பதினெண் சித்தர்களில் ஒருவரும்,அகத்திய மாமுனிவரின் சீடருமான ஸ்ரீ மச்ச முனிவருக்கு வரும் 16-08-2017 அன்று குரு பூஜை நடை பெற உள்ளது.
இடம்:ஸ்ரீ விஸ்வகர்மா தெக்ஷன வகுப்பு திருமண மகால்,39,பெரிய ரத வீதி,சரவண பொய்கை போகும் பாதை எதிர்புறம்,திருப்பரங்குன்றம்.
ஸ்ரீ மச்சமுனியின் அவதார வரலாறு
பிறக்கும் போதே சிவபெருமானின் உபதேசத்தோடு பிறந்தவர் என்பதால் மச்சமுனிக்கு தவயோகம் தானாகவே நேர்ந்தது. அவர் நீண்ட நெடுங்காலம் யோக வழியில் தவம் மேற்கொண்டார். அட்டமா சித்துக்கள் அனைத்தும் கைவரப் பெற்றார். ஊர் ஊராக சஞ்சாரம் செய்து வரும்போது ஓர் ஊரில், இவர் உணவு வேண்டி ஒரு வீட்டின் முன் நின்றார். இவருக்கு பிச்சையிட்ட அந்த வீட்டுப் பெண் இவரை வலம் வந்து வணங்கினாள்.அந்தப் பெண்ணனின் முகவாட்டத்தைப் பார்த்த சித்தர், என்ன காரணம் என்று கேட்டார். தனக்கு வெகு காலமாக புத்திரப்பேறு வாய்க்கவில்லை என்று தன் மனக்குறையைக் கூறி, தனக்குப் புத்திரப் பேறு அருளுமாறு அந்தப் பெண் சித்தரை வேண்டினாள். மச்சமுனி, அவளுடைய நிலைக்கு இரக்கங்கொண்டு விபூதி பிரசாதம் கொடுத்து இதனை நீ உட்கொள் என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார். இந்தப் பெண் விபூதியைப் பெற்றுக் கொண்டு தனது பக்கத்துவீட்டுப் பெண்ணிடம் நடந்தவற்றைக் கூறினாள். அவள் இந்த முனிவர் மாய வேஷக்காரன். விபூதி கொடுத்து உன்னை மயக்கி, தன்னுடன் அழைத்துக் கொண்டு போய்விடுவான் என்று கூறினாள். அந்தப் பெண் விபூதியை அடுப்பிலிருந்த நெருப்பில் போட்டுவிட்டாள். பின்பு அடுப்புச் சாம்பலை அள்ளி வீட்டின் புழக்கடையில் கொட்டிவிட்டு இந்த நிகழ்ச்சியை அறவே மறந்துபோய்விட்டாள். வருடங்கள் சில சென்றன. மச்சமுனி மீண்டும் அவ்வழியே வந்து தான் விபூதி கொடுத்த அந்தப் பெண் வீட்டின் வாசலில் நின்று அவளை அழைத்து உன் பிள்ளையை நான் பார்க்க வேண்டும், அழைத்து வா என்றார். அந்தப் பெண் உண்மையை மறைக்காது நடந்தவற்றை அப்படியேக் கூறினாள். அந்த அடுப்புச் சாம்பல் எங்கே என்று மச்சமுனி வினவ, தன் வீட்டுப் புழக்கடையில் உள்ள குப்பையைக் காட்டினாள். மச்சமுனி அந்த இடத்துக்குச் சென்று கோரக்காவா என்று குரல் கொடுத்தார். அங்கே ஓர் அதிசயம் நடந்தது. சாம்பல் குப்பையிலிருந்து, சித்தர் விபூதி கொடுத்த காலம் முதல், பிள்ளையை அழைத்த காலம் வரை உள்ள ஆண்டுகள் நிரம்பிய வயது கொண்ட சிறுவன் ஒருவன், ஏன்? என்று பதில் குரலுடன் வெளியே வந்தான். அந்தச் சிறுவனை அந்தப் பெண்ணிடம் கொடுத்தார் சித்தர். சிறுவனோ தான் மச்சமுனியையே குருவாகக் கொண்டு அவரைத் தொடர்ந்து வர விரும்புவதாகக் கூறினான். அவனைத் தன் சீடனாக ஏற்றுக் கொண்டார் மச்சமுனி. இருவரும் தம் பயணத்தைத் தொடர்ந்தனர். நீண்ட நெடுங்காலம் பாரதக் கண்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருவரும் தவம் செய்தனர்.
வட இந்தியாவில் வாழ்ந்த நவநாத சித்தர்களில் இவரும் ஒருவராக மச்சேந்திர நாதர் என்ற பெயரில் குறிக்கப்படுகிறார். மச்சமுனி இரசவாத வித்தை, வைத்தியம், வாதநிகண்டுகள் உள்ளிட்ட பல நூல்களை இயற்றியுள்ளார். இவர் தமிழ்நாட்டில் தற்போது திருப்பரங்குன்றம் வரை பெயர் கொண்ட தலத்தில், முக்தி அடைந்ததாக சொல்லப்படுகிறது. திருப்பரங்குன்றம், முருகப்பெருமானின் அருள் கூடிய அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்கும் பெருமை பெற்றது நாம் அறிந்ததே. மச்சமுனியைக் குருவாகக் கொண்ட கோரக்கரும் சித்திகள் பல அடைந்து சிறப்பு பெற்றவர்.
சித்தர் மச்சமுனி காயத்ரி மந்திரம்
ஓம் சின்மயாய வித்மஹே
ஜீவ ரட்சகாய தீமஹி
தந்நோ மச்ச ப்ரசோதயாத்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக