ஆன்மிக அன்பர்களே,வணக்கம்
சோழ திருநாட்டில் மணிமுத்தா நதிக்கரைக்கு வடக்கே 3கிலோ மீட்டர் தொலைவில் மூகாசபரூர் என்ற கிராமத்தில் அருள்பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீ அன்னபூரணி உடனுறை விஸ்வநாதர் திருக்கோவிலில்,சிரஞ்சீவி வரம் பெற்ற கோரக்கர் சித்தர் ஜீவ சமாதி உள்ளது.இத்திருக்கோவிலில் உள்ள விஸ்வநாதரை கோரக்க சித்தர் தன் திருக்கரங்களால் பிரதிஷ்டை செய்தும் பூஜை செய்தும் வந்துள்ளார்.
இத்திருக்கோவிலில் ஜீவ சமாதி அடைந்த மஹான் ஸ்ரீ கோரக்கர் சித்தர் பெருமானுக்கு குருபூஜை நிகழும் மங்களகரமான ஹேவிளம்பி வருடம் கார்த்திகை மாதம் 22ம் தேதி வெள்ளிக்கிழமை (08-12-2017) அன்று நடைப் பெற உள்ளது.குருபூஜையில் கலந்து கொண்டு கோரக்கர் சித்தர் அருள் பெற்று எல்லா நலமும் பெற அன்புடன் அழைக்கின்றோம்.
கோரக்க மஹரிஷி வரலாறு
சிவபெருமான் உமாதேவிக்கு கடற்கரையில் தாரக மந்திரத்தை உபதேசித்தபோது தேவி கண்ணயர்ந்திருக்க மீன் குஞ்சு ஒன்று அதைக் கேட்டு மீன் வடிவமாகியது. சிவன் அதை மச்சேந்திரன் எனப்பெயரிட்டு ஞானத்தை அருள் புரிய அனுப்பினார். ஓர் ஊரில் இவருக்கு மனக்குறையுடன் ஒரு பெண் பிச்சை போட்டதை யோகத்தால் அறிந்து அவள் மகப்பேறு இல்லாமல் வருந்துவதைக் கேட்டு அறிந்தார்.
மச்சேந்திரர் அந்தப் பெண்ணிடம் சிறிது திருநீறு கொடுத்து இதனை நீ உட்கொள்வாயானால் மகட்பேறு அடைவாய் என்றார், அவள் திருநீறு பெற்றதை கேட்ட பக்கத்து வீட்டுப்பெண் அது போலியாக இருக்கும் என்று சொல்லியதால் அடுப்பில் போட்டுவிட்டாள். சில ஆண்டுகள் கழித்து அவ்வூருக்கு வந்த மச்சேந்திரர் அப்பெண்ணை அழைத்து உன் மகனைக்கூப்பிடு என்றவரிடம் தான் பக்கத்துவீட்டுபெண் பேச்சைக்கேட்டு அதை அடுப்பில் போட்டதாகக் கூற மச்சேந்திரர் அந்த அடுப்பு இருந்த பக்கம் சென்று ‘கோரக்கா’ எனக் கூப்பிட்டார். மச்சேந்திரர் நீறு கொடுத்த காலம்முதல் இது வரை என்ன வளர்ச்சியிருக்குமோ அதே வளர்ச்சியுடன் ஒரு சிறுவன் கப்பதார அடுப்புச் சாம்பலிலிருந்து வந்தவனை சீடராக்கிக் கொண்டார்.
ஒருநாள் கோரக்கர் பிச்சை எடுக்கும்போது ஓர் பெண்மணி வடை ஒன்றை அளிக்க அதை தன் குருநாதரிடம் அளித்தார். அடுத்த நாளும் அதே போல் வடைவேண்டும் என குருநாதர் கேட்க, வடைதந்த வீட்டிற்கு சென்று வடை கேட்டார். அந்தப் பெண் வடை இல்லை. தினமும் வடை சுட முடியுமா. இன்று தயிர்சாதம் தான் இருக்கின்றது என்று சொல்ல, கோரக்கர் என் குருநாதர் வடைதான் கேட்டார் என்றார். அந்த பெண் வடை என்பதால் பரவாயில்லை. இதுவே அவர் உன் கண்ணைக் கேட்டிருந்தால் கொடுத்திருப்பாயா என்றாள். அதற்கு கோரக்கர் என் குருநாதர் எதைக் கேட்டாலும் நான் தருவேன் என்று தன் கண்ணை பெயர்த்து அப்பெண்ணிடம் கொடுத்து அதற்கு பதிலாக வடை கேட்டார். அவரின் உணர்சியைக் கண்ட அப்பெண் வடைகளை சுட்டு தந்தாள். வடையைச் சுவைத்த மச்சேந்திரர் கோரக்கா உன் கண் என்ன வாயிற்று என்றார். கோரக்கர் நடந்ததைக் கூறினார். கோரக்கரின் அன்பை அறிந்த மச்சேந்திரர் அவருக்கு மீண்டும் கண்வரச் செய்தார்.
மச்சேந்திரர் மலையாள நாட்டிற்கு சென்று அந்நாட்டு அரசி பிரேமலா என்பவரை மணந்து இல்வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தார். அவர்களுக்கு மீனநாதன் என்ற குழந்தை பிறந்தது. இதனை அறிந்த கோரக்கர் அங்கிருந்து தன் குருவை எப்படியும் கூட்டி வந்துவிட வேண்டும் என மலையாள நாட்டை அடைந்தார். குருவைப் பார்த்து குருவே புறப்படுங்கள் நம் இருப்பிடம் செல்வோம் என்றார். வழிச்செலவிற்கு என பிரேமலா ஒரு தங்கக் கட்டியை மச்சேந்திரரிடம் கோரக்கருக்குத் தெரியாமல் கொடுத்தார்.
வழியில் எதிர்பட்டவர்களிடம் இங்கே கள்வர் பயம் உண்டோ எனக் கேட்டுக் கொண்டே சென்றார் மச்சேந்திரர். இதைக் கவனித்த கோரக்கர் குரு அறியாமல் அந்த தங்ககட்டியை எடுத்து வீசீனார். அதற்கு பதில் ஒரு செங்கல்லை வைத்தார். ஒருநாள் பையைத்திறந்த மச்சேந்திரர் செங்கல்லைக் கண்டு கோரக்கர் மீது கோபமுற்றார். என்னுடைய பொருளை கைப்பற்றிய நீ என்னுடைய சீடனல்ல. இனி நீ என்னுடன் சேராதே என்றார்.
குருவை நல்வழிப்படுத்த எண்ணிய கோரக்கர் ஒரு சிறிய மலைமீது ஏறி சிறு நீர் கழித்தார். அந்தமலை தங்க மலையானது. கோரக்கர் குருவைப்பார்த்து தங்களுடைய பொருளை எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். அறியாமையில் உலன்ற மச்சேந்திரரைப் பிடித்த மாயை விலக மனம் தெளிவு பெற்று சீடரைப் பாராட்டினார். எனினும் கோரக்கர் தனியே பிரிந்து சென்று தவம் புரிந்து அஷ்டமாசித்திகளையும் காய சித்தியையும் பெற்றார்.
கோரக்கர் திருக்கயிலை சென்றார். அங்கு எதிர்பட்ட ஒருவரை (அல்லாமாதேவர்) நீங்கள் யார் என்றார். அவர் இறந்து போகும் உடலில் பற்று கொண்டுள்ளவரை மதித்து சொல்லத்தக்கது ஒன்றுமில்லை என்றார். கோரக்கர் நான் குருவின் அருளினால் காயசித்தி பெற்றவன் என்றார். அல்லாமாதேவரோ காய சித்தி வாழும் நாளைத்தான் அதிகமாக்கும் அன்றி நிலைத்திருக்க உதவாது, இதை அழியா உடல் எனக்கூறுவது வீண் என்றார்.
வீண் தர்க்கம் வேண்டாம். இதோ நிறுபித்துக் காட்டுகின்றேன் எனக்கூறி அல்லாமாதேவரிடம் ஓர் வாளினைக் கொடுத்து உன் தோள் வலிமையால் என்னை வெட்டு என்றார். அல்லமர் வெட்ட உடலின் மீது பட்டவாள் கிண் என்ற ஒலியுடன் தெரித்தது. உடம்பில் எந்த காயமும் ஏற்ப்படவில்லை. நல்லது நீ உன் திறமையை நிரூபித்தாய். இதோ இவ்வாளினால் உன் வலிமையுடன் நீ என்னை வெட்டு என்றார்.
கோரக்கர் வெட்ட வாள் அல்லமரின் உடலில் புகுந்து வந்தது. வெட்டும்போது காற்றை வெட்டுவது போலிருந்தது. கோரக்கர் உண்மை உணர்ந்து தன்னைவிட சக்தி மிகுந்த அல்லாமாதேவரை வணங்கி தன் தவறை ஒப்புக்கொண்டான். உடம்பிலுள்ள பற்றைநீக்கி உனது உண்மை நிலையை அறிவாய் என்றார்.
கோரக்கர் வரதமேடு எனும் காட்டினுள் தவம் செய்யச் சென்றபோது பிரம்ம முனியைச் சந்தித்து நண்பர்களாயினர். இருவரும் தவம் செய்து அரிய சித்திகளை அடைந்து ஐந்தொழிலை இயக்கும் ஆற்றல்பெற யாகம் செய்யத்தொடங்கினர். யாகத்திலிருந்து இரண்டு அழகான பெண்கள் வந்தனர். அப்போது அங்கு வந்த அக்னியும் வாயுவும் அப்பெண்களை மோகித்து நின்றனர். யாகத்தை தடைசெய்த அந்த அப்பெண்கள்மேல் கோபங்கொண்டு கமண்டல நீரைத் தெளிக்க ஒருபெண் புகையிலை (பிரம்மபத்திரம்) செடியாகவும் மற்றொருத்தி கஞ்சா செடியாகவும் மோகித்த அக்னியும் வாயுவும் நெருப்பும் நீருமாக மாறி அச்செடிகளுடன் சேர்ந்தனர். சிவபெருமான் தோன்றி இறந்தவர்களை பிழைக்க வைக்கும் சக்தி உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் உண்டாக்கிய இந்த செடிகள் மூலிகைகளாகத் திகழும் என்றார்.
கோரக்கர் தான் அறிந்த ஞானங்களையெல்லாம் வெளிப்படையாகப் பாடினார். அந்த நூல்கள் தீயவர்களிடம் கிடைத்து விடக்கூடாது என்று நினைத்த சித்தர்கள் அவரது ஆசிரமத்திற்கு வந்தனர். கோரக்கர் அரிசியுடன் கஞ்சாவைச் சேர்த்து அடை செய்து சித்தர்களின் கண்ணில் படும்படியாக வைத்தார். அதனை சாப்பிட்டவர்கள் மயங்கினர். அப்போது முக்கியமான நூல்களை எடுத்து மறைத்து வைத்தார். சித்தர்கள் எழுந்து கிடைத்ததை எடுத்துச் சென்றனர்.
கோரக்கர் சந்திரரேகை, நமநாசத்திறவுகோல், ரக்ஷமேகலை, முத்தாரம், மலைவாக்கம், கற்பம், முத்திநெறி, அட்டகர்மம், சூத்திரம், வசார சூத்திரம், மூலிகை, தண்டகம், கற்பசூத்திரம், பிரம்ம ஞானம் முதலிய நூல்களை எழுதினார். கோரக்கர் வைப்பு என்பதில் சரம்பார்க்க ஆசனவிதி, சரம்பார்க்கும் மார்க்கம், போசன விதி, கருப்பக் குறியின் முறை, நாடிகளின் முறைமை முதலியன பற்றி குறிப்பிடப்பட்டுள்ளனர்.



tq
பதிலளிநீக்கு