திங்கள், 28 ஆகஸ்ட், 2017

அகத்தியர் பிறந்த மார்கழி மாதத்தில் ஆயில்யம் நட்சத்திரம் வரும் நாளே ‘சித்தா தினமாக’ கொண்டாடப்படும்: ஆயுஷ் அமைச்சகம் அனுமதி



அகத்தியர் பிறந்த மார்கழி மாதம் ஆயில்யம் நட்சத்திரம் வரும் நாளை ‘சித்தா தினமாக’ அறிவித்து மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்திய மருத்துவ முறைகளாக ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஓமியோபதி (ஆயுஷ் - AYUSH) உள்ளன. ஆயுர்வேதா, யோகா தினங்களை மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி ஆண்டுதோறும் ஆயுர்வேதா, யோகா தினங்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. அதேபோல் சித்த மருத்துவத்துக்கு முன்னோடி யான அகத்தியர் பிறந்த ஆயில்யம் நட்சத்திரம் வரும் நாளை சித்தா தினமாக அறிவிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

அகத்தியர் பிறந்த தினம்

இதுபற்றி ஆலோசனை நடத்தி கருத்துகளைக் கேட்ட, மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம் கோரிக்கையை மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்துக்கு அனுப்பியது. இதனைத் தொடர்ந்து அகத்தியர் பிறந்த மார்கழி மாதம் ஆயில்யம் நட்சத்திரம் வரும் நாளை சித்தா தினமாக கொண்டாட மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி அகத்தியர் பிறந்த ஆயில்யம் நட்சத்திரம் வரும், ஜனவரி மாதம் 4-ம் தேதி நாடுமுழுவதும் தேசிய சித்தா தினம் கொண்டாடப்பட உள்ளது.

சிறப்பு நிகழ்ச்சிகள்

இதுதொடர்பாக சென்னை அரும்பாக்கத்தில் அறிஞர் அண்ணா இயற்கை மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையம் (மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம், ஆயுஷ் அமைச்சகம்) ஆராய்ச்சி அலுவலர் டாக்டர் எம்.கண்ணன், இணை ஆய்வர் டாக்டர் ஆர்.சைலஜா ஆகியோர் கூறியதாவது:

சித்த மருத்துவத்தை 18 சித்தர்கள் தோற்றுவித்தனர். அவர்களின் முதன்மைச் சித்தர் அகத்தியர். தேசிய சித்தா தினம் முறையாக அறிவிக்கப்படாததால், ஆண்டுதோறும் ஜனவரி 14-ம் தேதி சித்தா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது அகத்தியர் பிறந்த ஆயில்யம் நடசத்திரம் வரும் நாளை சித்தா தினமாக கொண்டாட மத்திய ஆயுஷ் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. வரும் ஜனவரி 4-ம் தேதி ஆயில்யம் நட்சத்திரம் வருகிறது. அன்றைய தினம் சித்தா தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயில்ய நட்சத்திரம் வரும் தேதி மாறுபடும். ஆண்டுதோறும் எந்த தேதியில் ஆயில்யம் நட்சத்திரம் வருகிறதோ அன்றைய தினம் சித்தா தினம் கொண்டாடப்படும். முதல் சித்தா தினம் கொண்டாட்டத்தின் முன்னோட்டமாக அகத்தியரின் சிறப்புகள், அவர்கள் சித்த மருத்துவத்துக்கு கொடுத்த பங்களிப்பு குறித்த கருத்தரங்கம் இன் றும் நாளையும் சென்னை அரும்பாக்கத்தில் அறிஞர் அண்ணா இயற்கை மருத்துவமனை வளாகத்திலுள்ள சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெறுகிறது என்றனர்.


நன்றி:தி ஹிந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக