மென்னகத்தீசனே
மவுனதே சிகநா தனே.
-குருவருள் நிலை,அகத்தியர் சதகம்
இத்தகைய பெருமையும் ,அகத்திய பெருமானின் தரிசனமும் கண்ட மற்றும் அவரின் அன்புக்கும் பாத்திரமான மஸ்தான் அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் இந்த விழா நடைப் பெறுகிறது.மேற்கண்ட பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ள தேதிகளில் பங்கு கொண்டு அவரின் அருள் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக